M.Pharm படிக்க GPAT-2019 திறனாய்வுத் தேர்வு! விண்ணப்பித்துவிட்டீர்களா?



அட்மிஷன்

மருந்தாக்கத் துறையில் உயர்கல்வி பயில (M.Pharm - Master of Pharmacy) தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய `GPAT- Graduate Pharmacy Aptitude Test’ என்னும் அகில இந்திய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை இத்தேர்வை All India Council for Technical Education - AICTE நடத்தியது. இம்முறை National Testing Agency (NTA) என்ற தன்னாட்சி நிறுவனத்தால், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலின்படி நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி :

இணையம் வழியிலான இந்தக் கணினி வழித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நான்கு ஆண்டுக் கால அளவிலான இளநிலை மருந்தாளுமைப் பட்டப்படிப்பில் (B.Pharm) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை :

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nta.oc.in எனும் இணையதளத்திற்குச் சென்று முதலில் பதிவு (Registration) செய்துகொள்ள வேண்டும். பதிவுக்குப் பிறகு, பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் ரூபாய் 1400, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூபாய் 700 என்று பதிவுக் கட்டணத்தை மின்பரிமாற்ற முறை (Online Payment) அல்லது பாரத வங்கிக் (State Bank of India) கிளைகளில் பணம் செலுத்தும் முறை எனும் இரண்டு வழிகளில் ஏதாவதொன்றினைத் தேர்வு செய்து பணம் செலுத்தலாம்.

ஏறத்தாழ 841 கல்வி நிறுவனங்கள் இத்தேர்வின் வழியாக மாணவர்களைத் தேர்வு செய்கின்றன. ஏறத்தாழ 24096 இடங்கள் உள்ளன. மின் பரிமாற்ற முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு மின்னஞ்சலில் கட்டணம் செலுத்தியதற்கான உறுதி மின்னஞ்சலும், செல்லிடப்பேசிக்குக் குறுந்தகவலும் (SMS) அனுப்பி வைக்கப்படும். பாரத வங்கிக் கிளையில் பணம் செலுத்திடப் பதிவு செய்தவுடன் கிடைக்கும் சலானைக் கொண்டு, அருகிலுள்ள ஏதாவதொரு பாரத வங்கிக் கிளையில் பணம் செலுத்திட முடியும். பணம் செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின்னர், இணையதளத்தில் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.11.2018.

இத்தேர்வில், அனாடமி, பிசியாலஜி, ஹெல்த் எஜுகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, பயோ பார்மசூட்டிக்கல்ஸ், பார்மசோகைனட்டிக்ஸ், பயோடெக்னாலஜி, கிளினிக்கல் பார்மசி, டிஸ்பென்சஸ் ஹாஸ்பிட்டல் பார்மசி, மைக்ரோபயாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பேத்தோ பிசியாலஜி, பார்மசூட்டிக்கல் அனாலிஸிஸ், பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி, பார்மசூட்டிக்கல் எஞ்சினியரிங், பார்மசூட்டிக்கல் மேனேஜ்மென்ட், பார்மசூட்டிக்ஸ், பார்மசோ ஜெனோஸி, பார்மசிக்காலஜி, பிசிக்கல் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். 3 மணி நேரத்திற்கான இந்த ஆன்லைன் தேர்வில், மொத்தம் 500 மதிப்பெண்களுக்கான 125 வினாக்கள் இருக்கும். ‘சரியான விடையைத் தேர்வு’ செய்யும் முறையிலான இத்தேர்வில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

அனுமதிச் சீட்டு :

இத்தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் 64 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 4.1.2019 முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வு 28.1.2019 அன்று நடைபெற இருக்கிறது. விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இணையம் வழியில் நடத்தப்படும் இத்தேர்வினை எழுத முடியும். இத்தேர்வின் முடிவுகள் 10.2.2019 அன்று வெளியிடப்படும். அன்றைய தினமே இத்தளத்திலிருந்து தேர்வுக்கான மதிப்பெண்களை அச்சிட்டு எடுத்துக்கொள்ள முடியும்.

மருந்தாளுநர் முதுநிலைப் படிப்புச் சேர்க்கை :

இத்தேர்வு முடிவுகளைக்கொண்டு தயார் செய்யப்பட்ட தகுதியுடையவர்கள் பட்டியலிலிருந்து மத்தியக் கலந்தாய்வு மூலம் அனைத்து மாநிலங்களிலும் முதுநிலை மருந்தாளுமைப் பட்டப்படிப்புகளில் (M.Pharm) சேர்க்கையினைப் பெற முடியும்.
   
- முனைவர் ஆர்.ராஜராஜன்