புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனைப் பயணம்!



* அவலம்

உலகத்தில் பிறந்துவிட்டோம் வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள எங்குவேண்டுமானாலும் இடம்பெயரும் நிலையில்தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். பொருளாதாரப் பிரச்னையைச் சமாளித்து தன்னை நம்பி வாழும் குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காகப் புலம்ப்பெயர்ந்து பலவித தொழில்களில் ஈடுபட்டு வாழ்கின்றனர் பல லட்சம் பேர். அப்படி வாழும் மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது சீனாவில் உருவாகி உலக நாடுகளை உருக்குலைத்த கொரோனா வைரஸ்.உலக நாடுகள் அத்தனையுமே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சூழலில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் ஒரே யுத்தியாக உள்ளது ஊரடங்குதான். உலக நாடுகள் அத்தனையுமே ஊரடங்கைப் பல கட்டங்களாக, பல்வேறு சட்டதிட்டங்களோடு கடைப்பிடித்து வைரஸ் பரவலைத் தடுக்கவும் உயிரிழப்பைக் குறைக்கவும்முயற்சித்து வருகின்றன.  இந்தியாவும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலோடு ஊரடங்கை கடைப்பிடிக்க தொடங்கி நான்காம் கட்டத்தை எட்டியுள்ளது. முதல்கட்ட ஊரடங்கில் புலம்பெய்ர்ந்த மக்கள் ஓரளவு சமாளிக்கலாம் என்றிருந்தனர்.



அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் தடையில்லாமல் கிடைத்தன. ஆனால், மீண்டும் இரண்டாம் கட்ட ஊரடங்கின்போதுதான் நிலைமை மோசமாவதாக உணர்ந்து அடுத்தகட்ட நிலை கேள்விக்குறியானபோது லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். பிழைப்பிற்காக இந்தியாவின் வெவ்வேறு  மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் குடும்பம் குடும்பமாகவும் , தனித்தனியாகவும் வேலைபார்த்துவருகின்றனர். ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாததால் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு பச்சிளங் குழந்தைகளோடு எந்தவித தயக்கமுமின்றி 2,000 கிலோ மீட்டர்கூட நடந்து சென்றுள்ளனர்.

ஒருசிலர் சைக்கிளிலும், சிலர் கண்டெய்னர் வண்டிகளிலும், சிலர் பால் வண்டிகளிலும் மறைந்து பயணம் செய்யும் அவலநிலை உருவானது. சில அரசியல் தலைவர்களின் கோரிக்கைகளுக்குப் பிறகே சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் அதில் முறையான ஏற்பாடுகள் இல்லாததால் லாரிகள், சரக்கு வாகனங்களில் சென்றனர். இதுவரை 145 க்கும் மேற்பட்டவர்கள் உணவின்றியும் சாலை விபத்திலும் உயிரிழந்துள்ளனர். நடந்தும், சைக்கிளிலும் பயணம் செய்தவர்கள் சந்தித்த இன்னல்கள் மனதை உருக்குவதாக இருந்தன. ஒரு தாய் சாலையில் இழுத்துச்சென்ற பெட்டியின் மீது குழந்தை படுத்துக்கொண்டு பயணம் செய்த காட்சியெல்லாம் கல்மனம் கொண்டோரையும் கலங்கச் செய்யும். உத்தரப்பிரதேசத்திலிருந்து பிழைப்புத் தேடி யாகூப் முகமது , அம்ரித் குமார் இருவரும் சூரத் வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல், கையில் இருந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்துபோனதால் சொந்த ஊருக்குப் புறப்பட முடிவு செய்தனர். ஒரு லாரியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்குப் புறப்பட்டனர். அதிகமான கூட்டம் இருந்ததால் உட்காருவதற்கு கூட வழியில்லை நின்றுகொண்டே பயணமாகியுள்ளனர்.

நண்பர்கள் இருவரும் பயணம் செய்த வாகனம் மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அம்ரித்துக்கு கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என அந்த வாகனத்திலிருந்த அனைவரும் பயந்து நடுவழியில் இறக்கிவிட்டனர். கொளுத்தும் வெயிலில் தன் நண்பனை மடியில் படுக்க வைத்துக்கொண்டு யாகூப் சாலையில் அமர்ந்திருந்ததைக் கண்ட உள்ளூர் மக்களின் உதவியுடன் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அம்ரித் உயிரிழந்தார்.இப்படி ஏகப்பட்ட துயரச் சம்பவங்கள் கொரோனா தாக்கத்தால் உண்டான ஊரடங்கின் ஆறாத வடுக்களாகிவிட்டன.