போட்டி மனப்பான்மையை அகற்றுவோம்!உடல்மொழி-19

நடைமொழி


Don’t Dress to Kill,
Dress to Survive.
- Karl Lagerfeld

ஒருவருடன் கைகுலுக்கும்போது, கைகள் வெளிப்படும் நிலைதான் அவர் எப்படிப்பட்டவர் என்பதை மௌனமாக அடுத்தவருக்கு காட்டுகிறது. அந்த நிலையையே ஒருவரது உடல்மொழியாக உலகம் எடுத்துக்கொள்கிறது. மிகவும் இயல்பான, தன்னிச்சையான செயலாக இருக்கும் கைகுலுக்கலுக்குள் இருக்கும் கரங்களின் நிலையைப் பற்றி, அதன் முக்கியத்துவம் பற்றி தெரியாதவர்களாகவே பலரும் இருக்கிறார்கள்.

பணிவான கைகுலுக்கல்

 ‘நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்’ என்ற பிரபல சினிமா பாடலை கேட்டிருப்பீர்கள். அந்த வகையில் பணிவு ஒரு உயர்ந்த குணமாகவே இருந்துகொண்டிருக்கிறது.

பணிவு காட்டும்போதெல்லாம் உலகம் அதை அங்கீகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. உடல்மொழியின் செயல்பூர்வமான வெளிப்பாட்டில் பணிவை வெளிப்படுத்த கைகள் உதவுகின்றன. கைகுலுக்கலின்போது உறுதியான கைகுலுக்கலுக்கு எதிராக இருப்பது பணிவான கைகுலுக்கல்தான்.

உள்ளங்கை மேலே பார்த்தவாறு ஒருவரிடம் கைகுலுக்க கைகளை நீட்டுவது பணிவையே காட்டும். பெரிய மனிதராக, திடகாத்திரமான உருவத்தோடு இருந்து, கைகளைத் திறந்த நிலையில் உள்ளங்கை மேலே பார்த்தவாறு ஒருவரிடம் கைகுலுக்க முற்பட்டால் அவர் தனது பணிவை, கட்டுப்பாட்டை, ஆளுமையை அடுத்தவரிடம் ஒப்படைக்கிறார் என்றே பொருள்.  இங்கு உருவம் ஒரு பொருட்டே இல்லை.

கைகுலுக்கலிற்குள் இருக்கும் இத்தகைய அர்த்தங்கள், அதனால் ஏற்படும் ஆளுமையின் உயரங்கள் ஒருபுறம் இருந்தாலும், பணிவான கைகுலுக்கல்களை வெளிப்படுத்தும்போது அது உதவி செய்கிறது. குறிப்பாக வார்த்தைகளாக இல்லாமல், உடல்மொழியாக மௌனமாக மன்னிப்பு கேட்க இது உதவுகிறது.

கைகுலுக்கலில் எட்டிப் பார்க்கும் போட்டிமனித நாகரிகம் வளரத் தொடங்கி, இரண்டு மனிதர்கள் கைகுலுக்கிக்கொள்ள ஆரம்பித்த நாட்களிலிருந்தே மனிதர்களுக்குள் ஒரு அதிகாரப் போட்டி மறைமுகமாக எழுந்துகொண்டிருக்கிறது. அதில் ஒருவர் அடுத்தவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்.

(கைகுலுக்கும்போது ஒருவர் மற்றவரது உள்ளங்கையை கீழ்நோக்கி திருப்பி, தனது உள்ளங்கையை மேல்நோக்கி வைத்திருக்க முயற்சிப்பதுதான் நிலை)இது மனிதர்களுக்குள் இருக்கும் நெகட்டிவ் குணங்களில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் அதை உணர்ந்தவர் அதற்கு இடம் தராமல், கைகளை இறுக்கமாக வைத்திருந்து போட்டியை எதிர்கொள்பவராக இருப்பார். சில விநாடிகள் மட்டுமே நிகழக்கூடிய கைகுலுக்கல் உறவில் இவ்வகையான போட்டிகள் மெல்லிய பனிப் போராக இருந்து கொண்டிருக்கிறது.

கைகுலுக்கலில் இருவரின் உள்ளங்கைகளும் செங்குத்தான நிலையில் இருக்கும்போதுதான் அவர்களிடையே சமாதானமும், சமத்துவமும் பரஸ்பர மரியாதையும் ஏற்படுகிறது.சுமுகமாக உறவை நீடிக்கும் நிலைகைகுலுக்குவதன் வழியாக மனிதர்களுக்குள் ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். கைகுலுக்கல் நடக்கும்போது நமது கைகளும், கைகுலுக்கப்படுபவரின் கைகளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கவனிக்க ஆரம்பித்தால் போதும், நம்முடன் பழகுபவருடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

கைகுலுக்கும்போது இருவரின் உள்ளங்கைகளும் செங்குத்தான நிலையில் இருக்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்துகொண்டால் போதும். அந்த நிலையில்தான் யாரும் அதிகார நிலையிலோ, பணிந்த நிலையிலோ இருப்பதில்லை.கைகுலுக்கலில் காட்டும் அழுத்தம்கைகுலுக்கலின்போது காட்டும் அழுத்தம் மிக முக்கியமானது. அது சற்று உணர்ச்சிவசமானதும் கூட. பல்வேறு தருணங்களில் பல்வேறு நபர்களுடன் கைகுலுக்கினாலும் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு விதமான அழுத்தங்களிலேயே கைகுலுக்குகிறோம்.

கைகுலுக்கலில் சுமுகமான உறவை ஏற்படுத்த கைகுலுக்கும்போது எவ்வளவு அழுத்தம் கிடைக்கிறதோ அதே அழுத்தத்தைத்தான் அடுத்தவருக்குத் தரவேண்டும். உதாரணமாக, ஒருவர் 60% அழுத்தத்தைக் காட்டுகிறார் என்றால், அதே அளவுக்கு அழுத்தத்தைக் காட்டினால்தான் சுமுகம் உருவாகும்.

அதற்கு குறைவான அழுத்தத்தைக் காட்டினால் அவருக்குப் பணிந்ததுபோல் ஆகும். அதிகம் காட்டினால் ஆளுமையைச் செலுத்தியது போலாகும். அதேநேரம் எல்லோரிடமும் ஒரேவிதமான அழுத்தத்தையும் காட்டக்கூடாது. ஆண்களிடம் கைகுலுக்கும்போது காட்டும் அழுத்தத்தை பெண்களிடம் காட்டக்கூடாது. இளைஞர்களிடம் காட்டும் அழுத்தத்தை வயதானவர்களிடம் காட்டக்கூடாது. அதுதான் அனைத்து வயதினருக்கும் இடையே ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்தித்தரும்.

கைகுலுக்கலிற்குள் இருக்கும் இத்தனை நுட்பமான நிலைகளை எல்லாம் இலக்கணபூர்வமாக, செயல் ரீதியாகச் செய்து பார்ப்பதும் சாத்தியமானதுதான். மனதில் போட்டி மனப்பான்மையை அகற்றி  கனிந்த அன்புடன் இருந்தால் போதும், உடல்மொழி சாதாரணமானதாக, இயல்பானதாக வெளிப்படத் தொடங்கும்.அதிகாரத்திற்கு அடிபணியாமல் இருப்பதுஇரண்டு கைகள் தட்டினால்தான் ஓசை என்பார்கள்.

அந்த வகையில் உடல்மொழியின் செயல்பாட்டில் இரண்டு நபர்கள் கைகுலுக்கிக் கொள்ளும்போது, ஒருவர் முரட்டுத்தனமாக கைகுலுக்கத் தொடங்கினால் அது ஒருபோதும் சமத்துவ உணர்வை ஏற்படுத்தாது. அதோடு முரட்டுத்தனம் காட்டுபவர் அதிகாரம் செலுத்தும் தன்மையை முதலில் தொடங்கி வைத்தவராகவே இருக்கிறார். இப்படிப்பட்ட மனிதர்களையும், முரட்டுத்தனமான செயல்பாடுகளையும் நமது அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.

நம்மிடம் கைகுலுக்க வரும் நபர், வேண்டுமென்றே உள்ளங்கையை கீழ்நோக்கிய நிலையில் வைத்திருந்து கைகுலுக்க முற்பட நினைத்தால் அவற்றை சமாளிக்க சில வழிமுறைகளை உடல்மொழி வல்லுநர்கள் கண்டடைந்திருக்கிறார்கள்.

ரைட் டர்ன் உத்தி அதிகாரம் செலுத்தும் நபரிடமிருந்த முரட்டுத்தனமான கைகுலுக்கலை எதிர்கொள்ளும்போது, முதலில் இடது காலை ஒரு அடி முன்னே எடுத்து வைத்து, பின் வலது காலை முன்னே நகர்த்தி அந்த நபரின் தனிப்பட்ட வட்டத்திற்குள் நுழைய வேண்டும்.

மனிதர்கள் பெரும்பாலும் வலது காலை முன்வைக்கும்போது வலது கையைக் குலுக்குபவர்களாக இருப்பார்கள். இப்போது அந்த நபரின் உள்வட்டத்திற்குள் நீங்கள் நுழைந்ததும் அவர் சற்று அதிர்ச்சியுடன் தன்னை சற்று பின் நோக்கி நகர்த்திக் கொள்வார்.

அந்த நேரம் அவரது கை கீழ்நோக்கிய நிலையிலிருந்து செங்குத்தான நிலைக்கு மாறும். அந்த நேரத்தில் கைகுலுக்கினால் இருவரின் கைகளும் நேராக இருப்பதோடு சுமுகமானதாகவும் இருக்கும்.

ஆதி மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் மல்யுத்தச் சண்டை போட்டபோது இம்மாதிரியான டெக்னிக்கை பயன்படுத்தி அடக்கி ஆளுமையைக் காட்டியிருந்தார்கள். சண்டையிலிருந்து சமாதானத்திற்கான வழிமுறையை உடல்மொழி வல்லுநர்கள் கண்டடைந்ததுதான் சுவாரஸ்யம்

உடை வழி - டர்பன் (தலைப்பாகை)

தலையில் சுற்றி அணியும் துணியை தலைப்பாகை என்று குறிப்பிடுகிறார்கள்.  உலகத்தில் இன்றளவும் ஒருவன் தலைப்பாகை அணிந்திருந்தால் அவன் ‘இறை சட்டத்தை கடைப்பிடிக்கிறான் என்றே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அந்த வகையில் தலைப்பாகை என்ற உடைக்கு உலகம் முழுக்க ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது.

உலகத்தில் மனிதர்களுக்கு தலைப்பாகை அணியும் பழக்கம் எப்படி, எப்போதிருந்து வந்திருக்கிறது என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை. மனிதர்களுக்கு மதங்கள் அறிமுகமான நாள் முதலாக தலைப்பாகை வந்திருக்கலாம் என்றே சொல்கிறார்கள்.

காரணம், எல்லா மதமும் தலைப்பாகைக்கு ஒரு பெரிய இடத்தை தந்திருக்கிறது. இன்றளவும் டர்பன் என்றால் அது சீக்கியர்களின் மத அடையாளமாகவே இருக்கிறது. ஆனால், மனிதர்கள் தலைப்பாகை அணியும் பழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வந்திருக்கிறது.

பண்டைய வரலாற்றுக் காலத்தில் மனிதர்களுக்கு உடலில் தலைதான் பிரதானமான உறுப்பு என்ற எண்ணம் இருந்தது. மனிதர்களுக்கு நல்லதும் கெட்டதும் தலை வழியாகவே வருகிறது என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது.

அதனால் தீய சக்திகள் தலைவழியே நுழையாமல் இருக்க தலையைச் சுற்றி துணியால் மூடிக்கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அப்போதிருந்து தொடங்கியிருக்கிறது தலைப்பாகை அணியும் பழக்கம். அது வெப்பம், பனியிலிருந்து பாதுகாத்ததோடு கதகதப்பான சீதோஷ்ணத்தையும் மனிதர்களுக்கு தர சௌகர்யமானதாக இருந்தது.

வேட்டைக்குச் செல்லும்போது அம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருக்கவும், இலை, செடி, தழைகளைக் கட்டிக்கொண்டு மறைந்திருந்து வேட்டையாடவும், அப்போது கைகள் சுலபமாக இயங்கவும் மனிதர்களுக்கு தலைப்பாகை ஒரு storage place ஆக பயன்பட்டது. 

இப்படி சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இருந்தார்கள் என்பதை இந்தியாவில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள் இன்றளவும் விஷுவலாகக் காட்டுகின்றன. அதில் பிரதானமாகத் தெரிவது நாகரீகமற்று உடலில் உடை அணியாத அந்த மனிதர்கள் தலையில் தலைப்பாகையை அணிந்திருந்தார்கள் என்பதுதான்.

  - தொடரும்