அதிக வருமானம் தரும் நிறுவனச் செயலாளர் படிப்பு!
வழிகாட்டல்
கணக்கியல், கணிதம், பொருளாதாரம், வணிகவியல், வணிகக் கணிதம், கணினி போன்ற பாடங்களில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு நிறுவனச் செயலாளர் படிப்பு. தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா கல்விநிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகம் சென்னையிலும், கிளை அலுவலகங்கள் சேலம், திருச்சி, மதுரை, கோயம்பத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளன.
 ஒரு நிறுவனத்தின் மேலாண்மைக்கு உறுதுணை புரியும் செயலர் பதவிக்கான இப்படிப்பை முடித்தவர்களுக்கு, வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றில் நல்ல ஊதியத்துடன் உயர்பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு அயல்நாட்டு வணிக நிறுவனங்களில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.
கலை, வணிகம், அறிவியல் என்று எந்தத்துறை படித்தவர்களும் இப்படிப்பைப் படிக்கலாம். இப்படிப்பை முடித்தவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகராக, தனியாகத் தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் உண்டு. மேனிலை படிப்பு முடித்த பின்னரும், பட்டப்படிப்பு படிக்கின்றபோதும், படித்து முடித்த பின்னரும் தொலைதூரக் கல்வியாக இப்படிப்பைப் படிக்க வசதி உண்டு.
நிறுவனச் செயலர் (Company Secretary) 1) Foundation Programme (8 papers) 2) Executive Programme (8 papers) 3) Professional Programme (9 papers) 4) Pre-Membership Training 5) CS Membership - என்ற படிப்படியான நிலைகளைக் கொண்டது. கம்பெனி செக்ரட்டரி உறுப்பினரானபின், வேலை பெறவும், தொழில் தொடங்கவும் முயற்சிக்கலாம். CS Foundation படிப்பிற்கு விண்ணப்பிக்க +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். +2-ல் தேர்ச்சி பெற்றதற்கான ஆவணத்தை இவர்கள் படிப்பில் சேர்ந்த 6 மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படிப்பிற்கு 31.03.2019 அல்லது 30.09.2019-க்குள் பதிவு செய்யவேண்டும்.CS Executive படிப்பிற்கு ஃபைன் ஆர்ட்ஸ் (Fine Arts) தவிர எந்த ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். CS Foundation ICAI / CMA Foundation தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, 17 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்.இப்படிப்பிற்கு 26.02.2019 அல்லது 31.05.2020, 30.09.2020 ஆகிய தேதிகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
CS Foundation படிப்பிற்கு பதிவுக் கட்டணம் ரூ.4500 செலுத்த வேண்டும். இது தவிர E-learning கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும்.CS Executive படிப்பிற்கு CS Foundation தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.8500 வணிகவியல் பட்டதாரிகள் ரூ.9000, வணிகவியல் அல்லாத பட்டதாரிகள் ரூ.10,000, CAT (ICAI), அல்லது CMA Foundation தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.12500 செலுத்த வேண்டும். இவை தவிர, Prp Examination Test கட்டணம் ரூ.1000 மற்றும் Orientation Programme fee ரூ.600 செலுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மிலிட்டரி, பாரா மிலிட்டரி இவற்றில் பணிபுரிந்து காலமானவர்களின் விதவைகளுக்கு கட்டணச் சலுகை உண்டு. மேலும் முழு விவரங்களை அறிய https://www.icsi.edu, http://support.icsi.edu என்ற இணையதளப் பக்கங்களைப் பார்க்கவும்.
வசந்தி ராஜராஜன்
|