உன்னதமான செயல்தான் உங்களை உயர்த்தும்!



* இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்

வாழ்க்கையில் வெற்றி என்பது ஒரே நாளில் யாருக்கும் கிடைப்பதில்லை. ஒருவர் செய்கின்ற சிறிய சிறிய செயல்களில் கிடைக்கும் சிறிய சிறிய வெற்றிகள்தான் ஒரு காலகட்டத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தருகின்றன. ஒருவர் செய்யும் செயல் அவருக்கு மனநிறைவையும், மனமகிழ்ச்சியும் தருகிறதென்றால் நிச்சயமாக அந்தச் செயல் நற்செயலாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் நல்ல செயல்களை அடையாளம் கண்டு அதை நடைமுறைப்படுத்த இளமைக்காலம் முதல் ஒருவர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அத்தகைய மனிதரை இந்த உலகம் வெற்றியாளராகப் பார்க்கிறது.



அது ஒரு காலை நேரம் கடற்கரையின் மணற்பரப்பில் ஒருவர் நடந்துகொண்டிருந்தார். கடல் அலைகள் வேகமாகக் கரைக்கு வரும்போது, அந்த அலைகளோடு சேர்ந்து சில நட்சத்திர மீன்கள் கடற்கரையில் ஒதுங்கின. கடலை நோக்கி அலை உள்ளே செல்லும்போது ஒருசில மீன்களைக், கடலுக்குள் அலை இழுத்துச் சென்றன. ஆனால், நட்சத்திர மீன்களில் சில கடலுக்குள் செல்ல இயலாமல் கரையில் ஒதுங்கி, சூரிய ஒளியில் தவித்தன. உயிருக்குப் போராடிய நட்சத்திர மீன்களைப் பார்த்த அவர், அந்த மீன்களில் சிலவற்றை எடுத்து கடல் நீருக்குள் விட்டார். மீண்டும் அலைகள் கரைக்கு வரும்போதெல்லாம் சில நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கத் தொடங்கின. பொறுமையாக அந்த மீன்களை மீண்டும் மீண்டும் எடுத்து கடல்நீரில் விட்டார் அந்த மனிதர். இவரின் விநோத செயலை அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

அவரைக் கவனித்த வழிப்போக்கர் அருகில் சென்று, ‘‘நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? கடலிலிருந்து நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் பெரிய அலையால் கரையில் ஒதுங்குகின்றன. அந்த நட்சத்திர மீன்கள் அனைத்திற்கும் உங்களால் உதவ முடியுமா? ஒருசில நட்சத்திர மீன்களை மட்டும் காப்பாற்றுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேட்டார். தன்னைப் பின்தொடர்ந்தவர் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்தார் அவர். மேலும் இரண்டு, மூன்று அடிகள் தூரம் முன்நோக்கி நடந்தார். மீண்டும் சில நட்சத்திர மீன்களை எடுத்து கடல் நீருக்குள் விட்டார். நட்சத்திர மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பிய அந்த மனிதரின் சிந்தனை சற்று வித்தியாசமாக அமைந்தது. “என்னால் ஒரு மீனின் உயிர்காக்கப்படும் என்றால், அது மகிழ்ச்சியான விஷயம். கடலிலுள்ள அத்தனை மீன்களின் உயிர்களையும் காக்க வேண்டுமென்றால், அது என்னால் முடியாது. ஆனால், கரையில் ஒதுங்கிய மீன்களில் ஓரிரு மீன்களையாவது உயிருடன் காத்தது எனக்கு முழு மன திருப்தியைத் தருகிறது”என்று சொல்லிக் கொண்டே மீண்டும் நட்சத்திர மீன்களை எடுத்து கடல் நீருக்குள் அனுப்பினார் அவர். இதனால், அவருக்கு மன திருப்தியும், மன மகிழ்ச்சியும் கிடைத்தது.

இந்த உலகில் அப்படிப்பட்ட அபூர்வமான மனிதர்கள் சிலரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால் ஆச்சரியமான தகவல்கள் பல அவர்களிடமிருந்து கிடைக்கின்றன. அவை இந்த சமூகத்தின் நல்ல மாற்றங்களை உருவாக்கும் மனிதாபிமானமிக்க செயல்களாகவும் இருக்கின்றன. அப்படிப்பட்ட வியப்பிற்குரியவர்தான் கோவையில் பிறந்து சென்னையில் வாழ்ந்துவரும் மீனாசாப்ரியா.சிந்தி இனத்தைசேர்ந்த மீனா பிறந்து வளர்ந்ததெல்லாம் கோவையில் இவரது வாழ்க்கையே வித்தியாசமானதாக இருக்கிறது. இவர்களுடைய சமூகத்தில் பெண்களை சுதந்திரமாக வளர்ப்பார்கள். அப்படி வளர்க்கப்பட்டவர்தான் மீனாவும். தேவையற்ற எந்த கட்டுப்பாட்டையும் விதிக்காமல் இளம் வயதிலே சுயமாக முடிவெடுக்க பெற்றோர்கள் மீனாவை ஊக்கப்படுத்தினார்கள். ஆனால், யாருக்கும் எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காமல் வாழவேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையைக் கடைப்பிடிக்க கற்றுக் கொடுத்தார்கள்.

மீனா பள்ளியில் படிக்கும்போதே அவருடைய அப்பா அவரையும் தம்பி மற்றும் தங்கையையும் வாரந்தோறும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ளவர்களோடு பொழுதைச் செலவிட ஊக்கப்படுத்துவார். அதனால் இயல்பாகவே மீனாவுக்குப் புறக்கணிக்கப்பட்டவர்களோடு நெருக்கமாகிக்கொள்ளும் மனப்பக்குவம் இளம்வயதிலேயே வந்துவிட்டது. சிறுவயதிலே அதிகாலை ஐந்து மணிக்கு மீனா எழுந்துவிடுவார். ஏழு மணி வரை அனைத்து வீட்டு வேலைகளையும் பார்த்துவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்வார். பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். அதனால் அத்தனை விளையாட்டுப் போட்டிகளிலும் சாம்பியனாகத் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரி படிப்பில் தனக்கு மிகவும் பிடித்த மனோதத்துவப் படிப்பை விரும்பி படித்தார்.



மீனாவிற்கு 18 வயதாக இருக்கும்போது உறவினர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ள கோவையிலிருந்து சென்னைக்கு மீனாவும் அவரது தந்தையும் சென்றார்கள். அந்த விழாவில் ஓர் இளைஞரை சுட்டிக்காட்டிய உறவினர்கள், அவர் ரொம்ப நல்ல பையன் என்றார்கள். உடனே மீனாவின் தந்தை அவரை திருமணம் செய்துகொள் என்று சொல்ல, அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கேயே மீனாவுக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு திருமணம் முடிந்து சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆனால், சில வருடங்களில் கணவருடன் கருத்துவேறுபாடு எழுந்தது. இந்த நிலையில் இருவரும் பேசி வலியின்றி பிரிந்தார்கள். யாருக்கும் வலியைக் கொடுக்கக்கூடாது. வலியை
கொடுப்பது வாழ்க்கையில்லை மகிழ்ச்சியுடன் வாழ்வதே வாழ்க்கை என்ற நம்பிக்கையில் மீனா கணவரைப் பிரிந்தபோது அவருடைய தாய் உன் வாழக்கையே போச்சு என்றார். ஆனால், மீனா மனம் தளரவில்லை. இனிதான் என் வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். பின்பு மழலையர் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். அதன்பிறகு பல இடங்களில் பணிபுரிந்து தனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டது மட்டுமில்லாமல் நான்கு மொழிகளையும் கற்றுக்கொண்டார். அவருடைய அறிவு மற்றும் திறமையின் பலனால் தற்போது மிகப் பெரிய நிறுவனமான பி.வி.ஆர். தியேட்டர் குழுமத்தின் தென்னக விற்பனைப் பிரிவு தலைமை நிர்வாகியாக மிகப் பெரிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

படிப்பது, உழைப்பது, நன்றாக சம்பாதிப்பது, ஜாலியாக செலவிடுவது மட்டுமே வாழ்க்கையில்லை என்று முடிவு செய்த மீனா, இந்த சமூகத்தில் நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும் என்று முடிவெடுத்து ஒரு மகத்துவமிக்க செயல் செய்துவருகிறார். முதியோர்களைப் புறக்கணிக்கும் சமூகத்தில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பெற்று வளர்த்த பிள்ளைகளாலும் உற்றார் உறவினர்களாலும் ஒதுக்கப்படும் அவர்கள் முதியோர் இல்லங்களைத் தேடிப்போகும் நிலை உள்ளது. அங்கும் அவர்கள் முழு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களென்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. அப்படி புகலிடம் தேடிய இரண்டு மூதாட்டிகளை முழுமனதோடு ஏற்று, தன் வீட்டில் அவர்களைத் தங்க வைத்து, அவர்களது அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் மீனா. இவர் குடும்பத்தோடு வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும்போதும் இந்த முதியோர்கள் இருவரையும் தங்களோடு அழைத்துச் செல்கிறார்.

அவர்கள் இரண்டு பேரின் பெயரும் லட்சுமிதான் ஒருவருக்கு 77 வயது, இன்னொருவருக்கு 70 வயது. மூத்தவரை சீனியர் லட்சுமி என்றும் அடுத்தவரை ஜுனியர் லட்சுமி என்றும் அழைக்கிறார். அவர்கள் வீட்டில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். அவர்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து பராமரித்து வருகிறார் மீனா. இந்த இரண்டு முதியோர்களும் மீனாவின் மகளுக்கு தோழிகள் போல இருந்துவருகிறார்கள். இந்த முதியவர்களை பராமரிக்க மாதம் முப்பது ஆயிரம் ரூபாய் ஒதுக்கிவைத்து அவர்களுக்கு எந்த குறையுமில்லாமல் பார்த்துக்கொள்கிறார் மீனா. ஆனால், அந்த செலவை ஒருபோதும் மீனா கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் இவர்களை எனக்கு கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் என்கிறார் மீனா. புறக்ணிக்கப்பட்ட முதியோர்களை பராமரித்து மனிதாபிமானத்தை காட்டுவதுதான் உண்மையான வாழ்க்கை.

வாழ்க்கையில் இதோ இந்த நிமிடம் மட்டும்தான் நம் கையில் இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் பணத்தை மட்டும் சேர்த்து வைத்து பலனில்லை. என்னுடைய பிள்ளைகள் இருக்கிறார்கள், நான் எப்போது வேண்டுமானாலும் கண் மூடலாம். அப்போது என் பிள்ளைகளுக்கும் இப்படிப்பட்ட ஒரு அடைக்கலம் அமையும் என்பது என் நம்பிக்கை என்கிறார் மீனா. மேலும் தன்னுடைய பிள்ளைகள் இந்த முதியோர்கள் மூலம் எங்கேயும் யாருக்கும் கிடைக்காத மிகச்சிறந்த அனுபவங்களும் பொறுமையும் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறார் மீனா.
அவருடைய வாழ்வில் நடந்த மற்றொரு மனிதாபிமான செயல் என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்பு மீனா பெங்களூருவில் தனது பணிகளை முடித்துவிட்டு அலுவலக நண்பர்களோடு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் விபத்து ஒன்றைப் பார்த்திருக்கிறார். விபத்து நடந்த அந்த இடத்தை சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடி படம் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஜித் என்ற 21 வயது தர்மபுரி இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு தேவையான மருத்துவச் செலவுகளை செய்து, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். அது மட்டுமல்ல இஸ்திரி செய்யும்தொழிலாளியான அவர் தனது பணியை செய்யமுடியாமல் நான்கு மாதங்கள் இருந்திருக்கிறார். அவருக்கு மேலும் உதவிகள் செய்து அவரது வாழ்வாதாரத்தை காப்பாற்றியுள்ளார். இன்று அந்த இளைஞரின் குடும்பத்தில் மீனாவும் ஒரு அங்கம்போல் ஆகிவிட்டார்.இன்றைய இளைஞர்களுக்கு மீனா சொல்வது என்னவென்றால் உங்கள் கண் முன்னே ஒருவர் கஷ்டப்படுகிறாரென்றால் கடந்து போய்விடாதீர்கள். முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்து கைகொடுக்க முயற்சியுங்கள். நீங்கள் செய்யும் அந்த சேவைக்குரிய பிரிதிபலனை பல மடங்கு அதிகமாக கடவுள் உங்களுக்கு திருப்பித் தருவார்.

உன்னதமான செயல்தான் உங்கள் உயர்வுக்கு வழிகாட்டும். அடுத்தவர்களுக்கு உதவத்தான் நாம் மனிதர்களாக பிறப்பெடுத்திருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து எல்லா நேரத்திலும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருக்கவேண்டும் என்கிறார்.இளம் வயதிலே கணவனைப் பிரிந்தபோதும் தன்னுடைய அறிவு, திறமை மற்றும் தன்னம்பிக்கை மூலமாகச் சிறந்த பணிகளை அமைத்துக்கொண்டு தன்னுடைய குழந்தைகளையும் பெற்றோர்களையும் மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமென்று இருந்துவிடவில்லை. முதியோர்களைத் தத்தெடுத்து தன் தாயைப் போலக் கவனித்து நற்செயல்களை செய்து வரும் மீனாசோப்ரியாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் நற்செயல்களால் மட்டுமே மனதிருப்தியும், மனமகிழ்ச்சியும் கூடிய வெற்றியும் கிடைக்கும் என்பதாகும். அத்தகைய நல்ல செயல்களை நாம் தொடர்ந்து செய்யும்போது நாள்தோறும் வெற்றிகளைக் காணலாம்.

உங்கள் கண் முன்னே ஒருவர் கஷ்டப்படுகிறாரென்றால் கடந்து போய்விடாதீர்கள். முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்து கைகொடுக்க முயற்சியுங்கள். நீங்கள் செய்யும் அந்த சேவைக்குரிய பிரிதிபலனைப் பல மடங்கு அதிகமாகக் கடவுள் உங்களுக்குத் திருப்பித் தருவார். உன்னதமான செயல்தான் உங்கள் உயர்வுக்கு வழிகாட்டும்.
(புதுவாழ்வு மலரும்)