படிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா?வழிகாட்டல்

மனிதனின் அறிவாற்றலையும், தனித்திறனையும் வளர்த்துக்கொள்ள கல்வி பயன்பட்ட காலம் போய்விட்டது. வாழ்க்கையை வளமாக்க, பொருளாதார வளர்ச்சியடைய அடிப்படைத் தேவையான வேலைவாய்ப்புகளுக்கானதாக ஆகிவிட்டது கல்வி. அதிலும் ஏகப்பட்ட துறைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் என்றாகிவிட்டது. எந்த பட்டம் படித்தால் வேலை கிடைக்கும். நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதுதான் இன்றைய தலைமுறையின் தேடலாக உள்ளது.

இந்த விஷயத்தில் உண்மை நிலைமையே வேறு. படிப்பு எதுவாக இருந்தாலும் அதற்குரிய தேவையும் வாய்ப்பும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதை உணர்த்தவே இந்தப் பகுதியில் சில இதழ்களில் பயனுள்ள தகவல்களைப் பார்க்க உள்ளோம்…
‘பி. ஏ.’ படிச்சா வேலை கிடைக்குமா..?

‘என் பையன் பி. ஏ.’ படிக்கறான்.... அவனுக்கு எங்க வேலை கிடைக்கும்...?’

என்று சிலர் கேட்பதை நாம் பார்த்திருப்போம். இது ஏதோ ‘ஜோஸ்யம்’ பார்த்து சொல்கிற விஷயம் இல்லை. இன்றைய பணிச் சந்தை (job market), ‘பி.ஏ.’ பட்டம் பெற்றவர்களுக்கு என்ன வாய்ப்புகளைத் தருகிறது..?

நேரடியான கேள்வி. நேரடியான பதில் வேண்டும். சரிதானே...?
முதலில் ஒரு உண்மையைப் பதிவு செய்துகொள்வோம்.

‘பி.ஏ.’ படிப்பு ஒன்றும் தரமற்ற, இரண்டாந்தரப் படிப்பு அல்ல.
அப்படி இருந்தால், பல்கலைக்கழகங்கள் ஏன் அதை வைத்து இருக்க வேண்டும்..?

ஒரு ஆச்சரியமான தகவல். என்னதான் விதவிதமா ‘டிசைன் டிசைனா’ புதிய புதிய படிப்புகள் வந்துகொண்டு இருந்தாலும், ஆண்டுதோறும், ‘பி.ஏ.’ படிப்பில் சேருகிறவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதே இல்லை! ஏன் இப்படி...? காரணம் மிக எளிது. ‘பி.ஏ.’ பட்டம் படிப்பதற்கு மிக எளிது. அதனால்தான் இதனை ‘ஒரு மாதிரியாக’ பார்க்கிறார்கள். ‘பி. ஏ.’-வுக்கு எங்கிருந்து வேலை கிடைக்கும்?’ என்கிறார்கள் விவரம் அறியாதவர்கள்.

சரி... ‘பி. ஈ.’ படித்துவிட்டால் மட்டும் உடனடியாக வேலை கிடைத்து விடுகிறதா..? பணிச் சந்தையில், ‘பி. ஏ.’ அல்லது ‘பி.ஈ.’ என்று பெரிதாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. ‘இந்த வேலைக்கு இது சரிப்பட்டு வருமா..?’ அவ்வளவுதான்.

யோசித்துப் பாருங்களேன்.... ஒரு நகராட்சி அலுவலகம். உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. உள்ளூரிலேயே, நல்ல சம்பளத்தில், நிரந்தரமான வேலை. யார்தான் வேண்டாம் என்பார்கள்..?

இந்த வேலைக்கு, ‘பி. ஏ.’ படித்தவர் பொருத்தமாக இருப்பாரா..? அல்லது, ‘பி. ஈ.’ முடித்தவர் சரியானவரா..? யாரைக் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள்.

‘பி. ஏ.’தான் முழுக்க சரி. அப்படியானால், ‘பி. ஈ.’ இரண்டாந் தரமாக மாறிவிட்டதா..? நிச்சயமாக இல்லை. இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேலைக்கும் அதற்கேற்ற படிப்புக்கு முன்னுரிமை கிடைக்கும். மற்றவை எல்லாம் வேண்டாத படிப்புகள் அல்ல. இந்தப் பணிக்குப் பொருந்தி வராதவை. அவ்வளவுதான்.

இனி, ‘பி. ஏ.’ படிப்புக்கான வாய்புகள் பற்றி, விரிவாகப் பார்ப்போம். படிப்புகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன.தொழிற்கல்வி, பொதுக்கல்வி. பொறியியல், மருத்துவம் ஆகியன தொழிற் படிப்புகள். படிக்கிறபோதே, ஏதேனும் ஒரு தொழிலுக்கான நுட்பங்களை சொல்லித் தருதல். இதில் இருக்கிற ‘ப்ளஸ்’ அதாவது, சாதகம், நமக்கு பளிச்செனத் தெரிகிறது. கூடவே, ஒரு ‘மைனஸ்’, பாதக அம்சம் இருக்கிறதே... அது எது என புலப்படுகிறதா..? ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான நிபுணத்துவம் தருகிற படிப்பு என்றால், பிற தொழில்களுக்கு அது, அதிகம் உதவாது என்று பொருள்.

‘ஆட்டோமொபைல்’ படித்த ஒருவருக்கு, மேலே குறிப்பிட்ட, அலுவலக உதவியாளர் பணியில் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும்..? தான் தேர்ந்தெடுத்துப் படித்த துறைக்கு வெளியே, ஒரு தொழிற் கல்விப் பட்டதாரிக்கு வேலையில் முன்னுரிமை கிடைப்பது, மிக அரிது. ஆனால் ‘பி.ஏ.’ போன்ற படிப்புகள், பொதுவானவை. ‘humanities’ என்று அழைக்கப்படுகிற இவ்வகைக் கலைப் படிப்புகள், ஒருவரை, எல்லா சூழல்களுக்கும் பொருந்துகிற மனிதனாக மாற்றுகிறது.

அதனால்தான் ஆங்கிலத்தில் மிகப் பொருத்தமாக ‘humanities’ என்று குறிப்பிடுகிறார்கள். இது தெரியாமலேதான் பலரும் ‘பி. ஏ.’வா..? என்று ஏதோ படிக்கக்கூடாததைப் படித்துவிட்டாற்போல் கேட்கின்றனர். கல்வி, வேலை வாய்ப்புத் தளத்தில் இதுபோன்ற தவறான புரிதல்கள் (Misconceptions) நிறையவே இருக்கின்றன.

‘சரி இருந்துட்டுப் போகட்டும். நம்ம வேலையை பார்ப்போம்..’ ‘பி. ஏ.’ பட்டத்தில், என்னென்ன படிப்புகள் எல்லாம் இருக்கின்றன..?

இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அரசியல், இசை, உளவியல், தத்துவம் மற்றும் நிர்வாகவியல் பாடங்கள் உள்ளன. அநேகமாக ஒரு சமூகத்துக்கு, ஒரு நாட்டுக்குத் தேவையான முக்கிய துறைகள் எல்லாமே இதில் அடங்கிவிடுகின்றன.

‘இலக்கியம்’ என்றவுடன் ஏதோ பழங்கதைகள் பற்றிய படிப்பு என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். மொழியியல் படிப்பு இது. ‘பி. ஏ.’ - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், அரபி என்று எல்லா மொழிகளுக்கும் இளங்கலை, முதுகலைப் பட்டம் மற்றும் ‘பி.எச்டி’ எனும் முனைவர் பட்டம் வரை பல நிலைகள் உள்ளன.

இதன் ஆரம்பப் புள்ளிதான் ‘பி. ஏ. இலக்கியம்’. மொழி ஆராய்ச்சி தொடர்ந்து வளர்ந்து வருகிற ஒரு துறை. அதிலும் தமிழ் போன்ற வளம் செறிந்த மொழியில் ஆராய்ச்சிகளுக்கு வேலை இருந்துகொண்டேதான் இருக்கும். இது மட்டுமல்ல, ஆசிரியர் பணிக்குச் செல்ல மிகச்சரியான பாதை - ‘பி. ஏ.’ ‘எம்.ஏ.’ எம்.ஃபில்’, ‘பி.எச்டி.’! இப்படி பி.ஏ. பட்டப்படிப்புக்கான தேவை முக்கியத்துவம் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்…

 (தொடரும்...)     

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி