அழகே... என் ஆரோக்கியமே...
பிறந்த குழந்தை மற்றும் ஒரு வயது குழந்தைகளின் சரும பராமரிப்பு பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் 2 வயதிலிருந்து 10 வயது வரை உள்ள குழந்தைகளை பாதிக்கும் பொதுவான சருமம் சம்பந்தமான தொற்று நோய்கள் பற்றி காண்போம்...
குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை விரும்புபவர்கள். இதுபோல் மண்ணில் விளையாடும்போது மிக எளிதாக பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாகும். Staphylococcus aureus, Streptococcus என்னும் இந்த இரண்டு பாக்டீரியாக்களால் சருமம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. சருமம் மட்டுமல்லாமல் சருமத்தைச் சார்ந்த மேலோட்டமான திசுக்களிலும் இந்த தொற்று ஏற்படலாம். இதனை Superficial skin மற்றும் Soft tissue infections என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம்.
மேல் பகுதி சருமத்தில் Impetigo என்ற சரும நோயாகவோ அல்லது சற்று கீழே முடியின் வேர்க்கால்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலோ தொற்று ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் Folliculitis, Furuncle அல்லது Carbuncle போன்ற தொற்று வகைகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். Furuncle கொப்பளத்தில் ஒரு முடியின் வேர்கால்களில் சீழ் கோர்த்து இருக்கும்.
அருகில் இருக்கும் 2-3 முடிகளின் வேர்க்கால்களிலும் சீழ் கோர்த்து இருந்தால் அது Carbuncle. ஆரம்ப நிலையில் வைத்தியம் செய்தால் கிருமிநாசினி களிம்புகளே இந்நோயை கட்டுப்படுத்திவிடும். ஆனால், அதிகம் இருந்தால் முகத்தில் மூக்கின் மேல் அல்லது மூக்குக்கும் மேல் உதடுக்கும் இடையில் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும்.
கண்ணின் உள்பக்கம், மூக்கின்மேல், மூக்குக்கும் மேல் உதடுக்கும் இடையில் உள்ள இடம் மற்றும் மேல் உதடு இந்த இடங்களில் இவை வந்தால், முகத்தில் உள்ள ஆபத்தான இடங்களாக சொல்வார்கள். ஏனெனில், இவ்விடத்தில் உள்ள சிரை ரத்தக்குழாய்கள் மூளையில் உள்ள Cavernous Sinus-ஸில்தான் முடியும். அதனால் அவ்விடங்களில் தொற்று ஏற்பட்டால் மூளையில் பாதிப்பு ஏற்படலாம்.
பாக்டீரியாவிலிருந்து உண்டாகும் நச்சுப்பொருட்கள் குறிப்பாக குறைமாத குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டையில் ஏற்பட்ட கிருமி தொற்றுகளிலிருந்து வந்து சருமத்தைப் பாதிக்கலாம். இதை Staphylococcal Scalded Skin Syndrome என்கிறோம். இதனால் சருமம் அதிகமாக உரிந்துவிடும். குறைமாத குழந்தைகள் அல்லது 1-2 வயது குழந்தைகளால் அந்த நச்சுப்பொருளை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாததால் இது ஏற்படலாம்.
சுத்தமில்லாத மணலில் அல்லது நாய் மற்றும் பூனையின் மலம் கலந்த மணலில் விளையாடினால் அஸ்காரிஸ் என்ற நாக்கு பூச்சியின் லார்வா, முடியின் வேர்க்காலின் வழியாகவோ அல்லது வியர்வை துவாரங்களின் வழியாகவோ எந்த சிராய்ப்போ அல்லது புண்ணோ இல்லாத சருமத்தில் ஊடுருவிவிடும். அந்த லார்வாவினால் கீழ் பகுதி சருமத்துக்கு செல்ல முடியாது. மிகுந்த அரிப்பை ஏற்படுத்தும். இதற்கு Cutaneous larva migrans என்று பெயர்.
பொதுவாக ஹாஸ்டலில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு சிரங்கு ஏற்படலாம். இது Sarcoptes scabies என்ற ஒரு பூச்சியினால் ஏற்படுகிறது. இதனால் தாள முடியாத அரிப்பு ஏற்படும். கைகளில் விரல்களுக்கு இடையில், அக்குளில், தொப்புளில், பிறப்புறுப்பில் என்று உடம்பு முழுக்கவே மிகவும் அரிக்கும். இதை 7 வயது அரிப்பு என்றும் அழைப்பர். இதற்கு ‘தற்கொலை அரிப்பு’ என்றும் பெயர் உண்டு. பள்ளியில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது வரலாம்.
இதேபோல் ‘பேன்’ தொல்லையும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு பெரும் தலைவலி. அருகருகே இருக்கும் குழந்தைகள் எளிதாக பாதிக்கப்படுவர்.இந்த சிரங்கு மற்றும் பேன் தொல்லை இரண்டுக்கும் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மட்டும் சிகிச்சை அளித்தால் போதாது.
வீட்டில் உள்ள அனைவரும் மற்றும் ஒரே வகுப்பில் உள்ள அனைவரும் சேர்ந்தே வைத்தியம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வராமல் இருக்கும். பூஞ்சைகளின் பாதிப்பால் உடலில் ஏற்படும் Tinea capitis என்ற நோய் மிகவும் முக்கியமானது. இது குறிப்பாக, தலையில் அதிகம் உண்டாகும். இந்த Tinea capitis நோயில் பல வகைகள் உள்ளன.
அதில் ஒருவகையாக தலையில் அங்கங்கே சொட்டை ஏற்படலாம். அவ்விடத்தை உற்று நோக்கினால் செதில் செதிலாக இருக்கும். இன்னொரு வகையில் தலையில் சீழ் கோர்த்துக் கொள்ளலாம். மருத்துவத்தில் ஒரு பழமொழி உள்ளது. ‘எங்கெல்லாம் சீழ் உள்ளதோ அதை எடுத்து விடவும்’. ஆனால், இந்த பழமொழி இந்த இடத்தில் மட்டும் செல்லாது. இதற்கு Antifungal - பூஞ்சையை எதிர்க்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
வைரஸ் நோய்களில் பாலுண்ணியும், வார்ட்டும் குழந்தைகளை அதிகம் தாக்கும். பாலுண்ணி பிரச்னையை Molluscum contagiosum என்கிற பாலுண்ணி பிரச்னை பல மாதங்கள் கழித்து தானாகவே சரியாகி விடலாம். அதிகமாக இருந்தால் மருத்துவர் உதவியை நாட வேண்டும். Human papilloma என்னும் வைரசால் வார்ட் ஏற்படுகிறது. மிகச்சிறிதாக இருக்கும்போதே ‘வார்ட் பெயின்ட்’ உபயோகப்படுத்தியோ அல்லது Cryotherapy சிகிச்சை மூலமோ வார்ட் கொப்பளங்களை நீக்கிவிடலாம். அதிகமாக வரும்போது அறுவை சிகிச்சை தேவைப்படும்.
இவையெல்லாவற்றையும் தடுக்க சில அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றுவது முக்கியம். குழந்தைகளின் நகங்களை சுத்தமாக வைத்திருப்பது, விளையாடிய பின் கை, கால்களை சுத்தமாக கழுவ பழக்கப்படுத்துவது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க கற்றுக் கொடுப்பதன்மூலம் எந்த நோய்த்தொற்று வந்தாலும் அதை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட முடியும்.
( ரசிக்கலாம்... பராமரிக்கலாம்... )
|