மனிதர்களின் அடையாளங்களை ஈகோ வடிவமைக்கிறது!உளவியல் தொடர் 46

உடல்... மனம்... ஈகோ!


Wash out your ego every once in a while, as cleanliness is next to godliness not just in body but in humility as well. - Terri Guillemets
- ஈகோ மொழி

ஈகோவை பயன்படுத்தும் முறைகளில் நெகட்டிவ் இமேஜ்ஜின் வடிவமைப்பை மாற்றி அமைக்க, ஈகோவை அமைதிப்படுத்த, நிறைவான மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள உதவுவது போல், சில ‘ஈகோ மந்திரங்களும்‘ இருக்கின்றன.ஈகோ பயன்பாட்டில், இந்த ஈகோ மந்திரங்கள் முக்கியமானவை என்றே சொல்லலாம். சில நெருக்கடியான தருணங்களில் இவற்றை நாம் அறியாமல் சொல்லிக் கொண்டுதான் வருகிறோம். அதை உணர்ந்து உச்சரித்தால் சிறப்பான பயன்களைப் பெற முடியும்.

ஈகோ மந்திரங்களாகச் சொல்லப்படும் சிலவற்றைப்  பார்க்கலாம்

*நான் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன்
*நான் மிகவும் தைரியமானவன், எதற்கும் அஞ்சமாட்டேன்
*என் வாழ்க்கை இன்றிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது
*என் மனம் மிகப்பெரிய சக்தியின் இருப்பிடம், அதனால் மனச்சோர்வு என்னை அணுகாது
*நான்தான் எனக்கு மிகப்பெரிய பாதுகாவலன்
*கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எதுவும் என் மன அமைதியை கெடுக்காதுசூழ்நிலைக்கு ஏற்ற இவ்வகையான ஈகோ மந்திரங்களைத் தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க ஒரு தெளிவான மனநிலை ஏற்படவே செய்யும். கூடவே மனம் முழுவதுமாக பாசிட்டிவ் சக்தி நிறைந்திருக்கும்.

ஈகோ மந்திரங்களை உச்சரித்துக்கொள்ளும் பழக்கத்தை கடைப்பிடிப்பதால் நேர்மறையான சுய உறுதிப்படுத்தல்கள் (Positive self-affirmation) ஏற்படும். அதனால் மனதில் எதிர்மறை எண்ணங்களே (negative thought) இல்லாமல் போவதோடு, அவ்வப் போது எழுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுவிடும்.

மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களை விலக்க விலக்க நேர்மறை எண்ணங்கள் நிறைவது போல், நேர்மறை எண்ணங்களை நிறைக்க நிறைக்க எதிர்மறை எண்ணங்கள் விலகிச் சென்றுவிடும். நிறைவான மனநிலை எப்போதும் குடியிருக்கும். அதன் பலனாக மனதின் முடிவெடுக்கும் நிலைகள் மிகத்தெளிவாகத் தெரியவரும்.  

இங்கு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தெளிவான நிறைவான மனநிலையைக் கொண்டிருந்தால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றவே தோன்றாது என்று அர்த்தமல்ல. யதார்த்த வாழ்வின் அழுத்தங்களால் எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது எழத்தான் செய்யும். ஆனால், இந்த ஈகோநிலை அந்த எதிர்மறை எண்ணங்களை ஆரம்பத்திலேயே களைந்து சுத்தம் செய்துவிடும். அதன் பலனாக நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட ‘புதிய நான்’ பிறப்பெடுக்கும்.

அந்த நிலை தொடர, அந்த புதிய ‘நானே‘ ஒவ்வொருவருக்கும் அவரவர் அடையாளமாகவும், ஆளுமையாகவும், பிம்பமாகவும் மாறிப்போகும். மொத்தத்தில் புது மனிதராக அறிமுகப்படுத்தும். அதன்பிறகு அவர் அதற்கு முந்தைய நிலையிலான அவராக ஒருபோதும் இருப்பதில்லை.

நேர்மறையான சுய உறுதிப்படுத்தல்களால் ஏற்படும் நிறைவான மனநிலையில் ஈகோவை இயக்குவதால், முடிவெடுக்கும் நிலையை நெருங்கி நின்று கவனித்து, ஒவ்வொரு சூழலுக்கும் சாதகமான முடிவுகளாக எடுத்து, முன் முடிவுகளை அதற்கேற்ப வடிவமைத்துக் கொள்ள இயலும். இந்த முன் முடிவுகளின் திருத்தங்களும், செப்பனிடல்களும் ஈகோவை திறம்பட கையாளும் நிலையிலும், கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறது.

வாழ்க்கையில் புது அனுபவங்களையோ, அதுவரை சந்தித்திராத நபர்களையோ, முறையாக எதிர்கொள்கையில் மனதில் ஈகோ அமைதியின்றியும், நிறைவான மனநிலையிலும், இல்லாதிருக்கையில் படபடப்பானதாகவே இருக்கும்.

பிரபலமான புதிய மனிதர்களை சந்திக்கும்போது மிரட்சியோடு அவர் முன் பேச்சு வராமல், படபடப்பாய் நின்றிருப்பதும், பேசும்போதும்கூட எதையெதையோ உளறுவதும் அதனால்தான். அந்த நேரத்தில் மனதில் பதற்றம், படபடப்பு அதிகமாக இருக்கும். அதுவே ஈகோ அமைதியாகி தெளிவாக நிறைவான நிலையில் இருந்தால், ‘வணக்கங்க‘ என்று தெளிவாக பேச்சை தொடங்கும் ஈகோ.

ஈகோ மந்திரங்களாலும், ஈகோவை அமைதிப்படுத்துவதாலும் நிறைவான மனநிலையை அடைவதாலும், ஈகோவை திறம்பட செயலாக்க முடியும். இதுதான் முழுமையான ஈகோ நிர்வாகம். ஈகோவின் முத்திரைகள் ஈகோவின் செயல்பாட்டில் முத்திரை களும், அடையாளங்களும் இணைகோடுகளைப் போல் பயணித்துக் கொண்டே வருகிறது. ஈகோ சுட்டிக் காட்டும் அடையாளங்களை நாம் உணராமல் உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஈகோ பெரும்பாலும் எல்லோருக்கும் மௌனமாக ஒரு அடையாளத்தை பதியவைத்துத் தந்தபடியே இருக்கிறது.

பள்ளி/கல்லூரிக் காலகட்டங்களில் நண்பர்களுக்கு பட்டப்பெயர்களை வைத்து அழைக்கப்படுவதைப்போல் ஈகோவும் சில அடையாளங்களைச் சுட்டிக்காட்டியபடியேதான் இருக்கிறது. பல நேரங்களில் அந்த அடையாளங்கள் எதிர்மறை எண்ணங்களின் தூண்டுதலால் வெளிப்படுவதுதான் வேதனையான விஷயம்.

மனிதர்களுக்கான அடையாளங்களை ஈகோ அவர்களின் நடவடிக்கைகளைக் கொண்டே வடிவமைக்கிறது. அதே நேரம் மனிதர்களுக்கு வாழ்க்கையில் அவர்களின் நடவடிக்கைகள் எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கக்கூடியவை என்ற புரிதல் மிக அவசியம். அது புரியாமல் போவதாலும், எதிர்பார்ப்புகள் இடறுவதாலும் தவறான அடையாளங்களைப் பொருத்திப் போகச் செய்கிறது.

உதாரணமாக, திருமணத்திற்குப் பிறகு நிறைய மாறிவிட்டான் என்று சகோதரிகள் சகோதரனை அடையாளப்படுத்தி ‘பொண்டாட்டிதாசன்’ என்ற முத்திரையைக் குத்துவது இதனால்தான். (பொண்டாட்டி பேச்சைக் கேட்டுகிட்டு ரொம்ப ஆடறான்).  

ஈகோவின் துணைகொண்டு சக மனிதர்களுக்கு நாம் என்ன அடையாளங்களைத் தந்திருக்கிறோம்?

என்ன முத்திரையை மனதில் குத்தியிருக்கிறோம் என்பதை எடை போட்டுப் பார்க்க வேண்டும். அடையாளங்கள் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம், ஆனால் அது அடையாளப்படுத்தப்பட்டவரை பாதிக்காமல், உறவு கெடாமல் இருந்தால் போதுமானது. ஈகோ பதிக்கும் முத்திரைகளாலும், அடையாளங்களாலும் வேறு என்ன நன்மை? அதைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்…

குரு சிஷ்யன் கதை

எதுவும் நிரந்தரமில்லை!

ஆசிரமத்திற்கு வெளியே இயற்கைச் சூழலில் குரு தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்தான். சிஷ்யன் அவனுக்கு உணவு எடுத்துவந்து அதை திருவோட்டில் போடப்போகும்போது, பிச்சைக்காரனின் கை வழுக்கி திருவோடு கீழே விழுந்து உடைந்துபோனது. பிச்சைக்காரன் ‘‘ஐயய்யோ‘‘ என்று பதற்றப்பட்டு சோகமானான். அதைப்பார்த்த சிஷ்யன், “திருவோடு மீது அவ்வளவு பற்றா?“ என்றான்.

கீழே கிடந்த திருவோட்டைப் பார்த்தபடியே, “ஆமாமப்பா… எனது ஒரே சொத்து இதுதான்“ என்றான் பிச்சைக்காரன். உடனே சிஷ்யன், “அந்த பற்றினால்தான் நீ பிச்சைக்காரனாக இருக்கிறாய்” என்றான்.சிஷ்யனை ஆச்சர்யத்தோடு பார்த்த பிச்சைக்காரன், “எதன் மீதும் பற்றற்று இருக்க முடியுமா என்ன?” என்றான்.

  சிஷ்யன் திரும்பி குருவைப் பார்த்தான். அவர் இன்னமும் தியானத்திலேயே இருக்க,சிஷ்யன் சொன்னான், “ ஐயா, பக்கத்து ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வெளியூர் சென்று திரும்பியபோது அவனது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். செல்வந்தனோ செய்வதறியாமல் கண்ணீரோடு புலம்பினான்.

அப்போது அவனின் மூத்த மகன் வந்து “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை“ என்றான். அதைக் கேட்ட செல்வந்தனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனது சோகம் மறைந்துபோனது.

சிறிது நேரத்தில் அவனது இரண்டாவது மகன் வந்து “தந்தையே எப்படி இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? வீட்டை விற்றதற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழுத் தொகை வாங்கவில்லை. வீட்டை வாங்கியவன் மீதிப் பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். செல்வந்தன் மீண்டும் சோகம் அடைந்தான்.மீண்டும் கண்ணீரோடு புலம்ப ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் அவனது  மூன்றாவது மகன் வந்து.“தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

ஆகையால் நான் பேசியபடி முழுத் தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போதுதான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட செல்வந்தனுக்கு ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தான். மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
பார்த்தாயா? அங்கு எதுவுமே மாறவில்லை.

அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும்போது இழப்பு ஒருவனை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையதில்லை என்று நினைக்கும்போது சோகம் தாக்குவதில்லை. நான்,என்னுடையது,எனக்கு சொந்தமானது என்ற எண்ணம்தான் பற்று.உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.அனைத்துமே அழிந்துபோகக்கூடியது என்பதை நினைவில்  நிறுத்தினாலே போதும். அந்த எண்ணமே பற்றற்ற நிலை’’ என்றான் சிஷ்யன்.
 
“சரியாகச் சொன்னாய், வந்தவருக்கு புதிய குவளை தந்து, அதில் உணவு கொடு“ என்றார் கண்விழித்த குரு.சிஷ்யன் குருவைப் பார்த்து வணங்கிவிட்டு புதிய குவளையில் உணவைக் கொண்டுவர ஆசிரமத்துக்குள்ளே சென்றான்.  

-  தொடரும்
 
ஸ்ரீநிவாஸ் பிரபு