புதிதாய்ப் பிறப்போம் சரித்திரம் படைப்போம்!புதிய தொடர்

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை தொடர்-1

 வலிகளால் நிரப்பப்பட்டதுதான் வாழ்க்கை


ஒவ்வொரு மனிதனின் முடிவான இறுதியான ஒட்டுமொத்தமான ஒரே   நோக்கம் என்னவென்றால் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே. கவலையை முறியடித்து எப்போதும் மகிழ்ச்சியாகவே வாழ விரும்பினால் வெற்றியைத் தன்வசப்படுத்த   எப்போதும் பெரிதாகவே சிந்தியுங்கள்.

வாழ்வில் முன்னேற மட்டுமல்ல… நாம் ஒவ்வொரு நாளும் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். இதற்காக பெரிய திட்டங்களை நம்பிக்கையுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும். பெரிய நம்பிக்கைகளை அடைய நமக்கு தடையாக இருப்பது நமது வாழ்க்கை சூழ்நிலை அல்ல, எதிர்மறைச் சிந்தனைகளையே தொடர்ந்து நினைப்பதுதான். அதனால்தான் எதை நாம் நினைத்து பயந்துகொண்டே இருக்கிறோமோ அது நடந்துவிடுகிறது.

இதற்கு மாறாக வெற்றியையே பெரிய அளவில் கனவு கண்டு “நடந்துவிடும் நடந்துவிடும்” என்ற நம்பிக்கை குறையாமல் உறுதியுடன் சிந்தித்தால் போதும் நிச்சயம் நல்லதே நடந்துவிடும். தொடர்ந்து நல்ல எண்ணங்களையும், விரும்பும் வெற்றியையும் சிந்தித்தால் அவை உறுதியாக நிஜமாகிவிடும். புத்தர் ‘வலிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார்.

வலிகளைஏற்றுக்கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காணமுடியாது. வலி வந்தபோதுதான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடுதான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டதுதான் இந்த வாழ்க்கை. உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும்போதுதான் அழகான உடற்கட்டைப் பெறமுடிகிறது. இப்படித்தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக்கொள்ளும்போதுதான் வளமான வாழ்க்கை வாழமுடியும்.

உலகின் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ‘வாழ்க்கை கடினமானதுதான், ஆனால் வெற்றிக்கான வழிஅங்கேதான் இருக்கிறது’ என்கிறார். இதை நாம் பட்டாம்பூச்சியின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம். சின்ன பட்டாம்பூச்சி ஒன்று கூட்டிலிருந்து வெளியேறும்போது அவஸ்தையுடன்தான் பயணத்தை ஆரம்பிக்கிறது. அப்படி ஒரு கூட்டிலிருந்து வரும் பட்டாம்பூச்சியின் வேதனையைக் கண்ட ஒரு மாணவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு அது வெளியேறும் ஓட்டையை பெரிதுபடுத்தினான்.

 அது சுலபமாக வரட்டும் என்று உதவினான் அது சுலபமாக வெளிவந்தது, மாணவன் மகிழ்ந்தான். ஆனால், பட்டாம்பூச்சி பறக்கவில்லை, வெளியில் வந்ததும் அதனால் பறக்கமுடியவில்லை. அதன் இறகுகளை அசைக்கக்கூட முடியவில்லை. கூட்டிலிருந்து சிறிய துளை வழியே வெளியேற சிரமப்படும்போதுதான் அது தன் இறகுகளை அசைத்து அசைத்துப் பழகுகின்றது. அதற்கு வாய்ப்பே இல்லாமல் வசதி செய்து கொடுத்துவிட்டதால் இறகுகளை அசைக்க அதற்குத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல அப்போது அதன் உடலிலிருந்து ஒரு திரவம் சுரக்கிறது, அதுவே அதன் பாதுகாப்புக் கவசம். இந்தத் திரவம் இன்றிப் பட்டாம்பூச்சி வாழமுடியாமல் போனது.

அதுபோல்தான் வாழ்க்கையிலும் கஷ்டங்கள்தான் நம்மை வலுப்படுத்துகின்றன. துயரங்கள்தான் நம்மைச் செம்மைப்படுத்துகின்றன. அப்படி செம்மைப்படுத்தப்பட்ட ஒருவரை மாணவர்கள் மட்டுமல்ல இளைஞர்கள் மட்டுமல்ல நாம் அனைவருமே கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.
நம் வாழ்க்கை பயணத்தில் விபத்து எப்போது நேரும் என யாருக்கும் தெரியாது. ஆனால், நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவுக்கு விபத்து சிலருக்கு நேரும்.

அப்படி தனக்கு ஏற்பட்ட விபத்தை மன உறுதியால் வென்ற ஒரு சாதனை மங்கைதான் மாளவிகா. கும்பகோணத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் மாளவிகா. அப்பாவின் அலுவலக பணி காரணமாக ராஜஸ்தான் மாநிலம் பிக்கானிரில் வளர்ந்தார். படிப்பு, விளையாட்டு மற்றும் கதக் நடனம் என்று சிறந்து விளங்கினார். 2002ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறை நாளில் வெளியில் கிடந்த ஒரு பொருளை தன் அறைக்குள் எடுத்துவந்து விளையாடியபோது, அது திடீரென வெடித்தது. இந்த சம்பவத்துக்கு ஆறு மாதத்திற்கு முன் அருகில் நடந்த வெடி விபத்தில் சிதறிய குண்டு அது.

பெற்றோர்கள் சத்தம் கேட்டு பதறியடித்துச் சென்று பார்த்தபோது மாளவிகா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது அம்மா தன் மகளின் கைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக எண்ணி கதறினார். அப்பா தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். 80 சதவீதம் ரத்தத்தை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

மருத்துவர்கள் இனி மாளவிகாவால் நடக்க முடியாது என கைவிரித்தனர். குடும்பமே அதிர்ந்துவிட்டது. வெடிப்பொருட்களின் ஆயிரக்கணக்கான துகள்கள் கால்களில் புதைந்திருந்ததால், கடுமையான வலி, வேதனை ஏற்பட்டது. பிறகு மேல்சிகிச்சைக்கு சென்னையில் குடியேறி, அறுவை சிகிச்சை மருத்துவப் பரிசோதனை என 18 மாதங்கள் கழிந்தன.

உடல்நிலை தேறி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த சூழ்நிலையில் நண்பர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாரானபோது மாளவிகா தேர்வு எழுத முடியவில்லையே என தவித்தார். இருந்தபோதும் மனஉறுதியுடன் அருகிலுள்ள பயிற்சி மையத்தில் தனித் தேர்வு எழுத விண்ணப்பித்தார். வீட்டிலிருந்தே பாடங்களைப் படித்தார். ஒவ்வொரு தேர்வுக்கும் அவரது தந்தை அவரை தூக்கிக்கொண்டு பயிற்சி மையத்திற்கு செல்வார். தேர்வின்போது மாளவிகா சொல்ல மற்றொருவர் உதவியுடன் தேர்வு எழுதினார்.

தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டபோது அவருடைய வாழ்க்கையே மாறியது. தேர்வில் 483 மதிப்பெண்கள் எடுத்து கணிதத்திலும் அறிவியலிலும் 100 மதிப்பெண்கள் பெற்று தனித்தேர்வு எழுதியவர்களில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். இது பத்திரிகையில் செய்தியாக வந்தது. செய்தியை அறிந்த அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள், மாளவிகாவை அழைத்து பாராட்டி “நீ இன்னும் சாதிக்க வேண்டும்”என்று ஊக்கப்படுத்தினார். ‘‘என்னுடைய ஒவ்வொரு துயரத்தின்போதும் என் தாய் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

துன்பம் வரும்போது எனக்குச் சிரிக்கும் கலையைக் கற்றுக்கொடுத்தார். என்னைப் பரிதாபமாகப்பார்த்தவர்கள் எல்லாம் என்னைப் பாராட்டியபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய ஊனம் எனக்குத் தடையில்லை. என்னுடைய பலம் என்ன என்று தெரிந்துகொண்டு, செயற்கை கை, கால்களைப் பொருத்திக்கொண்டு பள்ளிக்குச் சென்று படித்தேன்’’ என்கிறார் மாளவிகா.

12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள்எடுத்து டெல்லியிலுள்ள புகழ்பெற்ற ஸ்டீபன் கல்லூரியில் இளநிலைப் பொருளாதார படிப்பும், முதுகலையில் சமூகப்பணி படிப்பையும் முடித்து சென்னையிலுள்ள சமூகப்பணி கல்லூரியில் பிஎச்.டி. படிப்பை படித்தார். பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருந்து அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.

இதன் மூலம் ஐ.நா. மாநாட்டில் பங்கேற்று இந்தியா சார்பாக மாற்றுத்திறனாளி முன்னேற்றம் பற்றி உரையாற்றி அனைவராலும் பாராட்டு பெற்றார். மாளவிகாவை கௌரவப்படுத்தும் விதமாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் சிறந்த சாதனைப் பெண்மணிக்கான விருதை ஜனாதிபதி வழங்கினார்மாளவிகாவின் வாழ்வில் நடந்தது போல வேறு யாருக்காவது நடந்திருந்தால் விபத்தின் சுவடுகளிலே வருந்தி வீட்டின் மூலையில் முடங்கிப்போயிருப்பார்கள். ஆனால், வலியைக் கடந்து கனவுகளை நோக்கி பயணித்து சாதித்த சாதனை மங்கைதான் மாளவிகா. ‘‘சாதாரண மக்கள் தங்கள் கஷ்டம் குறித்து சொல்லும்போது நான் எனக்கு நேர்ந்த விபத்து குறித்து மகிழ்ச்சியடைவேன். இல்லையெனில் என்னை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை நான் இழந்து ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன்’’ என்கிறார்.

இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் நேற்றைய துயரங்களுக்காக வருந்தாமல், இன்று, இப்போது, இந்த கணத்தில் முயன்றால் கூட வெற்றி பெற முடியும் என்பது தான். புதுவாழ்வு மலர புதிதாய் சிந்தியுங்கள்… செயல்பட தொடங்குங்கள். வாழ்த்துகள்!

(புதுவாழ்வு மலரும்)