10ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசின் அவசர முடிவும் மாணவர்களின் நிலையும்..!



* சர்ச்சை

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகெங்கும் பரவி உயிர்களைக் கொத்துக் கொத்தாய்ப் பறித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்த ஆபத்தான சூழலில்தான் தமிழ்நாடு அரசு இருவேறு நிகழ்வுகளில் அவசரகதியில் முடிவை எடுத்திருக்கிறது. இருவேறு நிகழ்வு என்பதில் ஒன்று மதுக்கடை திறத்தல் மற்றொன்று பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை விரைவாக நடத்தி முடித்தல் என்பதாகும்.



கடந்த மார்ச் 24ம் தேதியுடன் +2 தேர்வுகள் முடிந்த நிலையில் +1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்  பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் +2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, +1 தேர்வு ஒன்று, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது. இதனால், மீண்டும் தேர்வுகள் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது.இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள +1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும். +1 வகுப்புக்கான தேர்வில் மார்ச் 26ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் அந்தத் தேர்வு ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். அதேபோல போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் 12ம் வகுப்பு மாணவர்கள் 34,842 பேர் 24ம் தேதியில் நடந்த தேர்வை எழுத முடியாமல் போனது.அவர்களுக்கு மறு தேர்வு ஜூன் 4ம் தேதி நடத்தப்படும். +2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, தேர்வைத் தள்ளிவைக்க தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பின் எதிரொலியாக மீண்டும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைத் தேர்வு தேதியை ஒத்திவைத்து, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும். எஞ்சிய +1 தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் +2 மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…

‘‘தமிழக அரசு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அவசரம் காட்டுவது ஒரு பக்கம் இருக்க மாணவர்கள் நலன் என்ற அடிப்படையில் கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பல்வேறு அரசியல் தலைவர்களும் தேர்வினைக் கட்டாயம் நடத்தவேண்டும்; ஆயினும் தேர்வின் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதோடு சில முக்கிய கேள்விகளையும் அரசின் பார்வைக்கு வைத்தனர்.

 எழுப்பப்பட்டிருக்கும் சில வினாக்கள்
1 .கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் 24.03.2020 அன்று, முழுப் போக்குவரத்தினை அரசு அனுமதித்தபோது 10,11,12 வகுப்புகளில்  பயின்றுகொண்டிருந்த மாணவர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் குடும்பத்தோடு பயணித்து இன்றுவரை திரும்பமுடியாமல் உள்ளனர். ஜூன் 30ஆம் தேதி வரை பொதுப்போக்குவரத்து இருக்காது என்ற நிலையில், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிற ஜூன் முதல் தேதி, மாணவர்கள் வர இயலாது. அப்படியே வர ஏற்பாடு செய்தாலும் மாணவர்கள் மட்டும் வர இயலாது. ஆகையால் அவர்களின் குடும்பத்தோடு திரும்பவேண்டும். அனைவரும் ஊர் திரும்ப அரசு, கட்டணமின்றிப் பேருந்து வசதி செய்யுமா?
3. குடும்பத்தோடு மாவட்டம்விட்டு மாவட்டம் வரும்போது அவர்கள் மூலம் நோய்த் தொற்று பரவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா அல்லது தேர்வு எழுதச் செல்வார்களா?
4. மாணவர்கள் ஒருவேளை வர இயலாமல் போனால் அவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா?
5. வளர் இளம்பருவ மாணவர்கள் தேர்வு நாட்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவோ, தேர்வு தொடங்கும்போதும் முடியும் போதும் கூட்டமாக வருவதை, செல்வதைத் தவிர்க்கவோ இயலுமா?
6. ஒரு மாணவனுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால்கூட அதற்கு அரசு பொறுப்பேற்குமா?
7.பள்ளிகள், நோய்த் தொற்று உள்ளவர்களைத் தங்க வைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதே இப்பள்ளிகளைத் தேர்வு மையமாக மாற்றக் கால இடைவெளி வேண்டாமா?
8. நாடு முழுதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளியைத் திறந்து 15 நாட்களில் அனைத்து மாணவர்களின் வருகையை உறுதிசெய்த பிறகு தேர்வை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளதாக அரசு கருதுகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை அரசு பரிசீலனைக்கு உட்படுத்தி தேர்வு நடத்தும் நாட்கள் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிடவேண்டும் என்பது வேண்டுகோளாக வைக்கப்பட்டது’’ என்றவர் இதற்கான சில தீர்வுகளை அரசு கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘‘ஆசிரியர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு முன்பே பள்ளிக்கு வந்துவிட வேண்டும். அவர்கள் பெயர், பதவி, தொடர்பு எண், முகவரி, ஆசிரியரோ அவர்தம் குடும்பத்தில் யாராவது நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்களா என்ற விவரங்களோடு மாணவர்களுக்கும் இவ்விவரங்களும் அதோடு இவர்கள் வாழுமிடம் பாதுகாக்கப்பட்ட மண்டலமா, பள்ளி தூரம், வாகன விவரம், பெற்றோர் புலம்பெயர் தொழிலாளரா, மாவட்டம் தாண்டிச் சென்றுள்ளனரா என்ற விவரங்களும் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கூட்டத்தைத் தவிர்க்க தேர்வு மையங்கள் இருமடங்காக ஆக்கப்பட்டுள்ளன. தேர்வறையில் தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை 20-லிருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மண்டலங்களில் தனித் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுதும்போது மாணவர் பாதிக்கப்பட்டால் மாற்று மையம் அமைக்க அருகிலுள்ள திருமண மண்டபம் / கிராமப் பொது இடம் / அரசுக் கட்டடங்கள் உள்ளதையும் முன்அனுமதியும் வாங்க, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.இவர்களுக்கெனப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும் எனவும், மாணவரோடு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. கட்டணம் செலுத்தவேண்டுமா எனத் தெரியவில்லை / தேர்வு எழுத இயலாமற் போகும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் எனவும் செய்தி வருகிறது.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உணவுடன் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.தேர்வு மையங்களில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிக்க உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.’’ என்றவர் தனித்தேர்வர்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் மாணவர் மனநிலை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதையும் விவரித்தார்.‘‘ஏறத்தாழ இரண்டு மாதங்களாகச் சரியான உணவின்றி, ஊட்டச்சத்து இல்லாமல் வீட்டிலேயே முடங்கி உளவியல் சார்ந்து ஊனமுற்றுப்போய் இருக்கும் மாணவர்களை நேராகத் தேர்வு எழுத மையத்துக்கு வரச் சொல்வதில் என்ன நியாயம் உள்ளது.

இன்றுவரை கடைகள் திறக்கப்
படாத பகுதியில் உள்ள மாணவர்கள் பேனா பென்சில் போன்ற பொருட்கள்கூட வாங்க இயலாமல் உள்ளார்களே அவர்கட்கு என்ன செய்யப்
போகிறோம்?மேலும் 15 வயது மாணவர்களுக்கு தற்போது நடக்கும் பிரச்னையின் முழு விவரமும் தெரிய வாய்ப்பில்லையென்றாலும், தன்னைச் சுற்றி ஏதோ மோசமான சூழ்நிலை நிலவுவதை அவர்கள் உணர்ந்துகொண்டிருப்பார்கள். கடந்த 60 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பால் ஏற்படக்கூடிய மரணங்கள் குறித்து ஊடகங்கள் முதல் உறவினர்கள் வரை பேசப்பட்டு வருகின்றது. எனவே, மாணவர்கள் இயல்பான மனநிலையில் இருக்க மாட்டார்கள். பெரியவர்களுக்கே மன உளைச்சல் ஏற்படும் நிலையில் அவர்களிடையே அச்சம் பீதி இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால், மாணவர்களுக்கு படிப்பதிலும், தேர்வு எழுதுவதிலும் முழு கவனம் இருக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாக முழு திறனையும் தேர்வில் காட்ட முடியாது.

அரசுப் பள்ளிகளில் வசதி படைத்த வீட்டிலிருந்து வரும் மாணவர்களைவிட, அன்றாட வாழ்வை நடத்த போராடும் குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களே அதிகம். சாதாரண குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் பல்வேறு மனரீதியான தாக்கத்திற்கு ஆளாகியிருப்பார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்வு தானே, எழுதிவிட்டு செல்லட்டும் என்ற கண்ணோட்டத்தில் அரசு பார்க்கக்கூடாது.அரசுக்கு அப்படி என்ன ஓர் அவசரமோ? பள்ளி திறந்து 10 நாட்கள் கழித்துதான் தேர்வு நடத்தினால் குடியா மூழ்கிவிடும்? அரசு மாணவர்களின் நிலையைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்‘‘ என்கிறார் முருகையன் பக்கிரிசாமி.

அரசுப் பள்ளியின் நிைலமை இப்படி இருக்க தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்த
குமார், ‘அனைத்துவித பள்ளிகளையும் ஜூலை 1 முதல் திறந்து சுழற்சி முறையில் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் 10 முதல் 15 மாணவர்களை அமர வைத்து, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து வரவும் மாணவர்களை அறிவுறுத்தலாம்.’ என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.​ 

  - தோ.திருத்துவராஜ்