நல்ல விஷயம் 41 அறிய வேண்டிய மனிதர் : திவ்யா சூர்யதேவரா

அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ். மிகவும் பிரசித்திபெற்ற ‘செவர்லே’ கார் இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். இந்த உலகப் புகழ்பெற்ற மல்டி நேஷனல் கம்பெனியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்க இருக்கும் திவ்யா சூர்யதேவரா சென்னையைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரியது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை முடித்த இவர், தனது 22வது வயதில் அமெரிக்காவுக்குச் சென்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார்.

 முதலில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கியில் பணியாற்றிய இவர், பின்னர் ஓராண்டு கழித்து தனது 25வது வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அந்த நிறுவனத்தின் பல துறைகளிலும் பணியாற்றியவர், நிறுவனத்தின் கார்ப்பொரேட் ஃபைனான்ஸ் துறையின் வைஸ் பிரசிடென்ட்டாக உயர்ந்தார். 2016ஆம் ஆண்டின் கிரெய்ன்ஸ் டெட்ராய்ட் பிஸினஸின் 40 வயதுக்கு உட்பட்ட 40 வெற்றியாளர் பட்டியலில் இடம்பிடித்தார் திவ்யா. ‘‘இவரின் அனுபவம் எங்கள் நிறுவனத்தின் நிதிசெயல்பாடுகள் மற்றும் தொழில்வளர்ச்சியில் பல வருடங்களாக மிகச்சிறந்த மாற்றங்களை தந்தது.

திவ்யா நிதித் துறை தலைமைப் பொறுப்புக்கு வருவது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் உயர்த்தும்” என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா தெரிவித்தார். சிறு வயதில் தந்தையை இழந்த திவ்யா அம்மாவின் அரவணைப்பில்தான் இத்தனை உச்சங்களையும் தொட்டிருக்கிறார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர் பொறுப்பு, குடும்பம் என இரண்டையும் சமன்படுத்தி உலகின் முன்மாதிரி பெண்கள் பட்டியலில் திவ்யா சூர்யதேவரா இடம்பிடித்துள்ளார். மேலும் இவரைப்பற்றி தெரிந்துகொள்ள https://en.wikipedia.org/wiki/Dhivya_Suryadevara

2 பார்க்க வேண்டிய இடம் : மாமண்டூர் குகைகள்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள மாமண்டூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது மாமண்டூர் குகைகள். பல்லவர் காலத்திய குடைவரைக் குகைகளான இக்குகைக் கோயில்கள் இயற்கையாக அமைந்த குன்றினை குடைந்து ஏற்படுத்தப்பட்டது. இது பெரிய ஏரியின் கரையில் அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  

இக்குடைவரைகள் ஏழாம் நூற்றாண்டின் பல்லவ அரசன் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டதாக இங்கு காணப்படும் கல்வெட்டுகள் கூறுகின்றன. மேலும் முதல் குகையில் காணப்படும் முதன்மைக் கடவுள் நரசிம்மர் மற்றும்  இரண்டாவது குகை சைவ ருத்திரவலீசுவரம் குகை என பிந்தைய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது. இந்தக் குகைக் கோயில்களில் உள்ள குடைவரைச் சிற்பங்கள் உயிரோட்டமுள்ளவையாகவும் காண்போரை கவரும் வண்ணமும் பிரமிக்கத்தக்க வகையிலும் உள்ளன. மேலதிக தகவல்களுக்கு https://ta.wikipedia.org/wiki/மாமண்டூர்_குகைகள்
3 படிக்க வேண்டிய புத்தகம் : கடன் - தாஸ்


அன்றாட செலவுகள் முதல் அடுக்குமாடி வீடு வரை அனைத்து தேவைகளுக்கும் கைகொடுப்பது கடன் திட்டங்கள்தான். கடன் வாங்குவது தவறாக கருதப்பட்ட காலம் மறைந்து வீட்டில் தொடங்கி நாட்டு நலன் வரை அனைத்துக்கும் கடன் வாங்கும் நிலை இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபர்கள் எதற்கும் பயன்படுத்தும் பர்சனல் லோன்களும், நினைத்த நொடியில் செலவழிக்கும் மனோபாவத்தை வளர்க்கிற கிரெடிட் கார்டுகளும் தனியார் வங்கிகளின் மார்க்கெட்டிங் உத்திகளில் ஒன்றாகிவிட்டது. இந்த உத்திகளில் சிக்கி லோனும் கிரெடிட் கார்டும் வாங்கிய பலர், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் சூத்திரத்தை மட்டும் அறியவே முடியவில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு ‘கடன்’ என்கிற இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இனி கடன் வாங்க வேண்டிய அவசியத் தேவை உள்ளவர்களுக்கும் கூட இந்நூல் ஓர் அர்த்தமுள்ள அகராதி. உங்கள் கவலைகளுக்கு காரணமான கடன்களைத் தீர்க்க வழிகாட்டும் வகையில் இந்நூலை தொகுத்துள்ளார் தாஸ். என்ன தேவைக்கு எந்த கடனை எப்படி பெறுவது, பெற்ற கடனை எப்படி அடைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை அறிய இந்நூல் நிச்சயம் உதவும். (வெளியீடு:  சூரியன் பதிப்பகம், பிளாட் எண் 170, 10, முதல் பிரதான சாலை, நேரு நகர், பெருங்குடி, சென்னை - 96) விலை: ரூ.80. தொடர்புக்கு:
044-4220 9191)

4 வாசிக்க வேண்டிய வலைத்தளம் : www.engkal.com

தமிழ், இங்கிலிஷ், தெலுங்கு, கன்னடம், டச்சு எனப் பல மொழிகளில் இயங்கும் இத்தளமானது உலகச் செய்திகள், நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, சித்தமருத்துவம், சுற்றுலாத்தலங்கள், ஜோதிடம் , டெக்னாலஜி என பன்முகத்தன்மையோடு செயல்படுகிறது. மேலும் கூடுதலாக சமையல் குறிப்புகள், கணினி ஷார்ட்கட் கீஸ், வேலைவாய்ப்புகள் போன்ற பிரிவுகளிலும் தகவல்கள் பதிவிடப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் பதிவிடப்படும் தகவல்கள் அனைத்தும் அன்றைய நாளின்படி அப்டேட் செய்யப்பட்டு அனைவரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தளம்.