சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...



ஹெல்த் காலண்டர்

சர்வதேச உடல் காய தினம் (World Trauma Day)

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17-ஆம் நாள் சர்வதேச உடல் காய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தைத் தவிர்த்து ஓர் உயிரைப் பாதுகாக்க நாம் கையாள வேண்டிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

‘உலகம் முழுவதும் மரணம் மற்றும் ஊனத்துக்கான முக்கிய காரணமாக உடல் காயம் உள்ளது. சாலை விபத்து, தீ, தவறி விழுதல், பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்ற பலவீனமான மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் குற்றச்செயல் போன்ற காரணங்களால் உடலில் காயம்  உண்டாகிறது.

மற்ற எல்லா காரணங்களைக் காட்டிலும் சாலை விபத்துக்களே உலகம் முழுவதும் உடல் காயத்துக்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது. பெரும்பாலான காயங்கள் நிரந்தர அல்லது தற்காலிக ஊனத்துக்கும், அவற்றில் சில மரணத்துக்கும் காரணங்களாகின்றன. இளைஞர்களே அதிகம் சாலை விபத்துக்கு உள்ளாவதால் நாட்டின் உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் இதுபோன்ற காயங்களைத் தவிர்க்க நாம் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியம்.

வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படும் சாலை மரணங்களில் 50 சதவிகிதத்தைக் காயத்துக்குப் பின் எடுத்திருக்கக்கூடிய பலனளிக்கும் உதவிகள் மூலம் தடுத்திருக்க முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஓர் ஆய்வு. அதற்கு பின்வருவன அவசியமாகிறது.

* மருத்துவமனைக்கு முன்னான உடனடி கவனம்.
* அவசர நிலைகளைக் கையாள போதுமான அறிவு (ஆட்களுக்குப் பயிற்சி).
* மருத்துவமனைக்கு முன்னான போதுமான பராமரிப்புக் கருவிகள் மற்றும் வசதிகள் (மருத்துவ ஊர்தி, மருந்து போன்றவை) இருக்க வேண்டியது மிகவும்     அவசியம்.

நாம் செய்ய வேண்டியவை

* சாலைப் பாதுகாப்பு விதிகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

* வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையோடு செயல்படுவதோடு, போக்கு வரத்து தொடர்பான குறியீடுகளைக் கவனித்து அதை பின்பற்ற வேண்டும்.

* இரு சக்கர வாகனம் ஓட்டும்போது எப்போதும் தலைக்கவசம் அணிவது அவசியம்.

* சாலையில் கவனத்தைத் திசை திருப்பும் கைப்பேசி மற்றும் சத்தமான இசையைத் தவிர்க்க வேண்டும்.

* நீண்ட, தொடர் பயணத்தில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.

* மின் பொத்தான்கள், கம்பிகள், கூரிய பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றைக் குழந்தைகள் நெருங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

* எப்போதும் முதல் உதவி பெட்டிகளை வீட்டிலும் உங்கள் வாகனத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

* படிகள், ஜன்னல்கள், திறந்த மாடி, கூரை ஆகியவை விழுந்து விடாமல்     தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களோடு இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொள்ளலாம்.

* அடிப்படையான உயிர் காக்கும் நுட்பங்களை அறிந்து வைத்துக் கொண்டு காயம் பட்டவர்களுக்கு உதவி செய்யலாம்.

நாம் செய்யக்கூடாதவை

* களைப்பாகவோ, தூக்கக் கிறக்கமாகவோ இருக்கும்போதும், மது குடித் திருக்கும்போதும் வாகனம் ஓட்ட வேண்டாம்.

*குறிப்பாக அவசரத்தில் வாகனம் ஓட்டும்போது எந்த ஆபத்தான முயற்சிகளையும் செய்ய வேண்டாம்.

* அபாயகரமான எந்திரங்களை இயக்குவதைத் தவிர்க்கலாம்.

* தலை அல்லது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டால் விபத்து நடந்த இடத்தில் இருந்து காயம் பட்டவரை மருத்துவ வல்லுநர் உதவி இன்றி நகர்த்தக்கூடாது. அப்படி காயம் பட்டவரை நகர்த்தினால் கடுமையான முதுகு அல்லது கழுத்துக் காயங்கள் ஏற்படலாம்.

* காயத்தினால் மயக்கம் அல்லது அரைமயக்கமாக இருப்பவர்களுக்கு திரவம் எதையும் குடிக்கக் கொடுக்கக் கூடாது.

விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?

அவசர கால மருத்துவ சிகிச்சைக்குரிய தொலைபேசி எண்ணில் அழைத்து விரைவாகப் போதுமான மருத்துவ உதவியை கிடைக்கச் செய்ய வேண்டும். காயம் ஏற்பட்டவருக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். Golden hour எனப்படும் முதல் ஒரு மணி நேரத்துக்குள் காயம் பட்டவர் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். மேலும் விபத்து குறித்த விபரங்களை காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவது நல்லது.

சர்வதேச உடல்பருமன் தினம்

(World Obesity Day)

உலகம் முழுவதும் அக்டோபர் 26-ஆம் தேதி உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை எல்லோரிடத்திலும் அதிகரிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.

இன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தோற்றம் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது மிகவும் முக்கியமானது என்று கருதுகின்றனர். ஆனால் மருத்துவ நிலையில் உடல் பருமன் என்பது பல்வேறு நோய்களையும், சில சமயம் மரணத்தையும்கூட உண்டாக்குகிறது என்பதை மக்கள் அடிக்கடி மறந்து போகின்றனர். உண்பதினால் மட்டுமின்றி தவறான உணவுப் பழக்க வழக்கங்களினாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது.

உடல் எடையைக் குறைக்க சில ஆலோசனைகள்

* வறுத்த உணவைத் தவிர்த்து அதிகமாகப் பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* நார்ச்சத்து நிறைந்த முழு தானியம், பருப்பு மற்றும் முளைகட்டிய தானியங்களை உண்ண வேண்டும்.

* காய்கறிகளைப் பொரிக்காமல் நீராவியால் வேக வைத்து பயன்படுத்துவது நல்லது.

* உணவை ஒரேயடியாக அதிகமாக உண்ணாமல் சிறிய அளவில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ண வேண்டும்.

* சீனி, கொழுப்பு வகை உணவுகள் மற்றும் மதுப் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.

* தினமும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

* மின்படிகள், மின்தூக்கிகளுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம்.

* பணி இடத்தில் ஒரே மாதிரியாகத் தொடர்ந்து அமராமல் அவ்வப்போது சிறுசிறு இடைவேளைகளை எடுப்பது நல்லது.

* மெதுவாக எடையைக் குறைக்க வேண்டும். மருத்துவ காரணங்களின்றி எடை இழப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.

சர்வதேச பக்கவாத தினம் (World Stroke Day)

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தைத் தடுத்து, சிகிச்சையளிப்பது குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது மூளை தாக்குதலுக்கு உள்ளாவதே பக்கவாதம். இதனால் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்கு உயிர்க்காற்றும், சத்துக்களும் கிடைக்காததால் அப்பகுதியிலுள்ள செல்கள் மரணமடைகின்றன.

உலகெங்கும் இறப்புக்கும் ஊனத்திற்கும் முக்கிய காரணமாக உள்ள பக்கவாதம் உலகளவிலான முக்கிய சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. பக்கவாதத்தால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேரும், இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் பேரும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது புள்ளி விவரம்.

பக்கவாதத்துக்கான ஆபத்துக் காரணிகள்உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், குடும்ப வரலாறு, குடி மற்றும் புகைப்பழக்கம், சத்தற்ற உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை பக்கவாதத்தை ஏற்படுத்துகிற ஆபத்துக் காரணிகளாக உள்ளது.

பக்கவாதத்திற்கான அறிகுறிகள்கை, கால், முகத்தில் திடீர் பலவீனம் அல்லது உணர்ச்சியின்மை, பேசுவதில் சிரமம், பார்வையில் கோளாறு, நடப்பதில் சிரமம், தலைச்சுற்றல், உடல் சமநிலை இழப்பு, கடும் தலைவலி போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள். பக்கவாதத்துக்கான முதலுதவி

* பாதிக்கப்பட்டவரை ஓய்வாக அமர வைக்க வேண்டும்.
* தலையும், தோளும் சற்றே உயர்ந்து இருக்கும் வண்ணம் படுக்க வைக்க வேண்டும்.
* பதில்வினை இல்லையென்றால் நோயாளியை இடது புறமாக படுக்க வைக்க வேண்டும்.
* நாடியைச் சற்றே உயர்த்தி வைக்க வேண்டும்.
* அவசர மருத்துவ உதவியை அழைக்க வேண்டும்.
* மயக்க நிலையில் இருந்தால் மருத்துவ உதவி வரும் வரை செயற்கை சுவாசம் அளிக்கலாம்.

- தொகுப்பு: க.கதிரவன்