நடை, உடை, பாவனை..!



உடல்மொழி

புதிய தொடர் -1


உடல் அசைவுகளால் வெளிப்படுத்திய என் கோமாளித்தனம் ஒன்றே எனக்குப் போதும். எல்லோரையும் விட என்னை உயரத்தில் வைத்து அழகுபார்த்தது அதுதான் - சார்லிசாப்ளின்
 - நடைமொழி

“என்னோட எல்லா உண்மைகளிலும் கொஞ்சம் பொய் இருக்கும், என்னோட எல்லா பொய்களிலும் கொஞ்சம் உண்மை இருக்கும்“ - இது சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம். உண்மையில் இப்படி Intensionனுடன் பழகுபவர்களும், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களுமே உலகில் அதிகம். மனதில் ஒன்றை வைத்து அதை வேறுவிதமாக திரித்து வெளிப்படுத்துபவர்களின் பேச்சைக் கொண்டு எது நிஜம்? எது நகல்? என்பதை எளிதில் கண்டறிந்துவிடவே முடிவதில்லை. அதே நேரம் திரித்துப் பேசுபவர்கள் தாங்கள் அறியாமலே, திரித்துத்தான் பேசுகிறார்கள் என்பதை அவர்களின் உடல் மொழி வெளிப்படுத்திவிடும். அதுதான் உடல்மொழி காட்டும் ஜாலம்.

மனம் நினைப்பதை மூளையின் செயல்பாட்டால், சூழ்நிலைகளின் காரணத்தால் வாய் மறைத்து வேறுவிதமாய் பேசினாலும், உடலின் ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடான உடல்மொழி ஒருபோதும் பொய் சொல்வதேயில்லை.உடல் ஏன் எப்போதும் தன் வெளிப்பாட்டு மொழியை உண்மையான முறையில் உணர்ச்சிகளை பிரதிபலிக்கிறது? அது ஏன் எதையும் மறைத்துப் பேசுவதில்லை? காரணம், மனித உடல்…

ஒரு விசித்திரமான வடிவம். அது அடையாளங்களால் வடிவமைக்கப்பட்டது. ஆசைகளின் விளைநிலமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் உடல் தன்னுள்ளிருக்கும் உயிரின் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக போராடிக்கொண்டேயிருக்கிறது. 

அதே நேரம் உடல் உணர்ச்சிகளின் வடிகாலாகஇருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உணர்ச்சிகளின் அடிமை என்றுகூட சொல்லலாம். எனவே, உடல் அசைவுகளின் வாயிலாக வெளிப்படுத்தும் செய்திகள் யாவும் உணர்ச்சிகளை சைகைகளாக, பாவனைகளாக மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொருவரின் உடல் மொழியும் அவர்களின் உணர்ச்சிகளை பிரதிபலித்துக் கொண்டேயிருப்பதால், உடல்மொழியை அறிந்துகொண்டு, மனித மனதின் உணர்ச்சி நிலைகளைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ள முடியும்.

உடல்மொழியைக்கொண்டு சக மனிதர்களின் மனநிலைகளைப் புரிந்துகொள்ள முடியும். அதன் பலனாக ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
மன உணர்ச்சிகளை உடல் தன்னிச்சையாக வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது என்பதை மனிதர்கள் உணர்வதே இல்லை.

உதாரணமாக பேசினால் கேட்கக்கூடிய தூரத்தில் இருக்கும் நண்பரைப் பார்த்து, “இங்க வாயேன்“ என்று சொல்லும்போது, வாய் வார்த்தைகளாக மொழியை உச்சரித்தாலும், உடல் கைகளை அசைய வைத்து ‘வா’ என்ற சைகையை தன்னிச்சையாக வெளிப்படுத்தும். தன்னிச்சையான செயல்பாடான இந்த உடல் மொழியைத்தான் மனிதர்கள் உணர்வதில்லை. ஆனால், எதிரில் இருக்கும் நண்பர் முதலில் கவனிப்பது உடல்மொழியைத்தான்.

அதை அவர் உள்வாங்கிக் கொள்ளும்போதே மொழியையும் கேட்கிறார். அந்த இடத்தில்தான் நீங்கள் அன்பாக, நட்பாக, பாசம் ததும்ப வெளிப்படுத்திய பாவனையையும், மொழியின் ஒலியிலிருந்த தன்மையையும் புரிந்துகொண்டு புன்னகையுடன் எதிர்கொள்கிறார். உணர்ச்சி நிலைகள் சமன்பட்டு நேசம் கலந்த பாவனை நட்பாக எதிர்கொள்ளப்படுகிறது. ஒரு சிறிய சொல்லும், செயலும்தான் இத்தனை விஷயங்களைக் கடத்துகிறது.

உள்ளங்கை நெல்லிக்கனி உள்ளதை உள்ளபடி வெளிக்காட்டும் என்று படித்திருக்கிறோம். அந்த நிஜம் ஒருபுறம் இருக்கட்டும். நெல்லிக்கனியை வைத்திருக்கும் உள்ளங்கையை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? என்று ஒரு சுவாரஸ்ய ஆய்வை இங்கிலாந்தில் நடத்தினார்கள். சிலர் கைகளில் நெல்லிக்காயை வைத்து புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படங்களைக் காட்டி எது உங்கள் கை என்றபோது, 5 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களால் மட்டுமே தங்களின் உள்ளங்கைகளை சரியாக அடையாளம் காட்ட முடிந்தது.

 காரணம், உடலின் அசைவு மொழியை அறிந்துகொள்ள மக்கள் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. அதை மேலும் நிரூபிக்கும் விதமாக பிரான்சில் இன்னொரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். சில ஆண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தங்களின் மேல் சட்டையை கழற்றிக்கொண்டு நடந்து வரச்சொன்னார்கள். ஒரு திருப்பத்தில் எதிரில் குறைவான உயரத்தில் கழுத்துக்கு கீழான உடல் பகுதி மட்டும் தெரியும் விதத்தில் ஒரு கண்ணாடியை மாட்டி வைத்தார்கள்.

நடந்து வந்த ஆண்களால் தங்கள் உடலையும், உடல் அசைவையும் கண்ணாடியில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒவ்வொருவரும் கண்ணாடியைப் பார்த்தபடியே திரும்பினார்கள். கண்ணாடியில் பார்த்த பிம்பத்தை அடையாளம் தெரிந்ததா என்று கேட்டபோது 95% ஆண்கள் இல்லை என்றே சொன்னார்கள். “யாரோ ஒரு அசிங்கமான ஆள் நடந்து போன மாதிரி இருந்திச்சி’’ என்று குறிப்பிட்டதுதான் ஹைலைட்.

கழுத்துக்கு கீழ் தாங்கள் எப்படி இருக்கிறோம், என்ன தோற்றத்தில் இருக்கிறோம் என்று பெரும்பாலான ஆண்களுக்கும், நிறைய பெண்களுக்கும் தெரிவதில்லை என்பதே கசப்பான நிஜமாக இருக்கிறது. (சந்தேகம் இருந்தால் கண்களை மூடி உங்களை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள்)மனித மனம் சிக்கலான கூறுகளைக் கொண்டது.

மனதின் ஆழத்தில் சிந்தனைகளின் ஓட்டங்கள் எந்த அலைவரிசையில் இருக்கிறது என்பதையும், மொழியின் வாயிலாக பேச நினைப்பதையும், பாவனைகளின் வாயிலாக சொல்ல வருவதையும் முழுவதுமாக வெளிப்படுத்த ஒருபோதும் அது உத்தரவிடுவதே இல்லை. அப்படியிருக்கையில் நம்மோடு பழகுபவர் மனதில் என்ன நினைக்கிறார்? என்ன சொல்ல வருகிறார்? அவருடனான உறவை எப்படி சிக்கலின்றி சுமூகமாக மாற்றிக்கொள்வது? என்பதை சமூகத்தில் கலந்து பழகும் ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

அந்த வகையில் சக மனிதர்களின் உணர்வு நிலைகளை, மனதின் உண்மையான எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்புரியும்போதுதான் உறவுகள் பலப்பட்டு, சிக்கல்கள் ஏதுமின்றி சீரானதாக மாறுகிறது.பரிணாம வளர்ச்சியில் மனிதன் பல ஆசைகளை வளர்த்துக்கொண்டான். அப்படி வளர்த்துக்கொண்ட ஆசைகளிலேயே மிகவும் சுவாரஸ்யமான ஆசை என்ன தெரியுமா?

உடை வழி ைகக்குட்டை / Handkerchief

மனிதனுக்கு ஆடை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு கைக்குட்டை என்ற Handkerchief ம் முக்கியமானது. மடித்தாலும், விரித்தாலும் சதுரமாகவே இருந்து கைக்கு அடக்கமாக இருக்கும் கைக்குட்டை, முகத்தில் மலரும் வியர்வையை ஒற்றி எடுப்பதற்கும், இருமல் ஜலதோஷத்தினால் ஏற்படும் உபாதைகளான தும்மல், வியர்வைகள் வெளிப்படும் நேரங்களிலும் அவற்றை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது. உடலை சுத்தப்படுத்துவதற்கான கருவியான  கைக்குட்டையை ஆண் எப்போதும் தனது பாக்கெட்டிலும், பெண் தனது உள்ளங்கைகளுக்குள்ளும், கைப்பைகளுக்குள்ளும் வைத்துக்கொண்டபடியே இருக்கிறார்கள்.

இன்றைக்கு Hanky என்று சுருக்கமாக அழைக்கப்படும் Handkerchief - COUVIR (to cover) & CHEF (head) என்ற இரண்டு ஃபிரெஞ்ச் வார்த்தைகளிலிருந்து உருவாகி வந்துள்ளது. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ரிச்சர்ட்டுதான் கைக்குட்டையைக் கண்டறிந்ததாக நம்பப்படுகிறது. 15ம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்துகளில் பட்டு மற்றும் விலை உயர்ந்த ரகங்களில் கைக்குட்டைகளை பிரபுக்களும், அவர்களது மனைவிமார்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் ராணி எலிசபெத் தங்க-வெள்ளி ஜரிகைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்ட உயர்ரக கைக்குட்டைகளைப் பயன்படுத்தினார். அவர் காலத்தில்தான் கைக்குட்டைகள் உலகப்புகழ் பெற்றது. ராணியின் கைக்குட்டைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

பிரான்ஸ் இளவரசி Marie Antoinette சதுர வடிவிலான கைக்குட்டையின் அழகில் மயங்கியதைக் கண்ட மன்னர் 16ம் லூயிஸ் கைக்குட்டைகள் சதுர வடிவில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். பெண்களுக்கு இணையாக ஆண்களும் கைக்குட்டைகளை உபயோகிக்கத் தொடங்க, 20ம் நூற்றாண்டு காலகட்டத்தில், கைக்குட்டை ஆண்களின் கோட் பாக்கெட்டில் ஏறி (Pocket Square) ஒரு அலங்காரப் பொருளாக மாறிக்கொண்டது.

இப்போது குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக கார்ட்டூன் உருவங்கள் பொறித்த கைக்குட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. மனிதனுக்கு அதிக அளவு பயன்படும் கைக்குட்டை, அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக, மூன்றாவது கையாகவே இருந்துகொண்டிருக்கிறது.

ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தில்  Handkerchief பிரதானமான பொருளாக சித்திரிக்கப்பட்டது. நாடகத்தில் Othello, Desdemonaவுக்கு காதலின் அடையாளமாகத் தந்தது கைக்குட்டையைத்தான்.  அதனால்தானோ என்னவோ கைக்குட்டை இன்றுவரை உலக காதலர் மத்தியில் ஒரு தூதுவராக உலவிக்கொண்டிருக்கிறது. அலங்கார உடையாக மனிதர்களுக்கு அறிமுகமான கைக்குட்டை இன்றைக்கு அத்தியாவசிய உடைகளில் ஒன்றாக மாறிப்போனதுதான் காலமும் அதன் கோலமும் செய்த அழகு.

- தொடரும்

ஸ்நிவாஸ் பிரபு