குழுவாகவும் சேர்ந்து சுயதொழில் தொடங்கலாம்!



வழிகாட்டல்

படிப்புக்கேற்ற வேலையா? வேலைக்கேற்ற படிப்பா?

இந்தியாவில், தமிழ்நாடு பல வகைகளில், பல துறைகளில், தனித்து உயர்ந்து நிற்கிறது. அதிலும், மகளிர் நலன், மகளிர் முன்னேற்றம் சார்ந்த செயல்பாடுகளில் தமிழ்நாடு, காலம் காலமாகச்சிறந்து விளங்குகிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்கள், 10 முதல்20 வரை எண்ணிக் கையில், ஒன்றுசேர்ந்து ஒரு குழு அமைத்துக்கொள்ளலாம். தங்களின் சிறுசிறு சேமிப்புகளை ஒன்றுசேர்த்து, முதலீடு செய்து ஏதேனும் தொழில் தொடங்கலாம். இவ்வாறு நடத்தப்படும் ‘மகளிர் சுயஉதவிக் குழு’, மத்திய /மாநில அரசுகள் வழங்கும் நிதிக்கடன், நிதி மானியம் மற்றும் பல்வேறு சிறப்புச் சலுகைகளைப் பெறமுடியும்.

சுயஉதவிக் குழுக்கள், ஆண்களாலும் நடத்தப்படலாம். பாலினப் பாகுபாடு இல்லை. ஆனாலும், பெண்கள் சுய வருமானம் கொண்டவர்களாக, பொருளாதாரத்தில் ‘யாரையும்’ சார்ந்து இருத்தல் கூடாது என்கிற உயரிய நோக்கத்துடன், மகளிர் சுயஉதவிக் குழுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு அறவே இல்லை; வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்று பல இளைஞர்கள், அவர்களுடைய பெற்றோரின் குரலாக தொடர்ந்து கேட்க முடிகிறது. இவர்களின் ஏக்கம், நியாயமானதுதான். ஆனால், இதே சமூகத்தில், இதே சூழலில் இருந்துதான், பல சாதனையாளர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

சிறுகச் சிறுகச் சேமித்து, சிறிய அளவில் ஒரு தொழில் தொடங்கி, ஒரு குழுவாக இணைந்து பணிபுரிவதில், பல ஆதாயங்கள் இருக்கின்றன. ஒருவரே மொத்தப் பளுவையும் சுமக்க வேண்டியது இல்லை; வேலைப் பளு, நிதிச்சுமை இரண்டையும்தான் சொல்கிறோம். லாபத்தில் பங்கு போடுவதா? என்று மனதைச் சுருக்கிக்கொள்ளாமல், இழப்பு வந்தாலும் ஈடு செய்துகொள்ளலாம் என்கிற நிதர்சனத்தைப்புரிந்துகொள்கிற அகன்ற இதயம் இருந்தால் போதும். குழுவின் வெற்றி, எளிதாகிவிடும்.

ஓரளவுக்குத் தங்களுக்குள் பணம் சேர்ந்துவிட்டால், ‘நபார்டு’ வங்கியை அணுகலாம். (NABARD - National Banks for Agriculture and Rural Development) இது, விவசாயம், கிராமப்புற முன்னேற்றத்துக்காகப் பணிபுரிகிற அரசு வங்கி. இதனுடன், ‘மகளிர் சுயஉதவிக்குழு வங்கி இணைப்புத் திட்டம்’ மூலம், சுயஉதவிக் குழுக்களுக்கு, குறு, சிறு நிதி உதவி கிடைக்கும்.

இதற்கான வழிமுறைகள், விதிமுறைகள் வெகு எளிது. கடுமையான நிபந்தனைகள், புரிந்துகொள்ள முடியாத சிக்கலான நடைமுறைகள்… எதுவுமே இல்லை. ‘நபார்டு’ மட்டுமன்றி, Small Industries Bank of India (இந்திய சிறுதொழில் வங்கி)யும் சுயஉதவிக் குழுக்களுக்கு உதவிபுரிந்து வருகிறது. Village Resource Centres கிராமத் திறன் மையங்கள் மற்றும் ‘ராசி’ - RASI (Rural Access to Services thro Internet) இணையம் மூலம் கிராமப் பகுதிகளை இணைக்கும் திட்டம் ஆகியனவும், சுயஉதவிக் குழுக்களுக்கு உதவுகின்றன.

இவை மட்டுமல்லாமல், ‘தமிழ்நாடு மகளிர் வளர்ச்சித்திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலமும், சுயஉதவிக்குழுக்களுக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படுகின்றன. குழுவில் உள்ள எல்லோருமே வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கவேண்டும். என்றாலும், 20% முதல் 30% வரை, பொருளாதாரத்தில் சற்றே உயர்நிலையில் இருப்பவர்களை அனுமதிக்க, விதிவிலக்கு இருக்கிறது. அதாவது, 20 பேர் கொண்ட ஒரு குழுவில், 4 முதல் 6 பேர் வரை, ‘மற்றவர்கள்’ இருக்கலாம்.

குழுவின் பொதுப்பெயரில், ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும். குழுவின் வரவு, செலவுகள் இதன் வழியே நடக்க வேண்டும். இந்தக் குழு, வாரம் (அ) இரு வாரத்துக்கு ஒரு முறை, முறையாக சந்திப்பு நடத்த வேண்டும். கலந்துரையாடி, தீர்மானங்கள் நிறைவேற்றலாம்.

வணிக ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தையும், கணக்குப் பதிவேட்டில் எழுதிக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கின் ‘பாஸ் புக்’, உறுப்பினர்களின் வருகைப் பதிவேடு, சந்திப்புக் கூட்டங்கள் பற்றிய விவரங்கள் ஆகியனவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.குழு தொடங்கி, ஆறு மாதங்கள் தொடர்ந்து செயல்படுகிறபோது, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (Block Development Officer), குழுவைத் தர வரிசைப்படுத்தி, வங்கிக் கடன் உதவிக்குப் பரிந்துரை செய்வார்.  ‘Capacity Building Programme’ மற்றும் ‘A & R Training’ உள்ளிட்ட திறன் வளர்ப்புப் பயிற்சிகள், சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இது ஏதோ, அரசாங்கத் திட்டத்துக்கான விளம்பரம் என்று எண்ணிவிட வேண்டாம். நமக்கான உதவிகளை, திட்டங்களை நாம் முழுமையாகப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அது, ‘தவறான’ நபர்களால் முறையற்ற வழிகளில் கையாளப்பட சாத்தியம் ஆகிறது.

வேலை வாய்ப்பு அருகிவருகிற காலத்தில், எங்கெல்லாம் நமக்கான சுயவேலை வாய்ப்பு, சுயதொழில் முனைப்புக்கு வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம், அவற்றை எல்லாம், முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்; இயன்றவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே, ஆங்காங்கே உள்ள இளம்பெண்கள், இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, ஒரு குழு அமைத்து, தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினால், ஒவ்வொரு கிராமமும், ஒரு தொழில் மையமாக மாறிவிடும்.

இத்துடன், வேலை வாய்ப்பு தொடர்பான அடிப்படைத் தகவல்கள் கொண்ட பாகம் நிறைவு அடைகிறது. மேலும் ஆழமான பல அம்சங்களுடன், மீண்டும் சந்திப்போம். வாழ்த்துகள்!