வில்வித்தையில் சாதனைகள் படைக்கும் சஞ்சனா!



சாதனை

நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் சாதனைப் படைப்பது பெருமைக்குரியது என்றால், சிறுவர் சிறுமியர் படைக்கும் சாதனைகள் பிரமிப்புக்குரியது. அப்படி ஒரு பிரமிப்பிலிருந்து மீள முடியாமல் செய்கிறார் வடசென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்துவரும் பிரேம்நாத், சுவேதா தம்பதியினரின் நான்கு வயது மகள் சஞ்சனா.

தனியார் பள்ளியில் யுகேஜி படித்துவரும் சஞ்சனா மழலைமொழி மாறாத இச்சிறுவயதில் எவரும் செய்யாத செயல்களைச் செய்து வில்வித்தையில் உலக சாதனை படைத்துள்ளார். வயதில் மூத்தவர்களுக்கே சவாலாக இருக்கும் தொடர் அம்பெய்தலை இச்சிறுமி சர்வசாதாரணமாக செய்து வில்வித்தையில் இரண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ளார். மேலும் பல்வேறு தேசிய, மாநில போட்டிகளிலும் மூத்த வயதினரை வென்று பதக்கங்களைக் குவித்துவருகிறார் வில்லின் உயரம்கூட இல்லாத சிறுமி.

சஞ்சனா வில்லையும், அம்பையும் கையிலெடுத்த காலத்திலிருந்து இன்று உலக சாதனை படைத்த கணம் வரை நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவரின் தந்தை பிரேம்நாத்.‘‘சஞ்சனாவுக்கு இரண்டு வயசு இருக்கும்போது பிறந்த நாள் பரிசாக உறவினர் ஒருவர் பிளாஸ்டிக் வில்லைப் பரிசாகக் கொடுத்தார்.

அன்றிலிருந்து மற்ற பொம்மைகளுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு எந்நேரமும் வில்லை வைத்துக்கொண்டுதான் விளையாடுவார். தூங்கும்போது கூட வில்லைத் தன் அருகில் வைத்துக்கொண்டுதான் தூங்குவார்.

ஒரு நாள் அந்த பிளாஸ்டிக் வில் உடைந்துபோனது. மிகவும் மனம் உடைந்துபோனாள் என் மகள். அப்படியிருந்தும் அந்த உடைந்த வில்லை விடவில்லை. உடைந்த இடத்தை துணியால் சுற்றி அதை வைத்து விளையாடுவார். அப்போதுதான் அவருக்கு வில், அம்பின் மேல் இருந்த ஆர்வம் புரிந்தது’’ என தன் மகளின் திறமையை உணர்ந்த தருணத்தை விளக்கிய பிரேம்நாத், சஞ்சனாவிற்கு முறையான பயிற்சி வழங்கவேண்டும் என அதன்பின்தான் முடிவு எடுத்ததாகக் கூறுகிறார்.

‘‘சஞ்சனாவின் ஆர்வத்தைக் கண்டு அவருக்கு முறையான பயிற்சி கிடைக்க பல்வேறு பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்றோம். இரண்டு வயதுதான் ஆகிறது. ஆகையால் பயிற்சி அளிக்க இயலாது என மறுத்தார்கள். சஞ்சனாவின் ஆர்வம் ஒருபக்கம், என்னால் அவருக்கு சிறந்த பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய இயலவில்லை என்ற ஆதங்கம் மறுபக்கம் என என்ன செய்வதென்றே தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் கராத்தே வீரரும், வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி பற்றி என் நண்பர் கூறினார். அவரிடம் சஞ்சனாவை அழைத்துச் சென்றேன்.

சஞ்சனாவை பார்த்து கொஞ்சநேரம் யோசித்த ஹுசைனி வில்லையும் அம்பையும் கொடுத்து எய்யச் சொன்னார். வில்லைக் கையில் வாங்கிய சஞ்சனா, சீரான வேகத்தில் தொடர்ச்சியாக அம்பு எய்தார். சஞ்சனாவின் திறனைக் கண்ட பயிற்சியாளர் ஹூசைனி, ‘‘சரி போதும் வில்லை கொடுப்பா’’ எனக் கூறியும் கொடுக்காமல் தொடர்ந்து அம்பு எய்தார். வில்லை வாங்கினால் அடம்பிடித்து கொடுக்க மறுத்தார். ‘வருங்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளையெல்லாம்  சாதாரணமாகச் செய்யும் வல்லமை சஞ்சனாவிற்கு இயல்பிலேயே உள்ளது. இந்த குழந்தைக்கு கண்டிப்பாக நான் பயிற்சி அளிக்கிறேன்’ என்றார். மறுநாளிலிருந்து பயிற்சி ஆரம்பித்தது’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

‘‘ஒரு சாதாரண மனிதரால் ஒரு நாளில் 72 அம்புகள் எய்ய முடியும். ஆனால், சஞ்சனாவோ பயிற்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே 72-லிருந்து 100, 150 என அதிகப்படியான அம்புகளை எய்தார். பள்ளி 12 மணிக்கு முடிந்ததும் பயிற்சிக்குச் சென்று ஏழுமணி வரை பயிற்சியெடுப்பார். இவ்வாறு மூன்று மாதம் பயிற்சி முடிந்தது. சஞ்சனாவின் திறனை பார்த்து மாஸ்டர் ஹூசைனி உலக சாதனைக்கு ஏற்பாடு செய்தார். 2018ம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று அடையாறில் இயங்கிவரும் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் உலக சாதனைக்கான முயற்சி நடந்தது.

மூன்றரை மணிநேரத்தில் ஆயிரத்து 111 அம்புகள் எய்யவேண்டும் என்பது இலக்கு. அப்போது சஞ்சனாவிற்கு மூன்று வயது. மூன்று வயது குழந்தையின் மென்மையான கையில் அம்பெய்து அம்பெய்து ரத்தம் வழிய 3 மணிநேரம் 27 நிமிடத்தில் இலக்கை அடைந்தார். ரத்தம் வழிவதைப் பார்த்து நாங்கள் நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் அம்பெய்து, உலகிலேயே குறுகிய நேரத்தில் இவ்வளவு அம்புகள் எய்த முதல் குழந்தை என்ற முதல் உலக சாதனை படைத்தார் சஞ்சனா.

அடுத்ததாக அவ்வருடம் அக்டோபரில் Indian Recurve Compound என்ற தேசிய அளவிலான போட்டி நடந்தது. அம்புகளில் Indian, Recurve, Compound மூன்று வகை உள்ளது. இதில் Indian உள்நாட்டிலும், Recurve மற்றும் Compound சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தப்படும் அம்புகள். தேசிய போட்டியில் கலந்துகொண்டு இம்மூன்று வகைகளையும் கையாண்டு அவரை விட மூத்தவர்களை வென்று கோல்டு மெடலை வென்றார். இச்
சிறுவயதில் இந்த அளவு சாதனையை யாரும் செய்ததில்லை எனக் கூறி இளம் சாதனையாளர் விருதும் அங்கு வழங்கப்பட்டது’’ எனக் கூறும் பிரேம்நாத், அடுத்த உலக சாதனைச் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என மாஸ்டர்
முடிவுவெடுத்ததாகக் கூறுகிறார்.

‘‘கண்பார்வை அற்றவர்களாலும் வில்வித்தையில் சாதனை செய்ய இயலும்  என்ற வகையில் சாதனை செய்ய வேண்டும் எனக் கூறி, மாஸ்டர் பயிற்சியைத் தொடர்ந்தார். அதன்படி கண்ணை மூடியவாறு ஒரு மணிநேரத்தில் 300 அம்புகள் எய்யவேண்டும் என்பதை இலக்காக கொண்டு சஞ்சனாவை மாஸ்டர் தயார்படுத்தினார். இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றது. விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் முன்னிலையில் கண்ணைக் கட்டியவாறு ஒரு மணிநேரத்தில் 307 அம்புகளை எய்து இரண்டாவது உலக சாதனை படைத்தார் சஞ்சனா.

முதல் முறை உலக சாதனை படைத்தபோது கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பம் செய்தோம். இவ்வளவு சின்ன வயதில் உலக சாதனை செய்தது நம்பமுடியாததாக உள்ளது எனக் கூறி மறுத்தனர். ஆனால், இம்முறை விண்ணப்பம் செய்தபோது அம்பெய்த வீடியோக்களை அனுப்பச் சொன்னார்கள். அனுப்பினோம்.

இம்முறை கண்டிப்பாக கின்னஸ் ரெக்கார்டு உறுதியாகிவிட்டது. அதற்கான பிராசஸ் நடந்துகொண்டிருக்கிறது’’ எனக் கூறும் பிரேம்நாத் சஞ்சனாவின் அடுத்தகட்ட முயற்சிகளையும், வருங்கால லட்சியத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்திய அரசின் அர்ஜுனா விருது வாங்குவதே சஞ்சனாவின் வருங்கால லட்சியமாக உள்ளது’’ என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் பிரேம்நாத். சஞ்சனாவின் லட்சியமும் குறிக்கோளும் ஈடேற நாமும் வாழ்த்துவோம்.

-வெங்கட் குருசாமி