ஆன்லைன் மோசடிக்கு ஆளாகாதீர்கள்..!



எச்சரிக்கை

இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒன்றாக உள்ள தொழில்நுட்பம் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என்றால் மிகையாகாது. தூங்கும் முன்னும் தூங்கி எழுந்ததும் பெரும்பாலானோர் பார்ப்பது வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்தான். இதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. அதை ஆராய்ந்து பயன்படுத்தினால் மட்டுமே நமக்கு பாதுகாப்பாக இருக்கும். கைகடிகாரம் முதல் கடன் வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைனில் சாத்தியமாகிவிட்ட காலம் இது. மருத்துவ குறிப்புகள் முதல் மக்கள்நல சேவை வரை பல வாட்ஸ்-அப் குரூப்கள் வலம் வருகின்றன.

அந்தவகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்புரிவோருக்கு வழிகாட்டுவதாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்-களில் குரூப் ஆரம்பித்து அது
குறித்த தகவல்கள் பதிவிடப்படுகிறது. அதில், சிலர் தவறான நோக்கத்துடன் உட்புகுந்து, ஏமாற்றுவேலைகளில் ஈடுபடுகின்றனர். அதில் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பூபதி அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நம்மிடம் கூறும்போது, ‘‘எனக்கு சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் சீராப்பள்ளி கிராமம். தொழில் நிமித்தமாக ஐதராபாத்தில் வசித்து வருகிறேன். நான் வேலை செய்து வந்த தனியார் கம்பெனியை எந்தவித முன்அறிவிப்புமின்றி மூடிவிட்டார்கள்.

வேலை ஏதாவது கிடைக்குமா என்று சோஷியல் நெட்வொர்க் மூலம் தேடியபோது முகநூலில் ஒரு செய்தியைப் பார்த்தேன். பிரபலமான நிறுவனமான அமேசான் மற்றும் கூகுள் பெயரில் ஒரு விளம்பரத்தை வைத்து அந்த நிறுவனத்தில் வேலை இருக்கிறது மாதம் ரூ.20,000 முதல் 25,000 கிடைக்கும், விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் என ஒரு மொபைல் எண் மற்றும் அமேசான் பெயரில் ஒரு Gmail Id இருந்தது. முயற்சி செய்து பார்க்கலாம் என்று அந்த நம்பருக்கு போன் செய்தபோது போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் மெயில் செய்தேன். என் விவரத்தை கமென்ட் பாக்ஸில் வாட்ஸ்-அப் நம்பர் கொடுத்துவைத்தேன்.

மறுநாள் காலை எனக்கு ஒரு தகவல் வந்தது. வாட்ஸ்-அப் மூலம் அந்த நபர் பெயர் கோபிநாத் என்று கூறினார். நான் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தில் கடந்த 5 வருடமாக ஆன்லைன் மூலம் பணி செய்து வருகிறேன்.  கூகுள் மூலம் தினமும் 300 ரூபாய் முதல் 1500 ரூபாய் சம்பாதிக்கலாம் என்றார். எப்படி என்று கேட்டதற்கு, கூகுள் ஜாப் Id என்று ஒரு ஆப் இருக்கிறது, அதில் நான் உங்களுக்கு சில கடைகள் மற்றும் உணவகங்கள் மற்றும் பல பிரபல நிறுவனங்கள் முகவரி மற்றும் லேண்ட்மார்க் அண்ட் தொலைபேசி எண் மற்றும் வெப்சைட் தருவேன், அதை காப்பி அண்ட் பேஸ்ட் செய்தால் போதும் என்றார்.

ஒரு successfuly address complete register செய்தால் 60 ரூபாய் கிடைக்கும். அதில் எனக்கு 10 ரூபாய் கமிஷன் போக உங்களுக்கு 50 ரூபாய் கிடைக்கும். ஒரு Id மூலம் 6 செய்யலாம். ஒருநாளைக்கு 300 ரூபாய் 5 Id வைத்திருந்தால் 1500 ரூபாய் சம்பாதிக்கலாம் என்றார். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்றபோது, அது ஒன்றும் பிரச்னை இல்லை, நான் அனுப்பும் தகவலை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு அதை அப்படியே அதில் எழுதினால்போதும் என்றார். நானும் சரி என்றேன். பின்னர், முதலில் நீங்கள் இரண்டு Id மூலம் ஆரம்பிக்க வேண்டும், பின்னர் அடுத்த வாரம் 5 Id எடுத்து நடத்துங்க என்றார்.

அதற்கு முதலில் 1000 ரூபாய் பணம் என் வங்கி கணக்கில் போட்டுவிடுங்கள் என்றார். என்னிடம் 500 ரூபாய் தான் இருக்கிறது என்றபோது, ஒன்றும் பிரச்னை இல்லை அதை அனுப்பிவிடுங்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு Idக்கு 600 ரூபாயை, நான் உங்கள் வங்கி கணக்கில் போட்டுவிடுவேன் பின்னர் நீங்கள் கட்டிய 500 ரூபாய் பணத்தில் 300 ரூபாய் ரிட்டர்ன் செய்துவிடுவேன் என்றார். அவர் கூறியதை நம்பி 500 ரூபாய் அனுப்பினேன். பின்னர், அவர் போன் செய்து, பணம் வந்துவிட்டது நான் மதியம் 3.30 மணிக்கு போன் செய்வேன். இதை சரியாக செய்தால் உங்களுக்கு அமேசான் டெலிவரி டீலர்ஷிப் 5 வருடம் எடுத்து தருவதாக கூறினார்.

போன் வரும் என்று காத்துக்கொண்டிருந்தேன், நேரம் கடந்தது, போனை சுவிட்ச்ஆஃப் செய்துவிட்டார். அதன்பின்னர் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. எனக்கு நடந்ததைப்போல் இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது. எனக்கு இழப்பு 500 ரூபாய்தான் பரவாயில்லை. யாராவது 5,000 ரூபாய் 10,000 ரூபாய் போட்டு ஏமாற்றப்பட்டிருந்தால் எப்படி வேதனைப்பட்டிருப்பார்கள்’’ என்றார். தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டி வரும் வெற்றிவிடியல் சீனிவாசனிடம் இப்பிரச்னைக் குறித்து கேட்டோம். ‘‘ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் என்பார்கள்.

நாம் தொடர்ந்து இப்படியான மோசடிகளைச் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் பார்த்து வருகிறோம். பல லட்சங்களை ஆன்லைனில் ஏமாந்தவர்கள் உண்டு. உதாரணமாக சொல்வதென்றால் ஈமு கோழி முதல் ஈ காயின் வரை ஆன்லைனில் செய்து வருகிறார்கள். இது தொடர்ந்து நடைபெறுகிறது. நாம் முதலில் திடீர் பணக்காரர் ஆக ஆசைப்படக்கூடாது. உழைப்பு இல்லாமல் ஊதியம் கிடைக்கும் என்று சொன்னாலே ஏதோ தில்லுமுல்லு இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். கணக்கில் பணம் போடச் சொல்லும்  விஷயங்களை நாம் வேறு விதமாகக் கையாளலாம். ஒரு 50 ரூபாயை நாம் செலுத்த வேண்டும்.

அதை அந்த நபர் திருப்பி நம் கணக்கிற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவரது கணக்கு விவரம் முற்றிலுமாக நமக்குத் தெரியவரும். இது கொஞ்சம் பலம் சேர்க்கும். ஒரு புதிய செயல் திட்டமும் வரவேண்டும். இதைப் போல் புகார்வந்து அது உண்மை என நிரூபிக்கப்பட்டால் அந்த நபர் தன் ஆதார் எண்ணை வைத்து வேறு எந்த வங்கியிலும் கணக்கே ஆரம்பிக்க முடியாதவாறு செய்ய வேண்டும். ஒருவரை முன்பின் தெரியாதபோது அவருக்கு நாம் தொகையை அனுப்புவது எப்படி சரியாகும்? இதைப் போன்ற வாய்ப்புகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். அதேபோல் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்துவிட்டால் அசிங்கப்படாமல் பொதுவெளிக்கு தெரிவியுங்கள். நிச்சயம் உங்களால் சிலர் காப்பாற்றப்படுவார்கள்’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்.