புகுந்த வீட்டு உறவுச்சிக்கல்கள்
அந்த இளம் தம்பதியர் இப்போது இரண்டாம் முறையாக என்னை பார்க்க வந்திருந்தனர். முதலில் ஒருமுறை மனைவி மட்டும் தனியாக வந்திருந்தார். அப்போது இரு தரப்பு நியாயங்களையும் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தி கணவரையும் அழைத்து வரச் சொல்லியிருந்தேன். பொறியாளராகப் பணிபுரியும் அவரது கணவர் அப்போது வெளிநாட்டில் வேலையில் இருந்ததால் வர இயலவில்லை. அதனால், இப்போது வந்திருந்தனர்.
அந்த வெளிநாட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டாராம். கடந்த மூன்று மாதமாக கணவன் மனைவி உட்பட கூட்டுக் குடும்பமாய் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். பிரச்னை என்னவென்று கேட்டதும், பேச ஆரம்பித்தவுடன் பொலபொலவென அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர். முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புவரை முடித்து தற்போது ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார் அந்தப் பெண்.
‘எங்களுக்கென்னவோ மனசே சரியில்லை. நாளுக்கு நாள் பிரச்சனையும் கருத்து வேறுபாடும் அதிகரித்துக் கொண்டே போகிறது சார்’ - என்னை முன்பே பார்த்த அறிமுகத்தில் முதலில் வாய் திறந்தார் அந்த பெண்மணி. அடுத்த அரைமணி நேரத்துக்கு ஒரு தமிழ் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் போலத்தான் இருந்தது. அப்போதுதான் பல பட்டுப்போன பழமொழிகளின் அர்த்தம் எனக்கு புரிந்தது.
‘பிடிக்காத பொண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’ - என்று சொல்வார்கள். இந்தப் பிரச்னையில் அந்த மனைவிக்குப் பிடிக்காமல் போனவர்கள் கணவரின் அம்மா, அப்பா, ஒரு கொழுந்தனார்.
அவர்கள் இருக்கும் அந்த வீட்டில் இந்த அம்மணியால் இருப்புகொள்ள முடியவில்லை. ‘ஹாலில் மாமனார் எப்படி தெரியுமா சார், உட்கார்ந்துட்டு இருப்பார்? ஒரு பெண்ணாக நான் எப்படி அங்கு இருக்க முடியும்?’ - இது மாமனாரைப்பற்றிய அவரது குற்றச்சாட்டு.
அடுத்து கொழுந்தனார். ‘என் கொழுந்தன் இத்துணூண்டு ஷார்ட்ஸ் போட்டுட்டு வளைய வர்றாரு. நானும் ஒரு வயசு பொண்ணுதானே. எனக்கு எப்படி இருக்கும்?’ அடுத்து மாமியார். ‘அத்தை என்னை தினமும் வாசல் தெளிச்சு கோலம் போடச் சொல்றாங்க. எனக்கு எப்படி இருக்கும்?’ என்றார். எனக்கு தலைசுற்றியது. அருகிலிருந்த கணவரை ஏறிட்டேன். அவர் பேய் அறைந்தது போலிருந்தார். விரக்தியுடன் உரையாடலைத் தொடங்கினார்.
‘‘நேத்து, இன்னைக்குன்னு இப்படி இல்லைங்க டாக்டர்... கல்யாணம் நடந்த நாள்ல இருந்தே இப்படித்தான் நடந்துட்டிருக்கு. என் வீட்டு ஆளுங்ககிட்ட இவ ஒட்டவே மாட்டேங்கிறா. அவளே விலகி விலகிப் போயிட்டு, தன்னை எல்லோரும் ஒதுக்குறதா நினைச்சிக்கிறா. ஹாலில் மாமனார் உட்காந்திருந்தா அங்க நான் எப்படி இருக்கிறதுன்னு கேட்கிறா. அம்மா கிச்சன்ல இருந்தா இவ உள்ளே போக மாட்டேங்கிறா. யாரும் இவளை வர வேண்டாம்னு சொல்லவேயில்லை.
என் அம்மா, தம்பியோட வெளியே போனாக்கூட அவளால பொறுத்துக்க முடியலை. என் மொபைல் போனை ஆராய்ச்சி பண்ணி அம்மாக்கிட்ட இத்தனை நிமிஷம் பேசியிருக்க, அதைவிட குறைவா என்கிட்ட பேசியிருக்கன்னு சண்டை போடுறா. இரண்டு முறை தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை வரைக்கும் போயிட்டா. இவ ஒரு விஷயம் செய்யுறா... அதுக்கு அவங்க ஒண்ணு செய்யுறாங்க. இது ஒரு சங்கிலித் தொடர் பிரச்னையாக நீளுது. கல்யாணம் ஆகி ஆறு வருஷமாச்சு. குழந்தையும் இல்லை. அதுக்கான சிகிச்சையும் ஒரு பக்கம் போகுது.
இத்தனைக்கும் இவளை யாரும் இதுவரைக்கும் ஏன் குழந்தை இல்லைன்னுகூட ஒரு வார்த்தை கேட்டது இல்லை, ஆனாலும் பெரியவங்களை எதிரியாகவே இவ பார்க்குறா. என்ன எங்க பெரியவங்க கிராமத்து சூழல்ல வளர்ந்தவங்க. வெள்ளந்தியா இருப்பாங்க. இவங்க சிட்டி கலாச்சாரத்துல வளர்ந்திருக்காங்க. அதுக்கு என் பெற்றோர் செட் ஆகாம போயிருக்கலாம். அதுக்கெல்லாம் என்ன சார் செய்ய முடியும். இப்ப சொல்லுங்க டாக்டர், வெளிநாட்டுல நான் எப்படி நிம்மதியா வேலை பார்க்க முடியும்?’’ என்று நீண்ட பட்டியல் வாசித்தார்.
அவர் பேசிய அளவில் தெளிவாகத்தான் இருந்தார். பிரச்னைகளை அனைத்துத் தரப்பிலும் அணுகக்கூடிய விஷய ஞானத்துடன்தான் இருந்தார். இந்த இடத்தில்தான் ஒரு நெருடலை உணர்ந்தேன். ஆறு ஆண்டுகளாக அவர்களுக்கு குழந்தை இல்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். இங்கு அது தேவையில்லை. ஆனால், கணிசமான அளவு குற்ற உணர்ச்சி, ஏக்கம், நெடிய ஒரு எதிர்பார்ப்பு வீணாகி போதல் - இவற்றால் இதுபோன்ற பெண்கள் மனச்சோர்வு அடைகின்றனர் என்பதை உணர்ந்தேன்.
இதற்கிடையே என்னை இடைமறித்து, ‘நீங்க பேசுனது எல்லாம் போதும். என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. நான் தூங்கணும், அட்லீஸ்ட், இன்னைக்காவது நான் தூங்கணும் ப்ளீஸ்...’ என்று அந்தப் பெண்மணி வெடித்து அழுதபோது மேலும் பல உண்மைகள் எனக்கு புரிந்தன. ஏதேதோ முரண்பாடுகளை தன் மனதில் விதைத்துக்கொண்டு, அதிகபட்ச ஈகோவுடன் தன்னுடன் யாரும் அனுசரித்துப் போகவில்லை என்றும், அதனால் அவர்களை விட்டு விலகுகிறேன் என்றும் சொல்லி ஒரே வீட்டிலேயே யாருடனும் பேசாமல் தனக்குத்தானே ஒரு சுவரை எழுப்பிக்கொண்டு வாழ்ந்ததன் விளைவு - இன்று Major depressive disorder என்கிற மனச்சோர்வு நோய்க்கு அந்தப் பெண் ஆளாகியிருக்கிறார்.
அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தி மென்மையாகப் பேசத் தொடங்கினேன். ‘‘உன்னுடைய பிரச்னைக்கு முதல் காரணம், அன்பு இல்லாததே. உங்கள் கணவரை மட்டும் நேசிப்பீர்கள்; ஆனால், அவருடைய பெற்றோர் உனக்கு வேண்டாம். அம்மா அப்பாவுக்கு வயதான காலத்தில் உதவுவதைவிட ஒரு மகனுக்கு வேறு என்ன கடமை இருக்க முடியும்? உனக்கு ஒரு அண்ணன் இருந்து உங்கள் பெற்றோருக்கு சோறு போடாமல் விட்டால் நீங்கள் சும்மா விடுவீர்களா?
வாழ்க்கையில் எதுவும் ரெடிமேடாக கிடைக்காதம்மா... எந்தப் பிரச்னையும் அப்போதைக்கு மட்டுமே குறுக்குவெட்டாக நீ அலசுகிறாய். அந்தப் பிரச்னையின் பின்னோக்கிய நீட்சியை யோசிப்பது இல்லை. அப்படி யோசித்துப் பார்த்தால் அதற்கும் காரணம் நீயேதான் என்பதை உணர்வாய். உனது வினையே அவர்களது எதிர்வினையாகிறது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நீ ஒரு நியூக்ளியர் செயின் ரியாக்ஷனை தொடங்கிவிட்டாய். அது அணுகுண்டாய் வெடித்து உன் குடும்பம் என்னும் கோயில் இடிந்து போவதற்குள் உன்னையும் எல்லோரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது இருக்கிறது’ என்று அவரது கண்ணுக்குள் ஊடுருவிச் சொல்லி விட்டு மனதுக்கும் சேர்த்து மருந்து கொடுத்து அனுப்பினேன்.
மாமனாரையும், மாமியாரையும் அப்பா, அம்மா என்று அழைக்கும் நிறைய மருமகள்களை நிறைய பார்க்கிறோம். பெயரளவில் மட்டும் அப்படி அழைத்தால் போதுமா? அதிலும் காதல் திருமணம் செய்தவர்கள் தங்களுடனான உரசலை கொஞ்சமும் வெளியே காட்டாமல் வாழ பழகிக்கொள்ள வேண்டும். உங்கள் உறவில் லேசான உரசல் என்றாலும் ‘நாங்க அப்பவே சொன்னோம் கேட்டீயா’ என்று குத்திப் பேச இரண்டு பக்கமும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.
புகுந்த வீட்டில் ஆட்சி செலுத்துவது என்பது அழகான ஒரு கலை. அன்பால் மட்டுமே அதை சாதிக்க முடியும். போதுமான பாதுகாப்பு உணர்வை கணவர் மற்றும் அவரது பெற்றோரிடத்தில் ஏற்படுத்த வேண்டும். உங்களை அவர்கள் முழுதாக நம்பும்படியான காரியங்களை முதல் சில மாதங்களேனும் செய்து பெரியவர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.
சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் உங்கள் பிறந்த வீட்டுக்கு தெரியப்படுத்தினால் போதுமானது. இங்கு நடப்பவற்றை லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டாம். கணவனின் நம்பிக்கையும், அன்பும் கட்டிடத்தின் அஸ்திவாரம் போன்றது. எவ்வளவு பக்குவப்பட்ட மாமியாராக இருந்தாலும் லேசான உரசல்கள், வார்த்தைக் கணைகள் அவ்வப்போது வந்து விழும். ஏன், உங்கள் அம்மா சொல்வதில்லையா.
அப்படிதான் அதுவும். கண்டும் காணாமல் விட்டுப்பிடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் குடும்ப ஆட்சி உங்களுடையதாகிவிடும். மிக நெருங்கிய உறவுகளிடம் வெற்றி, தோல்வி பார்க்காதீர்கள் தோழியரே... அங்கு தோல்வி என்பதே வெற்றிதான்!
(Processing... Please wait...)
|