கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர NET 2019 தகுதித் தேர்வு!தகுதித் தேர்வு

இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) பணிகளில் சேர்க்கை பெறுவதற்கு தேசிய தகுதித் தேர்வு (UGC-NET-National Eligibility Test) எழுதி தேர்ச்சி பெறவேண்டும். 2019ம் ஆண்டுக்கான தேசிய தகுதித் தேர்வை  இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட National Testing Agency-NTA நடத்தவுள்ளது. இந்தத் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பாடப்பிரிவுகள்

இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகள் குறித்த பாடங்கள், கலை மற்றும் பண்பாட்டுப் பாடங்கள், நூலகத் தகவலியல், சமயம், உடற்கல்வியியல், இதழியல், உளவியல், புவியியல், சமூக மருத்துவம், தடயவியல், மின்னணு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், மனித உரிமை மற்றும் செயல்பாடுகள், நாடகம் மற்றும் அரங்கம், காட்சிக்கலை, நாட்டுப்புற இலக்கியம் என்று மொத்தம் 101 வகையான பாடங்களுக்கு தேசிய தகுதித் தேர்வு நடத்தப் பெறுகிறது.

கல்வித் தகுதி

இத்தேர்வுக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்புகளில் பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwD) போன்ற பிரிவினர் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும். சில பாடப்பிரிவுகளுக்குத் தொடர்புடைய முதுநிலைப் பட்டப்படிப்பு தவிர்த்த இணையான பிற பாடப்பிரிவுகளில் படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்த விவரங்களைத் தகவல் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

மேற்காணும் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படித்துவரும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அது தற்காலிகமானதாகவே கருதப்படும். அவர்களுடைய முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின்பே அது தகுதியுடையதாகக் கொள்ளப்படும். மேலும் முதுநிலைப் பட்டப்படிப்புத் தேர்வு முடிவுகளில் மேற்காணும் தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தத் தேர்வு எழுதுபவர்களுக்கு தற்போது ஆதார் எண் விவரத்தினைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு

இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) தகுதிக்கு (JRF-NET) விண்ணப்பிப்பவர்கள் 1.12.2019 அன்று 30 வயதுக்கு அதிகமில்லாமல் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. உதவிப் பேராசிரியர் தகுதிக்கு (Eligibility for Lectureship) விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை. பிற சலுகை குறித்த விவரங்களைத் தகவல் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ntanet.nic.in எனும் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.1000 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.250 என்று விண்ணப்பக் கட்டணத்தை சிண்டிகேட்/எஸ்பிஐ/ஐசிஐசிஐ/எச்டிஎப்சி வங்கிக் கிளைகளில் செலுத்துவதற்கான வசதியினை விண்ணப்பிக்கும்போது தேர்வு செய்துகொள்ள வேண்டும். பின்னர், அதற்கான இணைய சலானைத் தரவிறக்கம் செய்து, மேற்காணும் தேர்வு செய்த வங்கிக் கிளைகளில் பணத்தைச் செலுத்தலாம்.

கடன் அட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) மற்றும் Paytm வழியில் இணையப் பணப்பரிமாற்ற முறையிலும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆனால், அதற்கான சேவை வரியினையும் விண்ணப்பத்துடன் சேர்த்துச் செலுத்திட வேண்டும். இணையத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள் 9.10.2019. விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் 10.10.2019. அதன் பின்னர் விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதும் செய்துகொள்ள வேண்டியிருப்பின் 18.10.2019 முதல் 25.10.2019 வரை இணையதளத்தின் வழியாகத் திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.

தேசிய தகுதித் தேர்வு

இந்தத் தேசிய தகுதித் தேர்வு தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர் ஆகிய பதினைந்து மையங்கள் உட்பட இந்தியா முழுவதும் 224 மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வு எழுதுபவர்களுக்கான அனுமதிச்சீட்டு மேற்காணும் இணையதளத்தில் நவம்பர் மாதம் 9ம் தேதியில் பதிவேற்றம் செய்யப்படும். மேற்காணும் இணையதளத்திலிருந்து அனுமதிச்சீட்டினைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தேர்வுகள்

இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வு 2.12.2019 முதல் 6.12.2019 வரை நடைபெறவிருக்கிறது. இந்நாட்களில் முதல் தாள் காலை 9.30 முதல் 12.30 மணி வரையிலான முதல் அமர்விலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 வரையிலான இரண்டாம் அமர்விலும் நடத்தப்பெறும். இத்தேர்வில் தகுதியுடையவர்களாகத் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் இரண்டு தேர்வுகளிலும் சேர்த்துக் குறைந்தது 40% மதிப்பெண்களும், ஓ.பி.சி, எஸ்.சி,
எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் குறைந்தது 35% மதிப்பெண்களும் பெற்றிட வேண்டும். தேர்வு முடிவுகள் 31.12.2019 அன்று அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்வு குறித்து மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புவோர் www.nta.ac.in என்ற இணைய முகவரியில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  - வெங்கட் குருசாமி