பிள்ளைகளின் படிப்பை மட்டுமல்ல...மனதையும் பாழாக்கும் ஸ்மார்ட் போன்!எச்சரிக்கை

சிறுவர் முதல் பெரியவர் வரை ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொழில்நுட்பம் ஆண்ட்ராய்ட் போன் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஆண்ட்ராய்ட் யுகத்தில், கையில் ஸ்மார்ட்போனுடன் இருக்கும் பிள்ளைகளைப் பார்த்தாலே பதறுகிறார்கள் ஒரு சில பெற்றோர்.

அந்தளவுக்கு அதில் புதைந்திருக்கின்றன ஆபத்துகள். அதே சமயம், பிள்ளைகளின் தொல்லை தாங்காமல் எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். பிள்ளைகளிடமிருந்து போனை பிரிக்க முடியாது எனும்போது, அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பெற்றோர்கள்!

மேலும் இப்போதைய இளைய தலைமுறையில் பெரும்பாலோர் எதற்கெடுத்தாலும் கோபம், கொஞ்சம் அதட்டினாலோ, நினைத்தது கிடைக்கவில்லை என்றாலோ தற்கொலை செய்துகொள்ளும் சலனமான மனநிலை, குற்ற உணர்வு இல்லாதிருத்தல், குற்றச் செயல்களை செய்தல், தனிமையும், பயமும், எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை என மனநோயாளி போலவே காணப்படுகின்றனர்.

குட்டிப் பொம்மைகளுக்கு பொட்டு வைத்து, பூ வைத்து அதையும் சக குழந்தையாய் பாவித்து அதனோடு பேசி, விளையாடி உறவாடிய நம் குழந்தைகளின் பிஞ்சுக் கைகளில் ஸ்மார்ட் போனை திணித்துவிட்ட பெற்றோர்கள் தங்கள் தவறை உணரவேண்டிய நேரமிது என்று ஒருபுறம் அபாய மணி அடிக்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

மறுபுறம் ஸ்மார்ட் போன் மூலம் பாடம் நடத்த கல்வித்துறை முயன்று வருகிறது. ஸ்மார்ட் போன்கள் பிள்ளைகளிடம் உருவாக்கும் பாதிப்புகளை மனநல நிபுணரான அபிலாஷாவிடம் கேட்டபோது அவர் கூறிய தகவல்களைப் பார்ப்போம்…

‘‘உலகம் நாளுக்கு நாள் அப்டேட் ஆகிகிட்டு வருது. அறிவியலும் தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சி கண்டுள்ள ஒரு நூற்றாண்டில் நாம் வாழ்ந்துவருகிறோம். அறிவியல் கண்டுபிடிப்புகளினால் முன் எப்போதும் இல்லாதவாறு நம்முடைய வாழ்க்கைமுறை முன்னேறினாலும் அதற்கு ஈடான பாதிப்பு களையும் நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

மனிதத்தன்மைகளை மறக்கச் செய்யும் இந்த எந்திர உலகில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி மனிதப் பண்புகளுடனும், மனிதநேயத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதை அவசியம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு போனில் விடிய விடிய பேசத் தெரிகிறது. ஆனால், பொது இடங்களில் சக மனிதர்களிடம் சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்ள தெரிவதில்லை.

சகிப்புத்தன்மையும், மனிதநேயமும் இல்லாத ஒரு தலைமுறையையே நாம் உருவாக்கி வந்துள்ளோம். நம் பெற்றோர்களே இதற்கு முக்கிய காரணம். விவரம் தெரியாத பால்ய வயதிலேயே அவர்களுக்கு ஆண்ட்ராய்ட் போனையும் ஆப்களையும் அறிமுகம் செய்து விட்டு மனிதர்களை மதியாமல் டெக்னாலஜி பின்னால் ஓட சொல்லிக்கொடுக்கிறோம். நாளடைவில் அந்த மனப்போக்கு மிகப்பெரிய அவலத்தை நோக்கி குழந்தைகளை இழுத்துச் செல்கிறது’’ என விளைவுகளை பட்டியலிட்டார் அபிலாஷா.

மனிதர்களோடு மழலையில் பேசுவதற்கு முன்பே போனில் பேசவிட்டபடியால், வளரும்போது அவர்களுக்கு டைம் மேனேஜ்மென்ட் பற்றி தெரியாமல்போகிறது. போன் அடிக்‌ஷனை கொடுக்கிறது. தனிமையையும், பயத்தையும், விதைத்து ஒருவித சலனமான மனப்போக்கை ஏற்படுத்துகிறது. இதன் விளைவால் சமூக செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் போகிறது. படிப்பிலும் தன் திறனை மேம்படுத்திக்கொள்வதிலும் கூட பின்தங்கிவிடுகிறார்கள்.

ஒரு போனுக்காக பொய்சொல்லலாம் என நினைத்து சொல்லும் முதல் பொய்யில் ஆரம்பித்து திருட்டு போன்ற குற்றங்கள் வரை சுலபமாக செய்ய வைக்கிறது. வெறுமை, சோம்பேறித்தனம், ஒருவித மந்தத் தன்மை போன்ற எதிர்மறை எண்ணங்களையும், மனநோய்களையும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் நம் குழந்தைகள் தங்களுடைய டீன் ஏஜில் சந்திக்கின்றனர்.

உடல்ரீதியான பாதிப்புகள் என்று பார்த்தால் இரவு அதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துவதால் தூக்கமின்மை, மூளை மற்றும் நரம்பியல் பிரச்னைகள் மற்றும் போன் பற்றி சிந்தனை சிறுவயது முதல் தொடர்வதால் Nomo Phobia Disorder என்ற நோயையையும் ஏற்படுத்துகிறது. நினைவுகள் அறுபடுதல், கவனங்கள் குறைதல், நம்பிக்கையில்லாமை என உடல், மனப் பிரச்னைகள் என ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்’’ என்று பட்டியலிட்ட அபிலாஷா சமூக பிரச்னைகளையும் பேச ஆரம்பித்தார்.

‘‘ஆண்ட்ராய்டு போனில் அனைத்து தகவல்களும் கிடைப்பதால் தவறான பாதைகளை நோக்கிச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ‘புளுவேல்’ போன்ற தற்கொலைக்கு தூண்டும் அசம்பாவிதங்களை நாம் மறந்துவிட முடியாது. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்கள் திருடப்படுகின்றன. சலனமான மனநிலையினால் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், பிரைவெஸி பறிபோதல் என பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது.

தங்களின் இந்த நிலையை நம் மக்கள் அறிந்திருந்தும் அதிலிருந்து மீள வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பது தான் நம் சமூகத்தின் மிக மோசமான அவல நிலை. நம்முடைய இளைஞர்கள் 90% பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே கசப்பான உண்மை.’’ என இளைஞர்களின் இன்றைய நிலையை விளக்கிய அபிலாஷா, இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விளக்கினார்.

‘‘பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தியாக வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. எனவே, போனை கொடுக்காமல் பொம்மைகளைக் கொடுப்பது உத்தமம்.

பொம்மைகளில் விரல்களை அழுத்தி அழுத்தி விளையாடும்போது Finger dexterity எனப்படும் விரல்களின் நுண்ணிய செயல்பாடுகள் அசாத்தியமானதாக இருக்கும். போனே கொடுக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை அதை லிமிட்டாகவும், தேவையில்லாத வெப்சைட்டுகளை லாக் செய்தும் உபயோகிக்க கொடுக்கலாம். உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

ஸ்மார்ட் போன் மட்டுமல்ல எந்த ஒரு பொருளும் நம்முடைய தேவையைப் பொருத்தே பயன்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும். அத்தேவையையும் அப்பொருளையும் அளவாக உபயோகிப்பதே ஆகச் சிறந்தது.

பெரியவர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டிய அவசியம் வந்துவிட்ட காலம் இது. பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கும் அதேவேளையில் நாமும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வழிகாட்ட வேண்டும்’’ என இளையதலைமுறையின் எதிர்காலத்தின் மீதான அக்கறை கலந்த ஆலோசனைகளை சொல்லி முடித்தார் அபிலாஷா.

- வெங்கட்