அடிப்படை அறிவியலை போதிக்கும் கல்லூரி மாணவன்!



சேவை

எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு ‘Aim, Procedure, Equipment Requird மற்றும் ஏதாவது ஒரு Reading என இவை மட்டும் மனப்பாடம் செய்துகொண்டு தேர்வு எழுதினால் போதும், Experiment எதுவும் செய்ய வேண்டாம் எஞ்சினியரிங் லேப் எக்ஸாமில் தேர்ச்சி பெற்றுவிடலாம்’ என்ற ஃபார்முலாவைத்தான் இந்தியாவின் பொறியியல் கல்லூரிகள் நான்கு வருடமும் கற்றுக்கொடுக்கின்றன. இப்படி மனனம் செய்து அப்படியே காப்பி அடிப்பதால்தான் கேம்பஸ் இன்டர்வியூவில் கேட்கப்படும் துறை சார்ந்த எளிய கேள்விகளுக்குக்கூட பதில் சொல்லமுடியாமல் மாணவர்கள் திணறுகின்றனர்.

‘‘இந்தியாவில் பொறியியல் பயிலும் மாணவர்கள் 25 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் படிப்புக்கு தகுந்த பணிக்கு ஏற்றபடி உள்ளனர் என்கிறது NASSCOM ஆய்வு. அப்படியானால் மீதமுள்ள மாணவர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு என அனைத்துமே கேள்விக்குறியாகிறது. செயல்வழிக் கற்றலை முற்றிலும் மறுத்து மதிப்பெண் எடுப்பதை மட்டுமே அனைத்துக் கல்லூரிகளும் போதிப்பதின் விளைவே இன்றைய பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம்’’ என அழுத்தமாக சொல்கிறார் சென்னை அக்னி காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படித்துவரும் அரிஹரன்.

‘‘அதுமட்டுமில்லை இந்திய பள்ளிக் கல்வி முறையிலும் குறைபாடு உள்ளது. ஒன்பதாம் வகுப்பில் செமிகண்டக்டர் எனும் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பாடம் ஒன்று உள்ளது. ஒன்பதாம் வகுப்பில் உள்ள பெரிய பாடமும் கடினமான பாடமும் இதுதான். மேலும் தேர்விற்கு பத்து மதிப்பெண்ணுக்கு மேல் இப்பாடத்திலிருந்து கேள்வி கேட்கப்படாததால் ஆசிரியர்கள் அதை ஓரங்கட்டிவிட்டு மற்ற பாடத்தில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், அந்தப் பாடம்தான் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், பயோமெடிக்கல் உள்ளிட்ட ஆறு வகையான பொறியியல் படிப்புகளுக்கான அடிப்படை. அதை தெரிந்துகொள்ளாத மாணவன் சர்வ நிச்சயமாக பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறமுடியாது.

இங்கு மட்டும் நல்ல மார்க் வாங்கிடு காலேஜ் போய் ஃப்ரியா சுத்தலாம் என்ற மனநிலையைத்தான் பள்ளிகளும் பெற்றோர்களும் மாணவர்கள் மத்தியில் விதைக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள்தான் என்னை ‘KNEWTON’ அமைப்பை உருவாக்கச் செய்தது’’ என்ற அரிஹரன் இவ்வமைப்பின் மூலம் பொறியியல் மாணவர்களுக்கு செயல்வழிf;கற்றல், நவீன தொழில்நுட்பம் மற்றும் வீடியோக்கள் மூலம்  உண்மையான பொறியியல் படிப்பை கற்றுக்கொடுக்கிறார்.

டிசம்பர் 3ம் தேதி முதல் பத்தாம் தேதி வரை ஏழு நாள் முதல் ஒர்க்‌ஷாப் நடத்தப்பட்டது. சென்னை மற்றும் தஞ்சாவூர் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ப்ராஜெக்ட் மற்றும் வீடியோக்கள் மூலம் செயல்வழிக்கற்றல் முறையில் பொறியியலின் அடிப்படை கற்றுக்கொடுக்கப்பட்டது. இவ்வமைப்பு தற்போதுதான் உருவாக்கப்பட்டது. ஆகையால் அடுத்தடுத்த ஒர்க்‌ஷாப்பில் பள்ளிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு அடிப்படை அறிவியலையும், பொறியியலையும் கற்றுக்கொடுக்க உள்ளோம்’’ எனும் அரிஹரன் பத்தாம் வகுப்பிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துவருகிறார்.

தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்பிலேயே காற்று மாசுபடுவதின் விளைவுகளை உணர்ந்து Carbon Monoxide Inhibiting Device (CID) எனும் கருவியை கண்டுபிடித்தார். அகில உலக அறிவியல் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச அமைப்பு (International Society for Scientific Research and Development - ISSRD) தமிழகத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக அரிஹரனின் கருவியைத் தேர்ந்தெடுத்தது. ‘‘சுவாசக்கோளாறு, ஆஸ்துமா மற்றும் கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும் காற்று மாசுபாட்டின் விளைவுகளைக் கண்டு அதிர்ந்தேன். அதை ஏற்படுத்தும் வாகனங்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தேன்.

இக்கருவியை கார் அல்லது பைக்கில் இணைத்தால், உங்கள் வாகனத்தைத் தொடர்ந்து கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்கும். அதன்படி ஆயில் மாற்றம், எஞ்சின் கோளாறு போன்ற பராமரிப்பு செய்ய போதிய கால அவகாசம் கொடுத்து எச்சரிக்கை செய்யும். இரண்டு அலர்ட்டுகளில் நீங்கள் பராமரிப்பு செய்யவில்லை என்றால் மூன்றாவது அலர்ட்டில் அக்கருவி வாகனத்தின் எஞ்சின்கண்ட்ரோல் யூனிட்டை கட்டுப்படுத்தி உங்கள் வாகனத்தை இயக்கமுடியாமல் செய்துவிடும். சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் இக்கருவி தமிழகத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆனால், தற்போதுதான்இந்திய அரசாங்கம் காற்று மாசுபாட்டின் விளைவை உணர்ந்து  டீசல் எஞ்சின் வாகனங்களைத் தடைசெய்துள்ளது’’ என்று கூறும் அரிஹரன் தூர்த ர்ஷனில் ஒளிபரப்பாகும் ஏழாம் அறிவு எனும் அறிவியல் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருப்பூரின் நொய்யல் ஆறு இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பு சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையும், விவசாய நீர்த் தேவையையும் பூர்த்தி செய்துவந்தது. ஆனால், அதிக சாயத்தொழிற்சாலைகளின் வரவால் நொய்யல் ஆறு தற்போது முழுமையாக மாசடைந்துள்ளது. நீரை நெருங்கினாலே கொடிய துர்நாற்றம் வீசும். ஆண்களின் விந்தணு குறைபாடு, பெண்களில் அதிகரித்துவரும் மலட்டுத்தன்மை என ஆற்றின் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுத்தி வருவதை அறிந்து இதை அடிப்படையாக வைத்து தூர்தஷன் நிகழ்ச்சிக்கான ப்ராஜெக்ட்டை செய்தேன். ஆறுமாதம் சாயத்தொழிற்சாலைகளை நேரில் சென்று கவனித்தேன்.

சாயக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது அதிக பண செலவு ஆவதால் அதனை முறையாக செய்யாமல் தொழிற்சாலைகள் கைவிடுகின்றன. எனவே, ஏற்கனவே இருக்கும் மறுசுழற்சி முறையில் சில மாற்றங்களை செய்தேன். ஆய்வு முடியும் தறுவாயில் இருந்தபோது சில அரசியல் தலையீடுகளால் அந்த ப்ராஜெக்டை என்னால் தொடரமுடியவில்லை.’’ என்று கவலையை வெளிப்படுத்தினார் அரிஹரன்.

‘‘பரமக்குடிதான் எங்க சொந்த ஊர். விவசாயம் பொய்த்துப் போனதால் திருப்பூரில் குடியேறினோம். அப்பா எலக்ட்ரீசியன். அம்மாவுக்கு பனியன் கம்பெனியில் தையல் வேலை. அரசுப் பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு படித்தேன். எங்கள் பள்ளிக்கு முன்பாகத்தான் அப்பா வேலை செய்யும் கடை இருந்தது. அதனால் பள்ளி முடிந்ததும் அப்பா கடைக்கு போய் அப்பா வேலை செய்வதை பார்ப்பேன். அப்படித்தான் நான்காம் வகுப்பு படிக்கும்போது எலக்ட்ரானிக்ஸ் பற்றி பிராக்டிக்கலாக கத்துக்க ஆரம்பிச்சேன். எலக்ட்ரானிக்ஸ் மீது ஆர்வம் அதிகமானது. அதனால் பள்ளி அளவில் நடைபெறும் அறிவியல் போட்டிகளில் கலந்துகொண்டு கண்டுபிடிப்புகளை செய்ய ஆரம்பித்தேன்.

எனது கண்டுபிடிப்புகளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா முன்னிலையில் விளக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் ஆய்வு, அறிவியல் போன்ற பக்கங்களை லைக் செய்து அது தொடர்பான விஷயங்களை அப்டேட் பண்ணிகிட்டேன். சோஷியல் மீடியாவை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்திக்கொண்டேன். அப்படி சோஷியல் மீடியாவில் பார்த்துதான் 2017ம் ஆண்டுக்கான 57 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்ட ‘International Youth Committee’ (IYC)யும் இந்திய அரசும் இணைந்து நடத்திய ‘South Asian youth Summit’-ல் விண்ணப்பித்தேன்.

சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் செயல்பாடுகளை செய்த இளைஞர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வகையில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற 12 இளைஞர்களில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அங்கு கண்ட இளைஞர்களின் உந்துதலால்தான் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கில் ‘KNEWTON’ எனும் அமைப்பை உருவாக்கி தொடர்ந்து செயல்பட்டுவருகிறேன்’’ என்கிறார் அரிஹரன். இதுபோன்ற இளைஞர்கள் பெருகினால் நிச்சயம் நம் சமூகம் மேம்பாடடையும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

 - வெங்கட்