அன்று: பல நிறுவனங்களில் ஊழியராகப் பணியாற்றியவர் இன்று: தமிழ் பிராண்டர்ஸ் நிறுவன உரிமையாளர்



* வெற்றிக்கதை

உங்கள் கனவுகள் மீது எப்போதும் தீராத வெறியை கொண்டிருங்கள். ஏதேனும் ஒரு செயலில் கவனத்தை குவியுங்கள். குறை காண்பதால் பயன் இல்லை. உங்களை வளர்க்க கற்றுக்கொண்டே இருங்கள். புறக்கணிப்பை பயன்படுத்துங்கள். உங்கள் கனவு வெற்றியடையாது என்று யார் கூறினாலும், ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் கனவை என்றும் உயிர்ப்புடன் வைத்திருங்கள். அப்போதுதான் வெற்றியாளராகமுடியும். அந்தவகையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து இன்றைக்கு பலருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு வெற்றியாளராக தமிழ் பிராண்டர்ஸ் என்ற டிஜிட்டல் நிறுவனத்தை உருவாக்கி உயர்ந்திருக்கும் இளம் தொழில்முனைவோரான கௌதம் ராஜ் தனது வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.



‘‘மனிதராகப் பிறந்த நம் எல்லோருக்குமே ஏதாவது ஒரு துறையில் நாம் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்துகொண்டேயிருக்கும். அதுபோன்றதுதான் என்னுடைய கதையும். நான் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம். அப்பா கடைநிலை அரசு ஊழியர். அம்மா குடும்பத் தலைவி. ஒரு தங்கை. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் என்னென்ன பிரச்னைகள் இருக்குமோ அதையெல்லாம் நாங்கள் சந்தித்துவந்தோம். கடன், பொருளாதாரச் சிக்கல் என நகர்ந்தது. சிறு வயதிலிருந்தே நாம் பெரிய அளவில் சாதிக்க வேண்டும், குடும்பத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் இருந்துவந்தது.
அம்மாவுக்கு டெய்லரிங், பிரின்டிங் போன்றவற்றில் அதிக ஆர்வமும் திறமையும் இருந்தது. அதனால், அம்மா ஒரு பிரின்டிங் தொழிலைத் தொடங்கினார்கள். அப்போது, அத்தொழிலுக்கு நானும் எனது தங்கை மற்றும் அப்பா என எல்லோரும் சேர்ந்து பங்களித்தோம். தொழில் நல்லபடியாக நடைபெற்றது. எங்களுடைய வாழ்க்கைத்தரமும் ஓரளவுக்கு உயர்ந்தது. அப்படியென்றால், வேலை செய்வதைவிட ஒரு தொழில் தொடங்கினால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பது தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.



ஒரு தொழில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சந்தையில் நிலவும் சூழ்நிலையால் அதில் உயர்வும் தாழ்வும் வரும். அந்த மாதிரிதான் தொழிலில் ஒரு இறக்கம் ஏற்பட்டது. நாங்கள் ஒரு சாதாரண குடும்பம் என்பதால் எங்களிடம் அதிகமான முதலீடு கையிருப்பு இல்லை. மேலும், தொழில் குறித்த அனுபவ அறிவு பெரிய அளவில் இல்லாததால் தொழிலில் பிரச்னைகள் வந்தபோது அதைச் சமாளித்து நடத்த முடியவில்லை. அதனால் தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதுவரை சம்பாதித்தது எல்லாமே நஷ்டமாகிவிட்டது. அப்போது முடிவு செய்தேன், தொழில் செய்யவேண்டுமானால், அதை திட்டமிடலோடு செய்யவேண்டும்.’’ என்றவர் கல்வியிலும் சுயதொழில் தொடங்குவதிலும் தனக்கிருந்த ஆர்வத்தையும் விவரிக்கலானார்.

‘‘எங்களுக்கு நல்லதொரு கல்வியைக் கொடுத்துவிடவேண்டும் என்பதே எங்கள் அப்பாவின் நோக்கமாக இருந்தது. அதனால் எங்கள் பகுதியில் (கொளத்தூர்_சென்னை) இருந்த ஒரு தனியார் பள்ளியில்தான் படித்துவந்தேன். அதன்பின் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அங்கு சென்றுவந்தபோது புதிய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொண்டேன். சிறு வயதிலிருந்தே நன்றாக படிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஏனெனில் நம்மிடம் இருக்கும் ஒரே சொத்து படிப்பு மட்டும்தான், அதுதான் நம்மை ஒரு பெரிய இடத்திற்கு கொண்டுபோகும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் 92% மதிப்பெண் பெற்றேன். எஞ்சினியரிங் படித்துவிட்டு அது தொடர்பான ஒரு பிசினஸ் செய்யவேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. மெரிட்டில் சீட் கிடைத்தது.

மெரிட்டில் சீட் கிடைத்தாலும் பேங்க் லோன் எடுத்துதான் படிக்க முடியும் என்ற குடும்பச் சூழ்நிலை இருந்தது. எஞ்சினியரிங் படிக்கும்போது நல்ல நண்பர்கள், ஆசிரியர்கள் கிடைத்தார்கள். படித்து முடித்ததும், அங்கேயே நடைபெற்ற பிளேஸ்மென்ட்டில் சுமார் ஐந்து கம்பெனிகளிலிருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனால், எனக்கு வேறு ஒரு லட்சியம் இருந்தது. அது ஒரு பெரிய நிறுவனம் தொடங்க வேண்டும், ஒரு தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்பதுதான். நேரடியாக ஒரு தொழிலைத் தொடங்கி தொழில்முனைவோர் ஆகவேண்டுமென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால், என் அம்மாவின் முயற்சியோடு ஒரு சிறிய தொழில் ஆரம்பித்து அதில் எப்படி தோல்வியடைந்தோமோ அதேபோன்ற தோல்வி ஏற்படுமோ என்ற பயம் வந்தது. அதனால் ஒரு கம்பெனி எப்படி செயல்படுகிறது? எப்படி நிர்வகிக்க முடிகிறது? என்ற அனுபவம் பெற வேண்டும் என்பதற்காகவே ஒரு வேலைக்கு கண்டிப்பாக போக வேண்டும் என ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஒரு கம்பெனியில் ஊழியராகச் சேர்ந்து பணியாற்றியபோதுதான் ஒவ்வொரு கம்பெனிக்குமே ஒரு மார்க்கெட் டார்கெட் இருக்கிறது, புராடக்ட் உருவாக்குவது மட்டும் முக்கியம் கிடையாது, மக்களிடம் கொண்டுபோய் எப்படி சேர்க்க வேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொண்டேன். அப்படி நான் சென்று சேர்ந்த ஒவ்வொரு கம்பெனியிலும் உயர் பதவியில் இருந்தவர்கள் என்னுடைய திறமையைக் கண்டு ‘நீ ஒருநாள் உயர்ந்த நிலைக்கு வருவாய்’ என உத்வேகம் அளித்தார்கள். நமக்குள்ளும் ஒரு திறமை மறைந்திருக்கிறது அதை மற்றவர்கள் தெரிந்து சொல்கிறார்கள், என்பதை உணர்ந்து அதை வெளிப்படுத்த புதிது புதிதாக கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். இந்த நேரத்தில் டெல்லியில் சென்று வேலை செய்வதற்காக ஒரு வாய்ப்பு கிடைத்தது.

சிறு வயதிலிருந்தே நான் சென்னையை விட்டு வெளியே சென்றதே கிடையாது. வீட்டைவிட்டு, பெற்றோர்களை விட்டு வெளியில் இருக்கவேண்டும் என்பது ஒரு பிரச்னையாகத்தான் இருந்தது. இருந்தாலும் இந்த பெரிய வாய்ப்பை நழுவவிடக்கூடாது என புறப்பட்டேன். அந்த கம்பெனியில் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. கம்பெனியில் நடக்கும் எல்லா வேலைகளிலும் நான் ஈடுபட்டதால் முழுமையாக செயல்பட முடிந்தது. இப்படி இருக்கும்போது, ‘நாமே ஏன் ஒரு கம்பெனி வைக்கக்கூடாது?’ என்று தோன்றியது. நம்மிடம் என்ன திறமைகள் உள்ளன? என்பதையெல்லாம் ஒரு டைரியில் எடுத்து எழுத ஆரம்பித்தேன்.

எஞ்சினியரிங் படித்துள்ளதால் டிஜிட்டலில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். டேட்டா  அனாலிட்டிக்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எல்லாமே வேலை செய்யும்போது கற்றுக்கொண்டுள்ளோம், அவை அனைத்தையும் ஒரு நிறுவனத்தின் தொழிலிலும் பயன்படுத்தியிருக்கிறோம். இதற்குமேல் நாம் எதற்கு வேலை செய்ய வேண்டும்? நாமே ஒரு கம்பெனியை தொடங்கலாமே என முடிவெடுத்தேன்.’’ என்றவர் தனக்கான சுயதொழிலை தேர்வு செய்து வெற்றி கண்டதை பெருமிதத்தோடு தெரிவித்தார். ‘‘சுயமாக தொழில் தொடங்க முடிவெடுப்பது அவ்வளவு சுலபமில்லை, ஏனெனில் நல்ல சம்பளம், நல்ல வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு ஒருவர் வேலையிலிருந்து விலகுவது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவேன். ஆனால், இந்தச் சூழ்நிலையில் ரிஸ்க் எடுக்கவில்லையென் றால், பிறகு எப்போது எடுப்பது என முடிவெடுத்து வேலையை விட்டு சென்னைக்கு வந்தேன். நண்பர்களோடு பேசினேன், பிராண்டிங் கம்பெனியைத் தொடங்கினேன். சிறு நிறுவனங்கள் எப்படி தங்கள் கம்பெனியை பிராண்டிங் செய்வது என்பதை என்னுடைய டிஜிட்டல் டெக்னாலஜியால் அவர்களுக்கு உதவ முடியும் என்பது என் நோக்கமாக இருந்தது. நிறையபேருக்கு அது தேவைப்பட்டது. ஏனெனில், நிறைய கம்பெனிகளுக்கு ஒரு பொருளை உருவாக்க தெரிகிறது, அதே நேரத்தில் அதை எவ்வாறு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது, எப்படி தொழிலை இன்னும் வளர்ச்சியடைய செய்வது என்பது தெரியாமல் உள்ளது. அந்த வேலையை நாம் நல்ல முறையில் செய்ய முடியுமே என்பதால்தான் ‘தமிழ் பிராண்டர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கினேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிராண்டிங் சொல்யூஷன்ஸ், வெப்சைட் கிரியேட் செய்வது என வேலையை ஆரம்பித்தேன். இன்றைக்கு ஏராளமான தொழில்களுக்கு இந்த பிராண்டிங் செய்துகொடுத்து வருகிறேன். தொழிலும் வளர்ந்துள்ளது. நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நிலை மாறி இன்றைக்கு நிறையபேர் என்னிடம் வேலை செய்யும் நிலை உருவாகியுள்ளது. பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு நிறுவனமாக வளர்த்துள்ளேன். இது ஒரு சிறு ஆரம்பம்தான். இன்னும் சில ஆண்டுகளில் எனது லட்சியம்போல் மிகப் பெரிய நிறுவனமாக வளர்த்து ஃபோர்ப்ஸ் கட்டுரையில் (Forbes Magazine) 30 வயதுக்கு உட்பட்ட 30 தொழில்முனைவோர்கள் பட்டியலில் வரவேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்’’ என்கிறார் தளராத தன்னம்பிக்கையோடு கௌதம் ராஜ்.
- தோ.திருத்துவராஜ்