பெற்றோர்களே உஷார்..!Good Touch - Bad Touch - விழிப்புணர்வு வேண்டும்!

விழிப்புணர்வு

பள்ளிகளில் குழந்தைகளுக்கும் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டேவருகின்றன. மாணவ - மாணவிகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல் குறித்து அறியாமையில் உள்ளனர். சிறுமிகளின் உடலில் உள்ள சில காயங்களைப் பெற்றோர்கள் விசாரிக்கும்போதுதான் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. இந்தப் பாலியல் தொல்லைகளில் இருந்து காக்கும் விதமாக மாணவர்களுக்கு 'குட் டச் - பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசுப் பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அம்மாநிலப் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இவ்விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக அக்கறை கொண்டவர்களின் கருத்துகளைப் பார்ப்போம். சமூக ஆர்வலர் மற்றும் மகளிர் நல மருத்துவர் எம்.எச். அபிநயா பேசுகையில், ‘‘இன்றையக் காலகட்டத்தில் இதுபற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்பவர்களாகவே இருப்பதால் குழந்தைகள் டே கேர் (Day care), ப்ளே ஸ்கூல், ப்ளே கிரவுண்ட் போன்ற இடங்களிலோ அல்லது வேலையாட்கள் மேற்பார்வையிலோதான் இருக்கின்றனர்.

அதனால் குட் டச்- பேட் டச் பற்றியும் தற்காப்பு பற்றியும் புரியவைத்தல் அவசியமாகிறது. எட்டு மாதக் குழந்தைகூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் இக்காலத்தில் இதுபற்றிய எச்சரிக்கையினை பற்றிய தகவல்களை, புரிந்துகொள்ளக்கூடிய வயதான ஒன்றரை வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் குளிப்பாட்டும்போது உடல் உறுப்புகளை குழந்தை புரிந்துகொள்ளக்கூடிய தாய்மொழியில் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது, சாதாரணமாகப் பேசுவதுபோல் இங்கே யாராவது உன்னைத் தொட்டார்களா, கைவைத்தார்களா? என்பதுபற்றி கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

உனக்குப் பிடிக்காத இடத்தில் யார் தொட்டாலும் உடனே என்னிடம் சொல்லிவிடு என்று பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். உனக்குப் பிடிக்கவில்லை என்பதைத் தவறு செய்பவர்களிடமே உரக்க கத்தி ஸ்டாப், நோ, வேண்டாம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அப்படி கூறுவதில் தவறில்லை என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். குட் டச்-பேட் டச் என்பதைப் புரிந்துகொள்ள பொதுவான ஒரு விதி உள்ளது. அதன் பெயர் ஸ்விம் சூட் ரூல் (Swim Suit Rule). நீச்சல் உடையானது எப்பாகத்தை மறைக்கிறதோ அதனைத் தொடுவது ‘பேட் டச்’ என்பதும், மறைக்காத பாகங்களைத் தொடுவது ‘குட் டச்’ என்பதும் பொதுவான விதியாகும்.

இந்த விதியிலும் சில விலக்குகள் உண்டு. தவறு செய்பவர்களில் பெரும்பாலும் தெரியாத நபர்களைவிட, தெரிந்த நபர்களே அதிகமாக உள்ளனர். அதனால் Swim Suit விதிப்படி கையில், கன்னத்தில் கிள்ளுவது, காலில் உரசுவது போன்றவை தவறில்லை என நினைத்து குழந்தைக்குப் பிடிக்கவில்லையானாலும் அது சகித்துக்கொண்டு இருக்கும். பள்ளிகளிலோ, பொது இடங்களிலோ எந்த இடமாக இருப்பினும் எதிர்ப்பு தெரிவித்து நோ, ஸ்டாப் எனச் சொல்லி அதனை நிறுத்தச் சொல்ல பழக்கவேண்டும். குழந்தைக்குப் பெற்றோர் முன்உதாரணமாகத் திகழ வேண்டும். எடுத்துக்காட்டாக வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் கைகுலுக்கி வரவேற்பது நல்ல விஷயம் என்றாலும்கூட, அதுவே குழந்தைக்குப் பிடிக்கவில்லை என்றால்,

அச்செயலைச் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் குழந்தையிடம் தவறாக நடப்பவர்களில் பெரும்பாலானோர் தெரிந்தவராகவே (வாட்ச்மேன், லிஃப்ட் ஆபரேட்டர், உறவினர், நண்பர்கள்) இருப்பதால், இதில் யார் முன்பாகவாவது குழந்தை அசாதாரணமான முறையில் நடந்துகொண்டால் அதனை உன்னிப்பாகக் கவனித்து, தீர ஆராய வேண்டும். குழந்தைகளைவிட பெற்றோர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அந்த எச்சரிக்கை குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. காலதாமதமாகவோ, சோர்வாகவோ வீட்டிற்கு வந்தால், விளையாட்டினால் அல்லாமல் வேறுவிதமாக உடை கலைந்திருந்தாலோ குழந்தையை அமரவைத்துப் பேச வேண்டும். நிதானமாக பதற்றமின்றி கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

சில குழந்தைகள் உடையோடு தொடுவது தப்பில்லை என்று நினைத்துக்கொள்ளும். அதுவும் தவறு என்று புரியவைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக டீன்ஏஜில் குழந்தைகளுக்கு இனக்கவர்ச்சி உருவாவதால் அவர்கள் அனுமதியோடு தவறு நடக்க வாய்ப்புண்டு. இது, இந்த வயதில் எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு விஷயம்தான். ஆணை பெண் ரசிப்பதும், பெண்ணை ஆண் ரசிப்பதும் டீன்ஏஜில் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. பார்த்து ரசி, ஆனால் அனுபவிக்க நினைக்காதே என்று சாதாரணமாகச் சொல்லி புரியவைக்க வேண்டும். உணர்வுக்கு அடிமையாகக்கூடாது என அன்போடு உணர்த்த வேண்டும்.

குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோருக்கே என்பதால் உங்கள் குழந்தைக்கு முதல் நண்பர் நீங்கள்தான் என்று உணர்த்தினால் குழந்தை உங்களிடம் அனைத்தையும் கூறும். பிரச்னைகளை எளிமையாகக் கையாள இயலும்’’ என்றார். சமூகக் கல்வி நிறுவன இயக்குநர் ஜே.ஷியாம் சுந்தர் பேசுகையில், ‘‘தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, கடந்த 2016ம் ஆண்டில் பதிவான குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் 82 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும். போக்சோ சட்டத்தின்கீழ் மட்டும் 36,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாலியல் பலாத்காரம் உட்பட அனைத்துவகையான பாலியல் வன்கொடுமை வழக்குகளும் உள்ளடங்கும்.

இந்தியா முழுவதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகள் 19,000 ஆகும். இவ்வெண்ணிக்கை என்பது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. இவை முழுமையல்ல. இது மிகப் பெரும் அளவில் நடைபெறும் வன்முறையின் சிறிய பகுதியாகும். அதிக எண்ணிக்கையிலான குழந்தை பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. எனவே, இக்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடையே ஏற்படுத்தி அவர்களை ஆற்றல்படுத்துவது மிக அவசியமாகும்.

குழந்தைகளைக் கொண்டாடி அவர்களை போற்றிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் பொறுப்புள்ள பள்ளிகளிலேயே இத்தகைய கொடுமைகள் தொடர்வது வெட்கக்கேடானதாகும். எனவே, குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் விழிப்புணர்வு கல்வியை அளித்து பாதுகாப்பான பள்ளிச் சூழலை உத்தரவாதப்படுத்துவது பள்ளிகளின் முதன்மையான கடமையாகும். மேலும், இப்பிரச்னை குறித்து குழந்தைகள் அச்சமின்றி பேசவும், புகார் தெரிவிக்கவும் தனக்கு நம்பிக்கையானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் தயார்படுத்த வேண்டும்.

பொதுவாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலையில் உள்ள குழந்தைகளிடம் மட்டுமே தொடுதல் விதிகளைப் பேசிக்கொண்டிருக்கின்றோம். இதனால் மட்டுமே தீர்வு கண்டுவிடமுடியாது. நாம் பெரியவர்களிடமும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் நலனுக்காக இருக்கின்ற அரசு அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், ஊடகங்கள் போன்றவை இணைந்து இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரங்களைப் பரவலாக மேற்கொள்ளவேண்டும். பள்ளி, வீடு மற்றும் சமுதாயத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இத்தகையகொடுமைகள் தொடராமல் உடனடியாகத் தடுக்கவேண்டியது நாகரிகச் சமூகத்தின் முதன்மையான கடமையாகும்’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்