செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 78.60 லட்சம் பேர்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளோர் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 78.60 லட்சம் பேர், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இவர்களில், 6,047 பேர், 57 வயதுடையவர்கள். இவர்களில், பள்ளி மாணவர்கள் 18.39 லட்சம்; கல்லுாரி மாணவர்கள் 18.93 லட்சம் பேர். படிப்பை முடித்த இளைஞர்கள், 29.85 லட்சம் பேரும், அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், 36 முதல், 56 வயது வரையிலானோர், 11.35 லட்சம் பேரும், 57 வயதுக்கு மேற்பட்டோர், 6,047 பேரும் வேலைக்குப் பதிவு செய்துள்ளதாக, தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பாடப் புத்தகத்தில் வேலை வாய்ப்புத் தகவல்கள்!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளுக்குப் பின், பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன. தமிழகப் பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ. என்ற மத்திய பாடத்திட்டத்துக்கு இணையாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டன. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ், செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், அறிவொளி தலைமையிலான குழுவினர், புத்தகங்களைத் தயாரித்துள்ளனர்.

வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 1 புத்தகத்தில் கூடுதல் அம்சமாக மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும், அந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன. மேலும், அந்தத் துறைகளில் சாதித்தவர்களின் விவரமும் சேர்க்கப்பட உள்ளது. ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும், அந்தப் பாடத்தை படித்தால், என்னென்ன மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன; அவற்றைப் படித்தால், எந்தெந்த வேலை வாய்ப்புகளை பெறலாம் என்ற, விரிவான விவரங்கள், புத்தகத்தின் முகப்புரையாகத் தரப்பட உள்ளன.

பள்ளிச் சுற்றுலாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்

சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள இ.சி.ஐ., மெட்ரிக் பள்ளி மாணவர்கள், புனேக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அணைக்கட்டுப் பகுதியில் குளித்தபோது, மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், பள்ளிக்கல்வித் துறையிடம் அனுமதி பெறாமல், பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றது தெரியவந்தது.

இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில், சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மெட்ரிக் பள்ளி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். அதில், ‘மெட்ரிக் பள்ளிகள், மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்லும் முன், கல்வி அதிகாரிகளிடம் உரிய அனுமதியை ஒரு மாதத்திற்கு முன் பெற வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன், சுற்றுலா குறித்து திட்டமிட வேண்டும். குளம், குட்டை, ஆறு, ஏரி, அருவி மற்றும் கடல் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்லக்கூடாது. நான்கு நாட்களுக்கு மேல் சுற்றுலா கூடாது.

பெற்றோர், ஆசிரியர்கள் கூட்டம் கூட்டி, சுற்றுலா திட்டத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும். வானிலை நிலவரத்தை தெரிந்து, சுற்றுலா தேதி மற்றும் இடத்தை முடிவு செய்ய வேண்டும். சுற்றுலாவுக்கு வரும் மாணவர்களின் பெற்றோரிடம், கண்டிப்பாக ஒப்புதல் பெற வேண்டும்பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், பாதுகாப்புக்கு செல்ல வேண்டும்.

மாணவியருடன் ஆசிரியைகள், கட்டாயம் செல்ல வேண்டும். இரவு 10:00 முதல் காலை, 4:00 மணி வரை, பஸ் அல்லது சாலை வழிப் பயணம் கூடாது. முதல் உதவிப் பொருட்களை, உடன் எடுத்துச் செல்லவேண்டும். பாதுகாப்பான, உரிய உரிமம் பெற்ற வாகனத்தை பயன்படுத்த வேண்டும். உரிமம் மற்றும் அனுபவம் பெற்ற ஓட்டுநர்களை அழைத்துச் செல்லவேண்டும். மலைப்பகுதி என்றால், வனத்துறை அனுமதி பெற வேண்டும். மாணவர் எண்ணிக்கையை, அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். ஆசிரியர் துணையின்றி, மாணவர்களைத் தனியாக எங்கும் செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் பொறியியலில் பிஎச்.டி. மாணவர் சேர்க்கை!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் செயல்படும் அகாடமி ஆஃப் சயின்டிபிக் அண்ட் இன்னோவேடிவ் ரிசர்ச் எனும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பிஎச்.டி. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
கல்வித்தகுதி: துறை சார்ந்த முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் கேட்/ஜே.ஆர்.எஃப்.,/எஸ்.ஆர்.எஃப்.,/நெட்/டி.பி.டி.,/டி.எஸ்.டி. போன்ற தகுதித் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயலும். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த அறிவிப்புகள் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24.5.2018
ஆப்டிடியூட் தேர்வு/நேர்காணல்: 25.5.2018 முதல் 13.6.2018 வரை நடைபெறும்
மேலும் விவரங்களுக்கு http://acsir.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.