வரும் ஆனால் வராது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு!சர்ச்சை

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளுக்கும் குழப்பங்களுக்கும் குறைவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் புதுப் புது அறிவிப்புகள், அறிவிப்புகளில் மாற்றங்கள், அறிவிப்புகளுக்கு எதிரான வழக்குகள் என்று குழப்பங்களின் கூடாரமாக உள்ளது பள்ளிக் கல்வித் துறை.

சமீபத்தில் வந்த, ‘5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு அதன் அடிப்படையில் தேர்ச்சியை நிறுத்திவைக்க வேண்டாம்’ என்ற தமிழக அரசின் ஆணை கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ‘அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் நிலையைக் கருத்தில்கொண்டு மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டடத்தில் மாணவர்கள் தங்களதுகற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும்’ என்று அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து கல்வி யாளர்களின் கருத்துகளைக் கேட்ேடாம்…

முனைவர். ஆர்.ராஜராஜன், கல்வியாளர்

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு பொதுத்தேர்வு என்ற ஒன்றைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டம் தீட்டியிருக்கிறது. இதற்காகக் கூறப்படும் காரணம், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித்திறன் குறைபாடு என்பவைதான். இதற்குச் செய்ய வேண்டியது கற்றல், கற்பித்தலைத் திறமையாகச் சரிசெய்வதுதான். பொதுத்தேர்வு என்ற ஒன்றை அமைத்துவிட்டால் இது சரியாகிவிடுமா?

புதிய கல்விக்கொள்கை பல புதுமைகளை உள்ளடக்கியுள்ளது. இடது மூளை, வலது மூளை இவற்றின் இயக்கத்திற்கு ஏற்ற கல்வி மாணவர்களின் நலன் நோக்கிய கல்வி, தொழிற்கல்வி மாணவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டுகின்ற வகையிலான கல்வி இவற்றையெல்லாம் சொல்கிறது. அப்படி பார்த்தால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குக் கற்றல், கற்பித்தலைத்தான் முதன்மைப் படுத்தியிருக்க வேண்டும். மாறாக ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வருகிறது.

ஐந்தாவது மற்றும் எட்டாவது படிக்கின்ற பிள்ளைகள் முன் குழந்தைப் பருவம் மற்றும் பின் குழந்தைப் பருவம் என்ற உளவியல் பிரிவில் இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் பல்வேறு பாடத்திட்டங்களைப் பின்பற்றி பாடங்களை நடத்தி மாணவர்களுக்கு தேர்வுகளை வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஏதேனும் தவறுகள் இருக்குமாயின் அவற்றை சரி செய்து அரசு மேற்பார்வையில் சரி செய்தாலே எல்லாம் சரியாகிவிடும். மாறாக ஏற்கனவே நடந்த தேர்வுகள் அரசுத் தேர்வுகளாக மாறி அது அச்சத்தை ஏற்படுத்தி, அது குழந்தைகளுக்கு ஒரு சுமையாக மாறி பாதிப்புகள் ஏற்படுமோ என்ற குழப்பத்தை உண்டாக்குகிறது.

 இதற்கு தமிழக அரசு மூன்று ஆண்டு காலம் தந்திருக்கிறது என்ற செய்தியும் மூன்று ஆண்டுகளுக்குள் கல்வித்தரத்தை உயர்த்திவிடுவோம் என்ற உறுதிமொழியும் மகிழ்ச்சியைத் தருகிறது. இருப்பினும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மனதில் தற்போது நிலவி வரும் குழப்பத்தையும் அச்சத்தையும் அரசு போக்குவதோடு தமிழகத்தின் கல்வி நலனையும் காக்க வேண்டும்.

வே.மணிவாசகன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்பள்ளிகளில் 80-90 சதவிகிதம் மாணவர்கள் தாய்மொழியான தமிழைப் பிழையாகவே எழுதுகிறார்கள். அறிவியல் பாடங்களாக இருந்தாலும் கலைப் பாடங்களாக இருந்தாலும் தமிழில் பிழையின்றி எழுதக்கூடியவர்கள் ஒருசிலரே உள்ளனர் என்பதுதான் இன்றைய அரசுப் பள்ளிகளின் நிலைமை.

தாய்மொழியில் படித்து புலமைபெற்ற டாக்டர் அப்துல் கலாம் தொடங்கி பல்வேறு அறிஞர் பெருமக்கள் பற்றி நாம் அனைவரும் பேசுகிறோம். அதேபோல் 30 வயதைக் கடந்தவர்கள் அனைவரும் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றே மேல் வகுப்பிற்கு வந்தோம். இது கடந்த கால வரலாறு. இந்தச் சூழ்நிலையில் தற்போது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை மூன்றாண்டுகள் கழித்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு மட்டுமே மாவட்ட அளவில் தேர்வு எனவும் அதனடிப்படையில் தேர்ச்சி எனவும் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

1 முதல் 8ஆம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி அளித்ததால் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பொறுப்புடைமை (Accountability) குறைந்துவிட்டதோடு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்வி சார்ந்த உண்மைகள் தெரியாமல் போய்விட்டது.
 
அதனோடு கடந்த 2018 -2019ஆம் கல்வியாண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களின் மொழிப்பாடத் தேர்வுகளுக்கு ஒரு தாளாகக் குறைத்தது, 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கான இரண்டு தாள்களை ஒன்றாகக் குறைப்பது, 1 முதல் 12ஆம் வகுப்புகள் வரை ஒரே வளாகத்தில் கொண்டுவந்தால், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களைக்கொண்டு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளை மேம்பாடு அடையச் செய்ய அரசாணை 145 வெளியிட்டது, ஆசிரியர்கள் வருகை சார்ந்து பயோமெட்ரிக் முறை கொண்டுவந்தது, அனைத்துப் பள்ளிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தது என பல நல்ல மாற்றங்களையும் அரசுப் பள்ளிகளை நம்பி கல்வி கற்க வரும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வித்திறன் மேம்பட வழிவகை செய்துள்ளது.

எனவே, எங்கள் அமைப்பின் சார்பில் மேனிலைக் கல்வியில் முதுகலை ஆசிரியர்கள் தமிழ்மொழி சார்ந்து படும்பாடுகள் குறைக்கப்பட வேண்டுமானால், மாணவர்கள் கற்றல் திறமை உண்மையில் மேம்பட வேண்டுமானால் கட்டாயம் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்பட இருக்கும் மாவட்ட அளவிலான தேர்வுகள், அதனைத் தொடர்ந்து தேர்ச்சி என்பது தேவை என்பதை மனநிறைவோடு ஆதரிக்கிறோம்.

தேர்வு வைத்தால் இடைநிற்றல் மற்றும் குலத்தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. கல்வியால் மாற்றம் வேண்டுமானால் தேர்வு என்பது ஒரு படிக்கல்லாக அமையும். அதேபோல் ஆசிரியர்களுடைய கற்பித்தல் திறனை மற்றும் மாணவர்களின் கற்றல் தன்மையை மாற்றும் மந்திரக்கோலாகத் தேர்வு அமையும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  - தொகுப்பு: தோ.திருத்துவராஜ்