கேம்பஸ் நியூஸ்



செய்தித் தொகுப்பு

* செய்தித் தொகுப்புமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!

மத்திய சமூகநீதித் துறை அமைச்சகம், 11ம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் ஃபார் டிசெபில்டு ஸ்டூடண்ட்ஸ்) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் உயர்கல்விக் கனவை பூர்த்தி செய்யும் விதமாக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தேவையான தகுதிகள் :

40 சதவீதத்திற்கும் அதிகமான குறைபாடுள்ள மாணவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்பதால் அதற்கான சான்றிதழை அரசு அதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைநிலைக் கல்வி மூலம் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை :

கல்விக் கட்டணத்திற்காக ஆண்டிற்கு ரூபாய் 1.50 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும். விடுதியில் தங்கி படிப்பவர் என்றால் பராமரிப்பு செலவிற்காக மாதம் 1,600 ரூபாயும், மற்றவருக்கு 750 ரூபாயும் வழங்கப்படும். இவை தவிர, ஆண்டிற்கு 4 ஆயிரம் ரூபாய் தரப்படும். மேலும், புத்தகங்கள் வாங்குவதற்காக ஆண்டிற்கு ரூபாய் 1,500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

‘நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்’ என்கிற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள பிற சான்றிதழ்களை இணைத்துப் பதிவு செய்யவும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.10.2018.
மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

* இணைய விளையாட்டுகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் புதிய ஆப்!

குழந்தைகளிடம் கம்ப்யூட்டர் கேம்களின் தாக்கம் கால மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்றுக்கொண்டே உள்ளது. இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்கள் மூலம் ‘புளூவேல், மோமோ சேலஞ்ச்’ உள்ளிட்ட இணைய விளையாட்டுகளால் எழும் ஆபத்துகள் அதிகம். ‘புளூவேல், மோமோ சேலஞ்ச்’ உள்ளிட்ட பல இணைய விளையாட்டுகளால், கடந்த சில ஆண்டுகளில், பலர் உயிரிழந்தது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற இணைய விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில், புதிய விளையாட்டு, ‘ஆப்’பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

‘சைபர் டிரைவியா’ என்ற, விளையாட்டு, ‘ஆப்’ (செயலியை) மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதில் பல விடைகளுடன் கூடிய கேள்வித் தொகுப்புகள் இருக்கும். சரியான விடை கூறும் குழந்தைகளுக்கு, பரிசு புள்ளிகள் வழங்கப்படும். இணையத்தில் அறிமுகம் இல்லாத ஒருவர் தொடர்பு கொள்ளும்போது, அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த கேள்விகள், சைபர் டிரைவியா, ‘ஆப்’பில் இடம்பெற்றிருக்கும். அறிமுகம் இல்லாத நபர், குழந்தைகளிடம், புகைப்படம் கேட்டாலோ, விரும்பத்தகாத செயல்களை செய்யும்படி கூறினாலோ, அவர்களை எதிர்கொள்வது குறித்த தகவல்கள், சைபர் டிரைவியா மூலம், குழந்தைகளுக்கு போதிக்கப்படும்.

* தமிழ்நாடு ஓப்பன் யுனிவர்சிட்டியில் பி.எட். அட்மிஷன்!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆசிரிய (Bachelor of Education) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் 11+1+3 அல்லது 10+2+3 என்கிற கல்வித் திட்ட முறையில் இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடக்க கல்வி ஆசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். என்.சி.டி.இ., சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:

மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை http://www.tnou.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக முகவரியில் நேரடியாகவோ, அஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
 


* ராகிங்கை தடுக்க அண்ணா பல்கலையின் புதிய ஆப்!

அண்ணா பல்கலை சார்பில், ராகிங் தடுப்புக்கென, தனி மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை, அனைத்துப் பல்கலைகளிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மேலாண்மை அமைப்பு என்ற பெயரில், அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் பிரிவு சார்பில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அலைபேசியில் உள்ள, ‘ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்’ பகுதியில், ‘எஸ்.சி.எம்.எஸ்., அண்ணா பல்கலை’ என்ற பெயரில் உள்ள இதை, பதிவிறக்கம் செய்யலாம்.

இதில், மாணவர்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். முதல்கட்டமாக சென்னை, கிண்டி எஞ்சினியரிங் கல்லுாரி; குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி; கிண்டி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி ஆகியவற்றின் மாணவர்கள் இந்த ‘ஆப்’ வசதியைப் பயன்படுத்த உள்ளனர். இதில், ராகிங் குற்றத்துக்கான தண்டனை விவரம், புகார் செய்யவேண்டிய முகவரி, அலைபேசி எண், அவசர உதவிக்கான அழைப்பு எண் போன்றவை உள்ளன. விரைவில் மற்ற பல்கலைகளின் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில், இது விரிவுபடுத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலையின் உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.