மாணவர்கள் மனதில் கலந்த வன்முறை விஷம்!



சமூக சிந்தனை
 
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் நண்பர்களை சந்திக்க மகிழ்ச்சியோடு பள்ளி/கல்லூரிக்கு போன காலம் உண்டு. ஆனால், இன்றைய நிலை வேறாக மாறியுள்ளது. நடப்பு கல்வியாண்டு (2018-2019) தொடக்கத்திலேயே கையில் கத்தி, கம்பு, அரிவாளுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெற்றோர்களிைடயே கல்லூரிக்கு தங்களது பிள்ளைகளை படிக்க அனுப்ப முடியுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.

ஒருசில கல்லூரிகளில் மட்டும் தொடர்கதையாக நடந்துவரும் இச்சம்பவங்களுக்கு யார் காரணம், என்னதான் காரணம், பிரச்னைக்கு தீர்வுதான் என்ன? என சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளரைச் சந்தித்து பேசினோம். அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…

அ.மார்க்ஸ், சமூக ஆர்வலர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வன்முறை என்பதை ஒட்டுமொத்தமாகச் சமூகத்தில் உருவாகிவரும் வன்முறையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. பிரச்னைகளுக்கு மாணவர்கள் மட்டும் பொறுப்பில்லை. ஆனால், அரசு அப்படித்தான் இதைக் கையாள்கிறது. கல்லூரி நுழைவாயிலிலேயே மாணவர்களை நிறுத்தி, ஏதோ பயங்கரவாதிகளைப்போல போலீசார் அவர்களின் பைகளைச் சோதனையிடும் படங்களை செய்தித்தாள்களில் பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது.

நான் 37 ஆண்டுகள் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றியுள்ளேன். எழுபதுகளில் இல்லாத அளவிற்கு தொண்ணூறுகளுக்குப் பின் வன்முறைகள் மிகுந்தன. கிராமப்புறக் கல்லூரிகளில் சாதி மோதல்களும் நடந்தன.

கல்லூரிக்கு வெளியில் சாதி முரண்பாடுகள் அதிகரித்ததுடன் இணைத்துப் பார்க்க வேண்டியது இது. வெளியில் இருக்கும் சாதிச் சங்கங்கள். மதவெறி அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவை ஊட்டும் சாதி, மத வெறிகள் ஆகியவற்றிலிருந்து இதை எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?

இப்படியான வன்முறைகள் பெரும்பாலும் அடித்தள மக்கள் படிக்கக்கூடிய அரசுக் கலைக் கல்லூரிகளில்தான் அதிகமாக உள்ளது. அரசுக் கல்லூரிகள் இன்று அரசால் புறக்கணிக்கப்பட்ட நிறுவனங்களாகிவிட்டன. 20 சதம்தான் நிரந்தர ஆசிரியர்கள், கல்விக்கு அப்பாற்பட்ட கலை, இலக்கிய நடவடிக்கைகள், வெளியிலிருந்து அறிஞர் பெருமக்கள் வந்து உரையாற்றுவது, பேச்சுப் போட்டிகள், ஸ்போர்ட்ஸ் முதலானவை எல்லாம் பெயருக்குத்தான் உள்ளனவே தவிர அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை. நிதி ஒதுக்கீடும் இல்லை.

எஞ்சினியரிங் அல்லது மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது. அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துகின்றனர். மிகப் பெரிய அளவில் வேலை இல்லா திண்டாட்டம் பெருகியுள்ள நிலையில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லாத மாணவர்கள் இப்படியான வன்முறைகளுக்குப் பலியாகிற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

மாணவர் சங்கங்கள், பொறுப்பாளர் தேர்தல்கள் ஆகியவற்றால்தான் பிரச்னைகள் உருவாகின்றன என்பது இன்னொரு தவறான கணிப்பு. மாணவர்கள் பொதுவான சமூகப் பிரச்னைகளில் கவனம் செலுத்தத்தான் செய்வார்கள்.

அதைக் குற்றமாக்கவோ தண்டிக்கவோ கூடாது. போராடுவதற்கான அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கத்தான் வேண்டும். அடக்குமுறை அல்லாத தீர்வுகளின் ஊடாகவே அவற்றைக் கையாளவேண்டும். கல்லூரி மாணவர்கள் வயதுக்கு வந்தவர்கள். அளவுக்கு மீறி அவர்களின் அந்தரங்கங்களில் தலையிடக்கூடாது.

மாணவர்களைக் குற்றவாளிகளைப்போல அணுகுவதன் மூலம் ‘கேம்பஸ்’ பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியாது.பாடம் நாராயணன், கல்வியாளர்தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களில் இன்றைக்கு வளர்இளம் பருவத்தினர் பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு வன்முறையில் ஈடுபடுகின்றனர். தென்மாவட்டங்களில் அந்தந்த சாதிக்கேற்ற மாதிரி கைகளில் பேண்ட் (கை வளையம்) மாட்டிக்கொள்கின்றனர்.

 பள்ளிப் பருவத்திலேயே சாதி பெருமைப் பேசப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மாணவர்களுக்குள் வன்முறை நடப்பது புதிதல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருவதை தமிழகத்தில் பார்த்து வருகிறோம்.

மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற வன்முறைகள் நடைபெறத்தான் செய்கிறது, அது அந்த மாவட்ட செய்தியாகப் போய்விடுகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்வுகள் மட்டும்தான் பிரேக்கிங் நியூஸாக ஊடக வெளிச்சங்களில் காட்டப்படுகின்றன.

இதுபோன்ற வன்முறைகளை எஞ்சினியரிங் கல்லூரிகளிலோ பிற தனியார் கல்லூரிகளிலோ பார்க்க முடியாது. படித்து முன்னேறி வரவேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள், ஓரளவுக்கு பொருளாதார பின்னணி இருக்கின்ற மாணவர்கள் எல்லாம் அவரவர்கள் தங்கள் எதிர்காலம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அதற்காக தனியார் கல்லூரி களில் படிப்பவர்கள் ஒழுக்கசீலர்கள் என்று சொல்லிவிட முடியாது. அங்கு அவர்கள் வன்முறையில் ஈடுபட அனுமதி கிடைக்காது. அந்த அளவுக்கு கண்டிப்பாக இருக்கிறார்கள்.

அரசுக் கலைக்கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு ஒரு நல்ல தலைமை இல்லை; வழிநடத்த நல்ல ஆசிரியர்கள் கிடையாது. பேராசிரியர்கள் கிடையாது, பல அரசுக் கல்லூரிகளில் முதல்வர்களே கிடையாது.

துணைவேந்தரே இன்றைக்கு காசு கொடுத்து பதவிக்கு வரும் நிலைமை இருக்கிறது.விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்டவைகளில் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர எந்த ஒரு நடவடிக்கையும் அரசுக் கல்லூரிகளில் இல்லை.

அப்படி என்றால், எந்த மாதிரியான விஷயங்களில் தங்களை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கலாம் என்கிறபோது பஸ் டே கொண்டாடுவது, சினிமாவில் பார்ப்பதுபோல் முதுகுக்குப் பின்னால் கத்தியை சொருகிக்கொண்டு வருவது இந்த மாதிரியான ஹீரோயிசத்தைக் காண்பிப்பதாக அவர்களது வெளிப்பாடு உள்ளது.

எல்லா மாணவர்களும், இளைஞர்களும், ஏதோ ஒரு விதத்தில், அங்கீகாரத்தினை எதிர்பார்க்கிறார்கள். அது கிட்டும் முற்போக்கான சூழல் கல்விக்கூடங்களில் அமையப்பெறவேண்டும்.

இல்லையென்றால் இளைஞர்கள், தனக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்து விளையும் விதங்களில், அதனைப் பெற முயல்கிறார்கள். அங்குதான் மாணவர்களின் மனதில் வன்முறை விஷம் கலந்துவிடுகிறது. மாணவர்களின் வன்முறை மனநிலையில் மாற்றம் வரவேண்டும் என்றால், முதலில் கல்விக்கூடங்களை சீரமைக்க வேண்டும். துணைவேந்தர், பேராசிரியர், ஆசிரியர் நியமனம் தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

- தோ.திருத்துவராஜ்