குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு!



சுயதொழில்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஏராளம் உள்ளன. அதிலும், குறிப்பாக சிறிய முதலீடுகளில் வீட்டிலிருந்தே செய்யும் தொழில்களும் உள்ளன. அந்த வகையில், ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு இன்றைக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில், இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், வீட்டில் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டுகளில் ரசாயனம் கலக்கப்படாததால் நம் உடலுக்கு எந்தவித கெடுதல்களும் ஏற்படுத்தாது. சென்னை சோழிங்கநல்லூர் பாரதிநகர் பகுதியில் ‘மூன்  ஹோம்மேட்’ சாக்லேட் என்ற பெயரில் இத்தொழிலை செய்து நல்ல வருமானம் வருவதாகக் கூறும் ரேவதி கருணாகரனிடம் பேசினோம்.

‘‘சாக்லேட்டைப் பொறுத்தவரை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் உணவுப்பொருள். இதற்கு சீசன் என்பதெல்லாம் கிடையாது. ஆண்டு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும். வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்தபோது ஹோம் மேட் சாக்லேட் குறித்து கேள்விப்பட்டதால் அதன் மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. இதற்கான பயிற்சி கந்தன்சாவடியில் மம்தா குப்தா என்ற பெண்மணி கொடுப்பதை அறிந்து, அங்கு சென்று 2 நாட்களில் நேர்த்தியாகக் கற்றுக்கொண்டேன். இதுபோல் பல இடங்களில் தனியார் மற்றும் அரசு அமைப்புகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

முதலில் சாக்லேட் தயாரித்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தேன். அவர்கள், கடையில் உள்ளதை விட மிகவும் நன்றாக உள்ளது என்று கூறவும், மேலும் ஆர்வம் அதிகமானது. இதனைத் தயாரித்து அக்கம்பக்கத்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவற்றுக்கு கொடுத்தால் நல்ல வருமானம் வரும் என்று எனது மருமகள் பிரியாதான் எனக்கு வழிகாட்டினார். அவள் சொன்னபடியே செய்தேன், இன்றைக்கு எங்கள் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டுகள், பல கடைகள் எனது கஸ்டமர்கள்’’ என்றவர், முதலீடு மற்றும் தயாரிப்பு முறை குறித்தும் விவரித்தார்.

‘‘பெரிய அளவிலான முதலீடு தேவையில்லை. நமது வீட்டு சமையலறைதான் தயாரிப்புக்கான இடம். தண்ணீர் கொதிக்க வைக்க ஒரு பாத்திரம், சாக்லேட் கலவை செய்ய ஒரு பாத்திரம் மற்றும் சாக்லேட் வடிவமைப்புக்கான மோல்டுகள், பேக்கிங் பேப்பர் ஆகியவைதான் தயாரிப்புப் பொருட்கள். மூலப்பொருட்கள் என்று பார்த்தால், டார்க் சாக்லேட் பார், மில்க் சாக்லேட் பார், முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் மற்றும் ட்ரை ஃப்ரூட் வகைகள். இவை எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயிலும், அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாயிலும் வாங்கிக்கொள்ளலாம்’’ என்றவர் தயாரிப்புமுறை பற்றி விளக்கினார்.

‘‘சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் ரெண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதேபோல் ட்ரை ஃப்ரூட்ஸும் நறுக்கி வைக்கவும். ட்ரை ஃப்ரூட்ஸுக்கு பதிலாக, நம்ம விருப்பத்துக்கு என்ன வேண்டுமென்றாலும் சேர்க்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அந்தப் பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களைக் கொட்டவும். கேஸ் ஸ்டவ்வின் தீயை ஒரே சூட்டில் வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் சூடானது மேலிருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

கீழ் வைக்கும் பாத்திரத்தைவிட, மேல் வைக்கும் பாத்திரம் பெரிதாக இருக்க வேண்டும், அப்போதுதான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக ஈசியாக இருக்கும். சாக்லேட் கலவையைக் கலக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் கலவை கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் குறைந்தால் ஊற்ற வேண்டும். சாக்லேட் பீஸ்களைப் போட்ட பின் ஸ்பூனால் கட்டியில்லாமல் நன்கு கலக்கவேண்டும். சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வரவேண்டும். பின்னர், சாக்லேட் எந்த வடிவத்தில் செய்யப்போகிறோமோ அந்த மோல்டில் உள்ள ட்ரே எடுத்து அதனுள் ஊற்றவேண்டும்.

ட்ரேயில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்ப வேண்டும். அதன்மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் போடவும். பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்றவேண்டும். இந்த ட்ரேயை எடுத்து ஃப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்தால் சுவையான ஹோம்மேட் சாக்லேட் தயார். எடுத்து சரிகை பேப்பரில் பேக்கிங் செய்து விற்பனைக்கு கொடுத்துவிடலாம். இதே சாக்லேட் தயாரிப்பை பெரிய அளவில் செய்ய நினைத்தால் அதற்கான கருவிகள், இட வசதி, வேலை ஆட்கள் எல்லாம் கொண்டு தயார் செய்யலாம். பெரிய அளவில் சாக்லேட் தயாரிப்பில் இறங்க பெரிய முதலீடு தேவைப்படும். அந்த முதலீட்டை வேண்டுமானால் அரசு தொழில் கடன் திட்டங்கள் மூலம் பெறலாம்.

சாதகமான அம்சம்கள்

பெரிய அளவில் இடவசதியோ, முதலீடுகளோ தேவையில்லை. ஒருசில நாட்கள் பயிற்சியே போதும். மூலப்பொருட்கள் தருபவர்களே பயிற்சியும் தருகிறார்கள். மூலப் பொருட்கள் எளிதாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைக்கும்.

பாதகமான அம்சங்கள்

சரியாக பேக்கிங் செய்யாவிட்டால் காற்று புகுந்து சாக்லேட் வீணாகிவிடும்.ரசாயனம் கலக்கவில்லை என்பதால் 3 மாதங்களுக்குள் இதனை உபயோகப்படுத்தவேண்டும். இல்லையென்றால் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. முன்னணி சாக்லேட் நிறுவனங்களுடன் போட்டிபோட்டு மார்க்கெட்டிங் செய்வது. எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ் அம்சம். வழக்கமான சாக்லேட்களை மட்டுமே தராமல், புதுப்புது சுவைகளை எல்லோரையும் கவரும் வகையில் பேக்கிங் செய்து, வித்தியாசமான டிசைனில் சாக்லேட்களை செய்து விற்றால் வெற்றி நிச்சயம்.

கொஞ்சம் வித்தியாசமான வடிவமைப்புகளில் சாக்லேட்களை நாம் தயாரிக்க வேண்டும். சாக்லேட் தயாரிக்க தேவையான விதவிதமான அச்சுகள்  சந்தையில் கிடைக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கேற்ப சாக்லேட்கள், ஹெல்த்கேர் சாக்லேட்கள் என வெளிநாடுகளில் சாக்லேட் சந்தைகள் வேகமாக மாறிவருகிறது. சந்தையில் பிராண்டட் சாக்லேட்கள் பல இருந்தாலும் வீட்டில் தயாராகும் சாக்லேட்களுக்கு தனி மவுசு இருக்கிறது. உதாரணமாக, சொல்வதென்றால் கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்கள் பெரிதும் விரும்பி வாங்கும் பொருள் சாக்லேட்தான். எனவே, தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம்.

ஒரு கிலோ சாக்லேட் தயார் செய்ய ரூ.300 மட்டுமே செலவாகும். இவற்றை ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்ய முடியும். ஒரு நாளைக்கு வீட்டு வேலைகளுக்கு இடையே சாதாரணமாக ஒரு நபர் 5 கிலோ சாக்லேட்டுகள் வரை தயார் செய்யலாம். ஒரு கிலோவுக்கு தோராயமாக ரூ.300 லாபம் என வைத்துக்கொண்டாலும் ஒரு நாளில் ரூ.1,500 வரை லாபம் கிடைக்கும். ஒரு மாதத்தில் 25 வேலைநாட்கள் என வைத்துக்கொண்டால், ரூ.37,500 கிடைக்கும்.


தற்போது இதற்கான பயிற்சிகள் ஒருசில இடங்களில் வழங்கப்பட்டுவருகிறது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்களுக்கு நானும்கூட பயிற்சியும், வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகிறேன்’’ என்றார் உதவும் உள்ளத்துடன். அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, அதேநேரத்தில் எதிர்காலத்தில் மிகச்சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய, இந்தத் தொழிலில் இருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி அனுபவ பயிற்சி பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
 
- தோ.திருத்துவராஜ்