கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பு மருந்து!



* ஆராய்ச்சி

சீனாவில் முதல் தாக்குதலைத் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்குத்தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 நிறுவனங்கள் இந்த வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பொதுவாக ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு சில வருடங்கள்கூட ஆகும். இப்பொழுது இந்த covid19க்கு உலகம் முழுவதும் 111 தடுப்பு மருந்துகள் சோதனையில் உள்ளன.ஒருசில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளோம், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய வேண்டும் என்று சொல்கின்றன. அமெரிக்கா இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்கள் என்றது. இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு உரிய தடுப்பு மருந்தினைக் கண்டுபிடிப்பதில் இஸ்ரேல் உயிரியியல் ஆராய்ச்சி நிறுவனம் முன்னேற்றம் கண்டிருப்பதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். இத்தாலியை ச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இதற்கான தடுப்பு மருந்தை ஓரளவுக்கு வெற்றிகரமாக பரிசோதித்து விட்டதாக கூறுகின்றனர்.



உலகம் முழுவதும் இரவு பகலாக கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் சூழலில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. அதற்கான முதற்கட்ட முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷையன் மேலும் பல தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.“கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க அல்லது கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் சென்ற பின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களால் கண்டுபிடிக்க முடியாது. காரணம், கொரோனா வைரஸ் உடலில் இருக்கும் சாதாரண செல் போல வேடமிட்டு அதற்கு உரிய சிக்னல்களை அனுப்புவதால் நோய் எதிர்ப்புச் சக்தி செல்கள் குழம்பிப் போய், கொரோனாவை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இதனால் உடலைத் தாக்கும் கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்புச் சக்தி செல்களை மொத்தமாக செயலிழக்க செய்கிறது.

பொதுவாக ஆராய்ச்சிக்கூடத்தில் வைரஸை வளர்த்து அதை ஆய்வு செய்தபின் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடைமுறைதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த நேரத்தில் கொரோனா வைரஸை ஆய்வுக்கூடத்தில் வளர்ப்பது ஆபத்தானது. அதனால் சில ஆண்டுகளாகப்
பயன்படுத்தப்படும் ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறை பயன்படுத்தப்பட்டது. வைரஸின் மரபணுவை மட்டும் பிரித்தெடுத்து அதைப் பரிசோதனை செய்து புதிய தடுப்பு மருந்துக்கான புரதத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது’’ என்றவர் ரிவர்ஸ் வேக்ஸினாலஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது எப்படி என்றும் விவரித்தார்.

‘‘இப்போதைய தொழில்நுட்பச் சூழலில், வைரஸ் தேவையில்லை, வைரஸினுடைய மரபணுத்தொடர் எடுத்து, அதனைக் கணினியில் உள்ளீடு செய்து, வைரஸின் எந்தப் புரதம் தடுப்பு மருந்தை உருவாக்கப் பயன்படும் என்று ஆய்வு செய்யலாம். இதற்குப் யன்படும் தொழில்நுட்பம் உயிரி தகவலியல்தான். ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதற்கட்டமாக எந்தப் புரதம் தடுப்பு மருந்துக்குப் பயன்படும் என்று முயன்றோம். எங்களுடைய நோய் எதிர்ப்பியல் துறைத் தலைவர் டாக்டர் புஷ்கலா மற்றும்  நோய் பரவுயியல் துறைத் தலைவர் டாக்டர் சீனிவாசன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், எப்படி இதனைச் செய்யலாம் என்று திட்டமிட்டோம். இதில் எங்களுடைய ஆராய்ச்சி மாணவர் தமன்ன பஜந்திரியும் சேர்ந்துகொண்டார். சார்ஸ் என்கோவி2 வைரஸுக்குத் தடுப்பாகச் செயல்படக்கூடிய சிந்தெட்டிக் பாலிபெப்டை ஒன்றை அடையாளம் கண்டுள்ளோம்.இந்த சிந்தெட்டிக் பாலிபெப்டைடுக்கு நாங்கள் இன்னும் பெயர் வைக்கவில்லை. இது முதற்கட்டம்தான். அடுத்து இன்னும் பல படிநிலைகள் இருக்கின்றன. அந்தப் படிநிலைகளுக்கு அங்கீகாரம் தரவேண்டிய ரெகுலேடரி ஏஜென்சிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதேபோன்று அமெரிக்காவிலுள்ள ஒரு தடுப்பு மருந்து மையத்தோடு கொலாபரேஷனில் அடுத்தகட்ட நடவடிக்கைகள்,  ப்ரி கிளினிக்கல் ஸ்டடிஸ் மற்றும் கிளினிக்கல் ஸ்டடிஸ் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ப்ரி கிளினிக்கல் ஸ்டடிஸ் என்பது விலங்குகளுக்கு இந்த மருந்தைச் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு பிறகுதான் கிளினிக்கல் ஸ்டடிஸ் என்று சொல்லப்படும் மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்யப்படும்.



இந்த முதற்கட்டத்திலேயே கிட்டத்தட்ட 70 சதவிகித சரியான தடுப்பு மருந்துக்கான அடையாளம் கிடைத்துள்ளது. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துக்கொண்டுபோய் அந்த நடவடிக்கைகளெல்லாம் முடிந்த பின்னர்தான் முழுமையான ஒரு தடுப்பு மருந்து என்பதை நடைமுறைக்கு கொண்டுவரமுடியும். பொதுவாக ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது குறைந்தபட்சம் ஒரு வருடத்திலிருந்து ஒன்றரை வருடத்துக்கு குறையாமல் ஆகும். ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்ப வசதிகளால் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்புகிறோம். ஆனால், முதற்கட்டத்திலேயே ஒரு நல்ல பாசிட்டிவ்வான ரிசல்ட்தெரிந்திருக்கிறது. அந்த விதத்தில் சமுதாயத்திற்கு எங்கள் பல்கலைக்கழகத்தின் மூலமாக கொரோனா நோயைத் தடுப்பதற்கும் உலகில் அமைதியைக் கொண்டுவருவதற்கும் எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய முடியும் என நம்புகிறோம். அந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்’’ என்றார்.
- தோ.திருத்துவராஜ்