10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே தாளான மொழிப்பாடங்கள்!சர்ச்சை

பள்ளிக் கல்வித்துறையிலிருந்து நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பத்தாம் வகுப்பில் மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றுவது மற்றும் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களைக் குறைத்து 600 மதிப்பெண்களை 500 ஆகக் குறைப்பது போன்றவை சமீபத்திய அறிவிப்புகளாகும். இத்தகைய தொடர் அறிவிப்புகளால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பமான மனநிலையில் உள்ளனர். இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.

பி.கே.இளமாறன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடங்களில் மாற்றம் கொண்டுவந்து மொழியினை அழிக்கும் அரசாணை 161ஐ திரும்பப் பெறவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. எளிமையாக்குவதாக நினைத்து 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப்பாடத்தின் இரண்டு தாள்களை ஒரே தாளாக குறைப்பது என்பது  மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை குறைப்பதோடு எதிர்காலத்தில் தமிழ் மொழியினை அழிக்கும் முயற்சிக்கும் வித்திடுகிறது.
இதுபோன்ற அறிவிப்புகள் மொழி‘யின் தாக்கத்தை வேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும்.

இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும், படிப்பது மட்டுமல்ல மொழி இலக்கணத்தில் மாணவர்களின் ஆளுமைத்தன்மையை வெளிப்படுத்தவும் உதவும். அதற்குரிய பயிற்சிக்களம்தான் தமிழ் இரண்டாம்தாள். இதில்தான் கவிதை, கட்டுரை, சுருக்கி எழுதுதல், தொடரமைத்தல், வாக்கியத்தில் அமைத்து எழுதுதல், பாடலின் பொருள்நயம், சந்தநயம், அணிநயம் மற்றும் தொடைநயம் அறிந்துகொள்ளமுடியும். பாவகை அறிதல், அலகிட்டு வாய்பாடுகூறல் என மாணவனைப் படைப்பாளியாக்கும் அனைத்து கருதுகோள்களும் இடம்பெறுவது இரண்டாம் தாளில்தான்.

மேலும் குறிப்பிட்ட கதையொன்றின் பாத்திரப்படைப்பு, கருத்தமைவு, மையக்கருத்து, கதைமாந்தரின் இயல்பை மாற்றி எழுதச் செய்தல் மற்றும் கதையிலிருந்து மாணவன் அறிந்த செய்திகளை மீட்டறிதல் ஆகியன இடம்பெறுவது இரண்டாம் தாளில்தான். பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொல்லறிதல், மொழிக்கலப்பின்றி எழுதுதல், ஆங்கிலத் தொடரை தமிழாக்கம் செய்தல் என்ற மொழியாக்கக் கலையைப் பயிற்றுவிப்பதும் மொழித்தாள் இரண்டுதான். மாணவர்கள் மொழிவளம் பெறவும் தமிழ் மேன்மை பெறவும் இரண்டாம் தாள் அவசியமாகும்.

இதைப்போலத்தான் ஆங்கிலம் இரண்டாம் தாளும் முதன்மை பெறுகிறது. எனவே, மொழிப்பாடங்களுக்கு பழையபடி இருதாள்களாக தேர்வு நடத்துவதே சாலப்பொருந்தும்.மாணவர்களின் மனஅழுத்தம் குறையும், ஆசிரியர்களின் வேலைப்பளுவும் நேரம் விரயம் ஆவதும் குறையும் என்று அரசு தரும் விளக்கம் ஏற்புடையதல்ல.  மொழியின் வளர்ச்சியும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட, மற்ற பாடங்களுக்கு அகமதிப்பெண் வழங்குவதுபோல தமிழ்மொழிப் பாடத்திற்கும் அகமதிப்பெண் 20 வழங்கிட வேண்டும்.

மேலும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்ணிலிருந்து 500 ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாணவர்களிடையே 10ம் வகுப்பிற்குப் பிறகு எந்தத் துறையைத் தேர்வு செய்வது என்பதில் தன்னம்பிக்கை ஏற்படும்.

பாடம் நாராயணன், கல்வியாளர்

மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றுவது மற்றும் +1 மற்றும் +2-வில் பாடங்களைக் குறைத்து மதிப்பெண்களைக் குறைப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் அது சமூகத்திற்கும் ஒவ்வாதது. இதுபோன்ற அறிவிப்புகள் மாணவர்கள் அடிப்படை கல்வி பெறுவதை தடுப்பதாகத்தான் உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இயலாமை, ஆசிரியர்களின் திறன் குறைபாடு காரணமாக மாணவர்கள் சுயமாக கற்றறிவதற்கு ஏதுவான சூழலை அரசு அமைத்துத் தராததைத்தான் இவ்வறிவிப்புகள் காட்டுகின்றன.

மொழிப்பாடத்தில் வலுவான அடித்தளம் கொண்டிருப்பதே ஒரு சமூகத்தை மேம்பாடடையச் செய்யும். மொழிப்பற்று குறைந்து வரும், அதுவும் தாய்மொழியில் பயில்வது கவுரவக் குறைச்சலாகக் கருதும் இன்றைய சூழலில் மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றும் செயல்பாடுகள் இன்னும் மோசமான விளைவையே ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு மாணவனுக்கு இலக்கண, இலக்கிய அறிவு மேம்பட மொழிப்பாடங்கள் இன்றியமையாதவை. மொழிப்பாடங்கள்தான் அடுத்த தலைமுறைக்கு அறிவுத்திறனை, ஞானத்தைக் கடத்தும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. எனவே, மொழிப்பாடத்தை மாற்றுவது என்பது எதிர்கால சமூகத்தில் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அடுத்ததாக +1 மற்றும் +2 பாடங்களைக் குறைப்பதும் கண்டிக்கத்தக்கதே. ஒரு மாணவனின் அடிப்படை கல்வி முழுமையடையும் களம்தான் +1 மற்றும் +2 வகுப்புகள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மேல்நிலை கல்வியில், பொறியியலை தேர்தெடுக்கப்போகும் மாணவர்கள் மற்ற துறைகளைப் பயில வேண்டாம், மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் கணிதம் பயில வேண்டாம் என இவர்கள் வடிகட்டுவது தேவையே இல்லாதது.

இது அறிவிற்கும் அறிவியலுக்கும் புறம்பானது. ஏனெனில் ஐஐடி கான்பூர் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் சமூக அறிவியலையும், மொழிப்பாடங்களையும் படிக்கின்றனர். அப்படி படித்தால்தான் சமூகத்திற்கு தேவையான கண்டுபிடிப்புகளைச் செய்து சமூகம் சார்ந்த பொறியியல் நிபுணராகவும், மிகச்சிறந்த வல்லுநர்களாகவும், மனிதநேயமிக்கவர்களாவும் விளங்கமுடியும். இதுபோன்ற திட்டங்கள்தான் மாணவர்களை சமூக அக்கறை கொண்டவர்களாக மாற்றுகின்றன.

அறிவியலும் கணிதமும் ஒன்றுக்கொன்று பிணைந்த துறைகள். இரண்டில் ஒன்று இல்லாமல் இன்னொன்று இயங்க முடியாது. அப்படியிருக்க அறிவியலை தேர்ந்தெடுக்கப்போகும் மாணவர்கள் கணிதம் பயிலவேண்டாம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. வல்லுநர்களுடனும், நிபுணர்களுடனும் விவாதித்து அறிவிப்புகளை வெளியிடாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதையே இவ்வறிவிப்புகள் காட்டுகின்றன.

அடிப்படை கல்வியை மாணவர்கள் +1 மற்றும் +2-வில் பெறட்டும், அதற்கு அடுத்து தேவையான துறைகளை உயர்கல்வியில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கட்டும். அதுவே ஆரோக்கியமான செயல்பாடாக அமையும். அதைத் தவிர்த்து இதுபோன்ற அறிவிப்புகள் வேலைவாய்ப்பிற்குத் தான் மாணவர்களை உருவாக்குமே தவிர சமூக அக்கறையையும் பரந்துபட்ட அறிவையும் மாணவர்களுக்கு கற்பிக்காது.

  - வெங்கட் குருசாமி