கேலிகிராஃபி கலை மூலம் கைநிறைய சம்பாதிக்கலாம்!



சுயதொழில்

நவீன மயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் அனைவரும் வெளியே வேலைக்குச் சென்றுதான் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே ஏதேனும் ஒரு சுயதொழில் அல்லது கைத்தொழில் செய்வதன் மூலம் குடும்பத்திற்கு ஒரு சிறு வருமானத்தை ஈட்டித்தர முடியும். மேலும் பெண்கள் தங்களது சின்னச் சின்ன தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதற்கும் இந்தப் பணம் உபயோகப்படும்.

ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் உழைக்கும் மன உறுதியும் முயற்சியும் உள்ளவர்கள் சிறிய அளவில் தொடங்கும் சுயதொழில் ஒரு நாள் பெரிய அளவில் வளரவும் வாய்ப்புண்டு. எனவே, கிடைக்கும் ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தொழில்தான் கேலிகிராஃபி என்கிறார் கிறிஸ்டினா ரஞ்சன்.

‘‘கற்ற வித்தையை காசாக்க தெரிந்தவர்களால் மட்டுமே இன்று கடைத்தேற முடிகிறது. மற்றபடி முறையான திட்டமிடல் இல்லாமல் காசு பணம் போட்டு பெரிய அளவில் ஒரு தொழிலோ நிறுவனமோ தொடங்கினால் காற்று வாங்கிக் கொண்டுதான் இருக்கும். அந்த வகையில் சுயதொழில் செய்ய நினைப்பவர்கள் தனக்கு ஆர்வமுள்ள ஒரு கலையைக் கற்றுக்கொண்டு முயற்சித்தால் கைநிறைய சம்பாதிக்கக்கூடிய தொழில்கள் ஏராளம் உள்ளன. அதுபோன்ற ஒரு தொழில்தான் கேலிகிராஃபி எனும் சித்திர எழுத்து வடிவமைப்பு’’ என்று அனுபவத்தை பகிர்ந்துகொண்ட கிறிஸ்டினா மேலும் தொடர்ந்தார்.

‘‘இத்தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. வீட்டின் ஒரு மேஜை மற்றும் நாற்காலி போதும். முதலீடு என்று பார்த்தால் பேனா, பென்சில், இங்க் என பொருட்கள் வாங்க சுமாராக 1,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் இருந்தாலே போதுமானது.பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் மற்றும் தனக்கான தனித்துவத்தைக் காட்ட நினைக்கும் இடங்களில் இத்தொழிலுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அதற்கான சான்றிதழை அழகிய சித்திர எழுத்து வடிவங்களால் அமைத்துக் கொடுக்கலாம்.

மாணவ, மாணவியருக்கு புராஜக்ட் ஒர்க்குகள் செய்துகொடுக்கலாம். காகிதம், மெட்டல், மரம் உள்ளிட்ட எந்தப் பொருட்களில் வேண்டுமானாலும் இக்கலையைப் பயன்படுத்தலாம். அதற்கு தகுந்தாற்போல் நிரந்தர வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. மார்க்கெட்டிங் திறமை இருந்தால் இத்தொழிலில் மாதம் ரூ.15 ஆயிரத்தில் தொடங்கி 50 ஆயிரம் வரை கூட வருமானம் ஈட்ட முடியும். மாணவ, மாணவியர்களுக்கு எழுத்துக்கலைப் பயிற்சி அளித்தாலே ஒரு நிரந்தர வருமானத்தை ஈட்ட முடியும்’’ என்று கூறும் கிறிஸ்டினா கேலிகிராஃபி என்றால் என்ன என்பதையும் விளக்கலானார்.

‘‘கேலிகிராஃபி (Calligraphy) எனப்படும் சித்திர எழுத்துகளை வடிப்பது ஒரு அருங்கலை. கலைநயமும் அழகுணர்வும் மிகுந்த எழுத்துக்களை வடிவமைத்
தலுக்கு கற்பனைத்திறனும் பொறுமையும் தேவை. கணினி, கையடக்கக் கணினி மற்றும் அலைபேசி பயன்பாட்டால் மக்கள் எழுதுவதையே மறந்துவிட்டனர். இந்நிலையில் இப்பயிற்சி எழுதுவதில் ஆர்வத்தையும், கலையுணர்வையும் மக்களிடத்தில் தூண்டுகிறது. எனது கலைக்கூடத்தின் மூலம் இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்தான் எனது சொந்த ஊர். ஓவியக்கலைஞரான நான் ஓவியம் சார்ந்த தொழில்களைக் கற்றுக்கொண்டதால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரி மற்றும் சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறேன். எனது கலைக்கூடத்தில் 15 வகையான சித்திர எழுத்துகளின் உருவாக்கம் கற்றுத்தரப்படுகிறது.

கேலிகிராஃபி எனப்படும் கிரேக்க சொல்லுக்கு ‘அழகுற எழுதுதல்’ எனப் பொருளாகும். அடர்ந்த அல்லது மெல்லிய தூரிகைக் கோடுகளால் உருவாக்கப்படும் எழுத்துகள் அழகு மிகுந்தவையாகும். மேலைநாடுகளில் மட்டுமின்றி கீழை நாடுகளிலும் பிரசித்திபெற்ற வரைகலையாகும் இது. இச்சித்திர எழுத்துகளில் பல வகையான வரிவடிவங்கள் கையாளப்படுகின்றன.

அரேபிய அலங்கார எழுத்துகளை பெரும்பாலான இஸ்லாமிய நினைவுச் சின்னங்களில் காணலாம். இன்றைய உலகில் அலங்காரமான இச்சித்திர எழுத்துகள் எங்கு நோக்கினும் முகிழ்ந்து எழுகின்றன. அழைப்பிதழ்கள், சான்றிதழ்கள், நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், வீட்டின் சுவர்களில் மாட்டப்படும் அழகுப் பொருட்கள் ஆகிய அனைத்திலும் இந்த சித்திர எழுத்துகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன’’ என்று கேலிகிராஃபியின் பயன்பாடு குறித்து விவரித்தார்.

‘‘சித்திர எழுத்துகளின் உருவாக்கம் தனிநபரின் தேவைகளைப் பொறுத்து மாறுகின்றன. ஆனால், அனைவரின் விழைவும் எழுத்துகள் அழகாயிருக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்கும்.  எழுத்துகளையும் படங்களையும் இணைத்து உருவாக்கும் கிராபிக் வடிவமைப்பும் இவ்வகையைச் சார்ந்ததே. பழங்காலத்தில் இவ்வரைகலைக்கு இறகுகளும், மூங்கில் இழைகளும் பயன்படுத்தப்பட்டன.

மேலைநாட்டுக்கலாசார சித்திர எழுத்துகளில் மையூற்றி எழுது கலங்களும், தொட்டு எழுதும் பேனாக்களும், சுருள் வடிவ தொட்டெழுது பேனாக்களும், இரட்டை பென்சில்களும், குறியீட்டு எழுது கலங்களும் பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்ட எழுதுகலத்தின் முனைகள் பல வடிவானவை. கூர்மையான முனைகள், கோளவடிவ முனைகள், சுவரொட்டி எழுது முனைகள், சாய்ந்த எழுத்துக்கான முனைகள், அலங்கார முனைகள் பயன்படுத்தப்பட்டன.

தகுந்த காகிதம், சித்திர எழுத்துக்கான சிறப்பு மை (உலோக உப்புக்கள் கலந்தவை), அரேபிய பிசினில் கரைக்கப்பட்ட மைகா தூள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. கீழைச் சித்திர எழுத்துகளை உருவாக்க நான்கு முக்கிய பொருட்கள் பயன்பட்டன. வட்டமுனை கொண்ட தூரிகை (முயல்
மற்றும் குதிரை ரோமத்தால் ஆனவை), மை கட்டி, மை பட்டை மற்றும் கொரியாவில் கையால் தயாரிக்கப்படும் சிறப்பு வகைக் காகிதம், வைக்கோல் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் அரிசிக் காகிதம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

நவீன சித்திர எழுத்து உருவாக்கத்தில் நீள்வடிவ எழுத்துகலத்தில் பொருத்தப்பட்ட கூர்மையான எழுதுமுனை பயன்படுத்தப்படுகிறது. 54 டிகிரி கோணத்தில் கையாளப்படும் எழுதுகோலால் தரப்படும் வேறுபட்ட அழுத்தங்களால் எழுத்துகள் உருவாக்கப்படுகின்றன. பாரம்பரிய சித்திர எழுத்துகள் உருவாக்கத்தில் 30 டிகிரி மற்றும் 45 டிகிரி போன்ற பல்வேறு கோணங்களில் எழுதுகோல் கையாளப்படுகிறது.

சித்திர எழுத்துக் கலையினால் பல நன்மைகள் உருவாகின்றன. கலைநயம், உணர்ச்சி மற்றும் விரல்களின் இயக்கம் ஆகியவை இணைந்து செயல்படுவதால் கலைஞனின் கவனம் அதிகரிக்கிறது.wகையெழுத்தை அழகாக்குவதோடு மட்டுமல்லாமல் இது ஒரு கலை என்பதால் ஓய்வு நேரப் பணி போலச் செயல்படுகிறது. மனதை அமைதிப்படுத்த இக்கலை உதவுகிறது. இது ஒரு புதிய உத்தி என்பதால் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது தொடர்பாக நடத்தப்படும் ஒவ்வோர் பணிமனையும் எனக்கு புதிய கற்றல் அனுபவத்தைத் தருவதாக உள்ளது’’ என்று தன்னம்பிக்கையூட்டுகிறார் கிறிஸ்டினா.

தமிழகத்தில் இக்கலை ஆரம்ப நிலையிலேயே உள்ளது. செல்ல வேண்டிய தூரம் நெடியது. இந்நிலையில் கிறிஸ்டினாவின் கலைக்கூடம் இக்கலையின் மேம்பாட்டில் பெரும்பணி ஆற்றிவருகிறது. இவரது கலைக்கூடத்தில் மருத்துவர்கள், பத்திரிகையாளர், கணக்குத் தணிக்கையாளர், பொறியியலாளர், வங்கி அலுவலர், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் எனப் பல தரப்பினரும் இக்கலையைக் கற்றுவருகின்றனர் என்பது இக்கலைக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

-  தோ.திருத்துவராஜ்.