கல்விக் கடன் பெறும் வழிமுறைகள்!வழிகாட்டல்

வாழ்வில் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆர்வத்தோடு படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கைகொடுக்கும் விதமாகவே வங்கிகளில்  கல்விக்கடன் பெறும் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் கடன் திட்டத்தில் பல சிக்கல்கள் இருந்த காலமும் உண்டு.

அதேபோல இன்றும்கூட நிறைய மாணவர்களுக்கு கல்விக் கடன் பற்றிய புரிதல் இல்லாமலே இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இங்கு பகிரப்படும் தகவல்கள் உதவியாக இருக்கும். இனி கடன் பெறும் வழிமுறையைப் படிப்படியாக பார்ப்போம்…

பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐ.டி.ஐ (I.T.I) மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் (Polytechnic) சேர கல்விக்கடன் பெறலாம். அதேபோல நான்கு ஆண்டு கால பொறியியல், தொழில்நுட்பம் (B.E./B.Tech.), ஐந்து வருட கால மருத்துவப் படிப்பு (M.B.B.S.) (அதாவது +2 தேர்ச்சி பெற்ற பிறகு) படிக்கவும் கல்விக்கடன் பெறலாம். மூன்று வருட பி.ஏ., பி.எஸ்சி. பட்டப்படிப்பு, கணக்கு தணிக்கை அதிகாரி பட்டப்படிப்பு (CA) இவைகளுக்கும் கடன் பெற வழி உண்டு.

ஒட்டுமொத்தமாக எல்லா வங்கிகளின் நிர்வாகியான Indian Bank’s Association (IBA) கல்விக்கடனுக்கான விதிமுறைகளை வகுத்து உள்ளது. அவ்விதிமுறைகளின்படியே (Guidelines) எல்லா வங்கிகளும் கட்டுப்பட்டு செயலாற்றுகின்றன. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேர அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக்கடனைப் பெற வாய்ப்பு உள்ளது.

வட்டிவிகிதம்: வட்டிவிகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். தற்சமயம் பாரத ஸ்டேட் வங்கி 8.30% விகிதத்தில் கல்விக் கடன் தருகிறது. இதுதான் மிகக் குறைந்த விகிதம். அதாவது ரூ.100 கடன் தொகைக்கு ஒரு வருடத்தில் ரூ.8.50 வட்டி கட்ட வேண்டும். வங்கிக்கு வங்கி வட்டி சதவிகித வித்தியாசம் அதிகபட்சமாக 1.5% வரைதான் இருக்கும்.

மாணவிகள், பிற்படுத்தப்பட்ட சமூக மாணவ/மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு வட்டியில் சலுகைகளை பெரும்பான்மையான வங்கிகள் அளிக்கின்றன மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு (Students of I.I.T/I.T.S/I.I.M) போன்ற வட்டிவிகிதத்தில் சில வங்கிகள் சலுகை தருகின்றன.

உதாரணமாக, இந்தியன் வங்கி (Indian Bank) இத்தகைய மாணவர்களுக்கு தற்சமயம் 9.95% விகிதத்தில் கடன் தருகிறது. MCLR (Marginal Cost of Funds based Lending Rate) எனப்படும் குறைந்தபட்ச வட்டிவிகிதத்தை கவனத்தில் கொண்டு, அதைவிட சுமார் 1% அதிகமாக லாபத்தை ஈட்டும்வண்ணம் பெரும்பாலான வங்கிகள், வட்டிவிகிதத்தை நிர்ணயம் செய்வதுண்டு.

கடன் உத்தரவாதம்: ரூ.4 லட்சத்திற்குள் கடன் பெறுவதாயின் வீட்டுமனை பத்திரம்/ஜாமீன் என எதுவும் தேவையில்லை. இதைத்தான் Collateral Free Loan என்று சொல்வதுண்டு. 4 லட்ச ரூபாய்க்கு மேல் 7½ லட்ச ரூபாய் கடன் தொகை பெறுவதாயின், ஒரு மூன்றாம் நபரின் உத்தரவாதம் (Guarantee) தேவை. இதற்கு மேலும் கடன் தொகை பெறுவதாயின் காலி மனை/வீட்டு ஆவணம்/வேறு ஏதாவது ஆவணம் போன்றவை அடமானமாக வைத்து உத்தரவாதம் அளிக்க வேண்டியதிருக்கும்.

முன்பணம்: மொத்த படிப்புச் செலவு என்பது கற்பிக்கும் தொகை (Tuition fees), போக்குவரத்து தொகை (Transport fees), விடுதி தொகை (Hostel fees), திட்ட செயல்முறை தொகை (Project fees), பரீட்சை, புத்தக செலவு (Exam and book fees) - இவையெல்லாம் அடங்கியவை. கட்டட தொகை, விரிவாக்க தொகை, நன்கொடை (Development fees, Donation) போன்றவை கல்விக் கடனில் அடங்க வாய்ப்பில்லை.

இந்த மொத்த செலவுத் தொகையை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். மாணவனுக்காக பெற்றோர் தங்களது சேமிப்பிலிருந்து தரும் பணம் (அதாவது முன்பணம்/Margin). அடுத்த பகுதி வங்கிக் கடன். மொத்த செலவுத் தொகையில் பெற்றோர் பங்கு 10% என்றால், வங்கிக் கடன் 90% அமையும். கடன்தொகை 4 லட்சமாகவோ, அதற்கு குறைவாகவோ அமைந்தால் முன்பணம் அதாவது, பெற்றோர் பங்கு எதுவுமே தேவையில்லை. எனவே, மொத்த செலவையுமே வங்கி கடனாகத் தந்துவிடும்.

  வட்டி மானியம் (Interest Subsidy): மருத்துவம்/பொறியியல்/ தொழில்நுட்பம் போன்ற பட்டப்படிப்பிற்கு வட்டிச்சலுகை உண்டு. மத்திய அரசின் திட்டத்தில் பெற்றோருக்கு வருட வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்கு கீழே இருந்தால் இச்சலுகை பெறலாம்.

கடன் பெற ஆரம்பித்தது முதல் திரும்பச் செலுத்தும் ஆண்டு வரை வட்டித்தொகையை முழுமையாக மத்திய அரசு கடன் அளிக்கும் வங்கிக்கு தந்துவிடும். அதாவது, கடனை திரும்பச் செலு த்த ஆரம்பமா கும் வரை (EMI starting period) வட்டித்தொகையை மாணவன்/மாணவி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதை கண்காணிக்கும் பொறுப்பை கனரா வங்கி ஏற்றுள்ளது.

கடனைத் திரும்ப செலுத்துதல் (Repayment): பொதுவாக முதல் தவணை கடன் தொகை பெற்றதிலிருந்து மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அடைத்துவிடும்படி வங்கிகள் செயல்புரிகின்றன. சில வங்கிகள், பெரிய தொகை வாங்கியவர்களுக்கு (7.5 லட்ச ரூபாய்க்கு மேலாக) இக்கால அவகாசத்தை 15 ஆண்டுகளாக கூட நீட்டிப்பது உண்டு.

படிப்பு முடிந்தவுடன் வேலையில் அமர்ந்த பின் அதிகபட்சமாக 6 மாதத்திற்குள் கடனை திரும்ப செலுத்த தொடங்க வேண்டும். படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதிகபட்சமாக ஓர் ஆண்டு அவகாசம் தீர்ந்தவுடன் கடன் தொகையை சட்டப்படி திரும்ப செலுத்த தொடங்க வேண்டும்.

வருமானவரிச் சலுகை: வருமானவரி சட்டம் பிரிவு 80E யின் கீழ் கல்விக்கடன் தொகையின் வட்டித்தொகைக்கு வரிவிலக்கு உண்டு. அதாவது, மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கல்விக் கடன் வட்டித்தொகை கழித்துவிட்டு, மீதித் தொகைக்கு வருமானவரி செலுத்த வேண்டும். ஆனால், கடன்பெற்ற முதல் எட்டு ஆண்டுகால அவகாசம் வரைத்தான் இந்த வரிச்சலுகை அனுமதிக்கப்படும்.

 சிபில் தகுதி: CIBIL (Credit Information Bureau (India) Limited) என்ற அமைப்பு, கடன் பெறுவோருக்கு மதிப்பெண் தரும் நிறுவனம். கடன் பெறுவோரின் எல்லா விவரங்களையும் (மிக முக்கியமாக PAN) தருவதன் மூலமாக CIBIL கடன் பெறுவோருக்கான மதிப்பெண்களை தரும். அதிக மதிப்பெண் பெற்றால், (சாதாரண தேர்வு களின் சட்டவிதிப்படி) நல்ல நேர்மையான கடனாளி என்று பொருள்.

எப்படியும் 750க்கு மேல் மதிப்பெண் பெற்ற வாடிக்கையாளரையே வங்கிகள் கடனுக்கு பரிசீலனை செய்கின்றன. மதிப்பெண் பெற பரிசீலனைத் தொகையாக மிகக் குறைவாக (ரூ.250 வரை) சில வங்கிகள் கடனாளிகளிடமிருந்து வசூல் செய்வதுண்டு. இதில் தற்போது ஒரு நல்ல செய்தி என்னவென்றால், www.cibil.com என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாகவே தனது மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம். இங்கே ஓர் எச்சரிக்கை தேவை.

ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு வங்கிகளில் அடிக்கடி மதிப்பெண் பெற முயற்சி செய்தால், அவருக்கு பண நெருக்கடி என்ற எண்ணம் மேலோங்குகிறது. எனவே, அப்படி முயற்சி செய்வதால் சிபில் மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு.

உத்தரவாத ஆவணம் (Collateral free) இல்லாமல் அதாவது, சொத்து பத்திரமில்லாமல் 4 லட்ச ரூபாய் வரை கடன் தரலாம் என்பது இப்போது எல்லோரும் அறிந்ததே. இதற்கு வித்திட்டது 2002 ஆம் ஆண்டு R.J.காமத் தலைமையில் நிறுவப்பட்ட குழு.

பிறகு, வெவ்வேறு வங்கிகள் தங்கள் விருப்பப்படி கற்பிக்கும் தொகை, விடுதியில் தங்கும் தொகை, பயிற்சி தொகை, புத்தகத் தொகை என்ற முறைப்படி தனித்தனி உச்சவரம்பை ஏற்படுத்த சில முரண்பாடுகள் உருவாயின. இதை சரிசெய்ய பாலசுப்ரமணியன் என்பவரின் தலைமையில் குழு உருவாகி, தமிழ்நாட்டில் பெரும்பாலும் வங்கிகள் அந்தக் குழு அறிக்கையையே முறைப்படி அமலாக்குகின்றன.

காப்பீடு: கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ/மாணவியர் முன்னெச்சரிக்கை யுத்தியாக அவர்களின் பெயரில் காப்பீடு எடுப்பது அவசியம். அப்படி செய்வதால் விதியின் வசத்தால் மாணவர் துர்மரணமானால் காப்பீடு நிறுவனம் வங்கிக்கு கடனை திருப்பி செலுத்திவிடும். காப்பீட்டுக்கு உரிய தவணைத் தொகையைக் கூட வங்கியின் கடன் தொகையில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இணையதளம்: www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.வாராக்கடன் (Non Performing Asset): வாடிக்கையாளர் கடனை சரிவர திரும்ப செலுத்தாமல் போனால், அது வாராக்கடனாகிறது. பொதுத்துறை வங்கிகளில் சென்ற நிதியாண்டு (மார்ச் 2017) கல்விக்கடன் நிலுவை 67,608 கோடி ரூபாய். அதில் வாராக்கடன் 5,192 கோடி ரூபாய்.

இதன் காரணமாகத்தான் தாங்கள் கொடுக்கும் கடன் வாராக்கடனாகுமோ என்று ஒருசில வங்கிகள் தயங்குகின்றன. இது இயற்கைதான்!மாணவர்கள் தாங்கள் வாங்கிய கடனை எப்படியும் திரும்ப செலுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட வேண்டும்.

‘வங்கிக் கடன் தள்ளுபடியாக, ஓசியில் கிடைக்க என்ன வழி?’ போன்ற சபலங்களுக்கு இரையாகக்கூடாது. இன்று நீங்கள் முறையாக வங்கிக் கடனை திரும்ப செலுத்தினால்தான் அடுத்து வரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் தடையின்றி கிடைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

படம்: ஏ.டி.தமிழ்வாணன்

எஸ்.ரவி

சென்ட்ரல் பேங்க், சீனியர் மேனேஜர் (ஓய்வு)