சளைக்காமல் சாதனைகள் படைக்கும் நந்தினி!சாதனை

செயல்களால் மட்டுமல்ல படைத்தலாலும் சாதனைகள் நிகழ்த்தமுடியும். அப்படி ஒரு சாதனையைத் தான் நிகழ்த்தியுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த நந்தினி. இவர் அரசு கலைக் கல்லூரியில் தொலைதூரக் கல்வி முறையில் தமிழ் இளங்கலை படித்துள்ளார்.
சிறுவயதிலிருந்தே தமிழ் மீதும் திருக்குறள் மீதும் பற்றுகொண்ட இவர் மிரர் ரைட்டிங் முறையில் மூன்று நாட்களில் 1330 திருக்குறள்களையும் தலைகீழாக எழுதி புத்தகமாக வெளியிட்டு உலக சாதனை படைத்துள்ளார். இவரது புத்தகத்தை புதுச்சேரி அரசும், புதுச்சேரி தமிழ்ச்சங்கமும் இணைந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் வெளியிட்டுள்ளது.

மொத்தம் மூன்று உலக சாதனைகளைப் படைத்துள்ள நந்தினி பல்வேறு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு மாநில  மற்றும் தேசிய அளவில் விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது சிறிய வீட்டில் குவிந்துள்ள பதக்கங்களும், விருதுகளும் நந்தினியின் சாதனைகளை நமக்கு பறைசாற்றுகின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் நந்தினி சாதனைகள் பற்றி பகிர்ந்துகொண்ட  தகவல்களை இனி பார்ப்போம்.

‘‘மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஓவியப் போட்டி நடந்தது. அண்ணன் ஓவியம் வரைந்து கொடுத்தார். அதை  பள்ளியில் காட்டியதும்  பாராட்டுகளும் பரிசுகளும் கிடைத்தன. ஆனால், நான் வரையாத ஓவியத்திற்கு பரிசு கிடைத்தது எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியது.

அப்போதிருந்து வரையத் தொடங்கினேன். அடிப்படையிலேயே எனக்கு தமிழ் மேல் தீராக்காதல் இருந்ததால் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் ஈடுபாடு அதிகமானது. தொடர்ந்து பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு வென்றேன்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் அறிவியல் வினாடி வினா போட்டிகளில் கலந்துகொண்டு INSPIRE Award (Innovation In Science Pursuit for Inspired Research) விருதை இருமுறை பெற்றேன்.

அடுத்ததாக 11ம் வகுப்பு படிக்கும்போது பள்ளி அளவிலான மாவட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றேன். 12ம் வகுப்பு படிக்கும்போது பேச்சு போட்டிக்கு மாநில அளவில் தேர்வானேன். மாநில அளவில் தேர்வானதற்காக  இந்த இரு ஆண்டுகளிலும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து எனக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசும் கிடைத்தது.

தேசிய அளவில் நடைபெற்ற தேசிய திறனறி தேர்வில் (National Talent Exam) மாநில அளவில் 3வது ரேங்க் பெற்று வாழ்நாள் உதவித்தொகை பெற்றுவருகிறேன். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் வந்தது’’ எனக்கூறும் நந்தினி விளையாட்டுத் துறையிலும் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.

‘‘பல துறைகளில் எனக்கு ஆர்வம் இருந்து அவற்றில் கவனம் செலுத்தினாலும் பத்தாம் வகுப்பில் 82% மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால், அடுத்ததாக விளையாட்டுத் துறையில் ஆர்வம் சென்றது. பயிற்சிக்காக அதிக நேரம் ஒதுக்கியதால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை.

டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் நான் கேப்டனாக இருந்தபோது எங்கள் அணி தேசிய அளவில் வெற்றி பெற்றது. மாவட்ட அளவில் நடந்த போட்டிகளிலும் நான் கேப்டனாக இருந்தபோது வெற்றி பெற்றோம். ஐந்து முறை மாநில அளவில் வெற்றி பெற்றோம். கிரிக்கெட் மட்டுமில்லை, கூடைப்பந்து, இறகுப் பந்து போட்டிகளிலும் மாநில அளவில் வென்று பதக்கங்களைப் பெற்றுள்ளேன்.

இந்திய மகளிர் அணியில் தேர்வாக வேண்டும், இந்தியா சார்பாக உலக அளவில் ஒரு போட்டியிலாவது விளையாடவேண்டும் என்ற எண்ணம் முன்பு இருந்தது. ஆனால், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

அவர்கள் உபயோகப்படுத்திய பழுதாகிய உபகரணங்களையே நாங்களும் உபயோகப்படுத்த வேண்டும். மேலும் நான் மிடில் கிளாஸ் ஃபேமிலி என்பதால் பொருளாதாரக் காரணங்களும் பயிற்சிக்கு தடையாக இருந்தது. என்னால் தொடர்ந்து சீரான பயிற்சியில் ஈடுபட இயலவில்லை.

அதனால் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனில் என்னால் தேர்வாக முடியவில்லை. இதிலிருந்து மீண்டு வேறு ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்’’ என்ற நந்தினி அடுத்தடுத்த சாதனைகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

 ‘‘சிறுவயதிலிருந்தே எனக்கு மினியேச்சர் எனப்படும் களிமண், பென்சில், சாக்பீஸில் சிலைகள் செய்யும் நுண்கலை வேலைப்பாடுகளில் ஆர்வம் இருந்தது. அதை வைத்தே சாதனை செய்யலாம் என நினைத்து பென்சில் ஊக்கில் மனித உறுப்புகளை செதுக்கினேன்.

‘யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என்ற நிறுவனம் எனக்கு சாதனை விருது அளித்தது. மேலும்  அ,ஆ,இ,ஈ என தமிழ் எழுத்துகளில் தொடங்கி பாரதியார், திருவள்ளுவர் என தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்த கலைஞர்களை செதுக்கினேன்.

தமிழ் உயிர் மற்றும் மெய் எழுத்துகள் உட்பட 13 எழுத்துகளை சாக்பீஸில் 55 நிமிடத்தில் செதுக்கி உலக சாதனை படைத்தேன். ‘ஜெட்லி உலக சாதனை’ புத்தகத்தில் இடம்பெற்றேன்.

தொடர்ந்து மூன்று நாட்களில் 1330 திருக்குறள்களையும் மிரர் ரைட்டிங் முறையில் தலைகீழாக எழுதினேன். கண்ணாடியில் பார்த்துத்தான் அதை படிக்க முடியும். இதற்கு ‘ஃபியூச்சர்ஸ் கலாம் புக் ஆஃப் அச்சீவர்ஸ்’ நிறுவனம் உலக சாதனை விருது அளித்தது’’ எனக் கூறும் நந்தினி பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘‘திருவண்ணாமலையில் இயங்கிவரும் நீர்ச்சுழிகள் உட்பட சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நீர் நிலைகளைப் பாதுகாப்பது, அதனை மீட்டுருவாக்கம் செய்வது, ரத்ததானம் செய்வது குறித்த விழிப்புணர்வு செய்வது, மரம் வளர்ப்பு விழிப்புணர்வு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வகுப்புகள் எடுப்பது, பள்ளிக் கல்லூரிகளுக்குச் சென்று தன்னம்பிக்கை குறித்து பேசுவது, விதைப்பந்து தூவுவது, ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்குச் சென்று வகுப்புகள் எடுப்பது மற்றும் நுண்கலைகளைப் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தருவது என என்னால் இயன்ற பணிகளைச் செய்துவருகிறேன்’’ எனக் கூறும் நந்தினி, தான் வாங்கிய விருதுகளைப் பட்டியலிட்டார்.

‘‘திருக்குறள் மற்றும் தமிழ் மொழி சார்ந்த என்னுடைய சாதனைகளை அங்கீகரித்து சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. மேலும் திருக்குறள் தொண்டாளர், திருக்குறள் தூதுவர், தன்னம்பிக்கை சிகரம், மிளிரும் நட்சத்திரம், இளம் சாதனையாளர், சாதனைப் பெண், கனவு நாயகன் கலாம் விருது, சமூக சேவைக்கான அன்னை தெரசா விருது மற்றும் விஷன் 2020 விருது போன்ற பல விருதுகளைக் கடந்த ஆறு மாதங்களில் பெற்றுள்ளேன்.

தமிழ் வழியில் பயின்று கலெக்டராகி தமிழ் சமூகத்திற்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அதற்காகத்தான் கல்லூரியில் தமிழ் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’’ எனும் நந்தினியின் சமூக அக்கறை கொண்ட கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்!

-வெங்கட் குருசாமி