பாராட்டுகளுக்குரிய பதிவுகள்!
தவறாமல் தமிழக கல்வித்துறை செயல்பாடுகளின் நிறைகுறைகளைப் பட்டியலிடும் கட்டுரைகள் அருமை. அவ்வகையில் தமிழகத்தில் ஒருவர்தான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவரா?, ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடரும் முறைகேடுகள்! மற்றும் பள்ளிக்கல்வி நிதி திருப்பி அனுப்பப்படுவது சரியா? போன்ற கட்டுரைகளை கல்வியாளர்கள் பார்வையில் வழங்கியுள்ளது சிறப்பு. -செ.ஜெயபாலன், கோபிச்செட்டிபாளையம்.
உயர்கல்வியில் என்ன படிக்கலாம், எந்த படிப்புக்கு எதிர்காலம் உண்டு என்பது போன்ற தகவல்களை வழங்கும் கல்வி-வேலை வழிகாட்டியின் பதிவுகள் பாராட்டுக்குரியவை. உதாரணமாக, பாராமெடிக்கல் படிப்பு மாணவர் சேர்க்கை, நிலக்கரி சுரங்கப் பணி வாய்ப்பு, பிரதான் மந்திரி கிசான் சம்பாடா கடன் திட்டம் போன்ற பயனுள்ள தகவல்களைப் பட்டியலிடலாம். - ரா.கீர்த்தனா, சிவகாசி.
சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோர் ஆகலாம் என்ற எண்ணத்தை சாமானியருக்கும் உருவாக்கும் வகையில் ஒவ்வொரு இதழிலும் வரும் சுயதொழில்கள் குறித்த வழிகாட்டுதல் அபாரம். பேப்பர் கவர் தயாரிப்புக்கான சிறப்பம்சங்கள், முதலீடு, வரவு செலவு, லாபம் என புள்ளிவிவரங்களோடு வழங்குவது தனிச்சிறப்பு. -ஆர்.ஈஸ்வரன், வேலூர்.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈகோவின் தன்மையையும் ஈகோ எந்தெந்த வடிவங்களில் வெளிப்படும் என்பதையும் படம்பிடித்துக் காட்டும் விதமாக உடல்… மனம்… ஈகோ! கட்டுரை உளவியல் ரீதியில் பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு வரியும் நம்மையே நமக்கு அடையாளம் காட்டும்படியாக உள்ளது. - எம்.ஜாஃபர், கோவை.
|