நல்ல விஷயம் 4



வளாகம்
 
அறிய வேண்டிய மனிதர் :அருந்ததி பட்டாச்சார்யா

கொல்கத்தா நகரில் வசித்துவந்த வங்காளி தம்பதியருக்கு 1956ம் ஆண்டு பிறந்த அருந்ததி பட்டாச்சார்யா பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவராக இருந்தவர். 1977ம் ஆண்டு  பாரத ஸ்டேட் வங்கியைத் நிர்வகிக்கத் தொடங்கியபோது அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு வயது 22. இவருடைய தந்தை பரோதியுள் குமார் முகர்சி பொகாரோ இரும்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.

தாயார் ஓமியோபதி மருத்துவராக இருந்தார். அருந்ததி பட்டாச்சார்யா பொகாரோவில் தூய சேவியர் பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் உள்ள லேடி பிரபோன் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் பின்னர்  ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். இவருடைய கணவர் பிரிதிமாய் பட்டாச்சார்யா கரக்பூர் ஐஐடியில்  பேராசிரியராக இருந்தார்.

இவர் அந்நிய செலாவணி, கருவூலம், மனிதவளம், முதலீட்டு வங்கி என தனது 40 வருட பாரத ஸ்டேட் வங்கிப் பணி வாழ்க்கையில்  பல பதவிகளை வகித்த முதல் பெண் என்ற பெயர் பெற்றவர். இவரை 2016ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த முதல் 25 பெண்கள் பட்டியலில் வரிசைப்
படுத்தியுள்ளது பிரபல ஆங்கில இதழான ஃபோர்ப்ஸ். இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Arundhati_Bhattacharya

வாசிக்க வேண்டிய வலைத்தளம்:http://vivasayam.org

மக்களில் பெரும்பாலானோர் பணம் கொழிக்கும் பங்குச் சந்தையிலும், ஐ.டி. தொழிலிலும் ஆர்வம் காட்டி அதில் மூழ்கிக்கிடக்கும் சூழலில், விவசாயத்துக்காகவே செயல்படும் ஒரு வலைத்தளம் செயல்பட்டுவருவது வியப்புதான். அதிலும் தண்ணீர்ப் பஞ்சத்தாலும், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலை ஒருபுறம் இருக்க விவசாயிகளுக்கு வழிகாட்டும் விதமாக பல பயனுள்ள தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இத்தளத்தின் சிறப்பு.

உதாரணமாக விவசாயச் செய்திகள், தகவல்கள்,  தானிய வகைகள், மாடி வீட்டுத் தோட்டம், காய்கறி வகைகள், பயிர் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு முறை, கால்நடை மருத்துவம் என  முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே மையப்படுத்தி செயல்படுகிறது  இத்தளம். விவசாயிகளுக்கு மட்டுமல்ல சிறு அளவில் தோட்டங்களை அமைக்க நினைக்கும் பசுமை விரும்பிகளுக்கும் பயனுள்ள வலைத்தளம் இது.

படிக்க வேண்டிய புத்தகம்:சாதிக்கப் பிறந்தவன் நீ…டாக்டர் ச.சக்திவேல் B.Com.,MBA.,LLB.

முடியாதது எதுவும் இல்லை. எதுவும் உன்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைத் தீயை நெய் ஊற்றி வளர்க்கும் நூல் இது. இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் படிக்கின்ற வாசகர்களின் உள்ளத்தில் உரமூட்டி, முயற்சியை மேலும் கூட்டி லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டும் நூல் இது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சமூகத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று கனவு காண்பவர்கள் இந்த நூலைப் படித்தால் கனவு நனவாவது நிச்சயம்.

அதற்கு உதாரணமாகப் புதுமையாகச் சிந்தியுங்கள்… தடைக் கற்களை படிக்கற்களாக்குவோம், தனித்துவம் மிக்கவர் சாதனையாளர் ஆகிறார்…, தொழில்முனைவோர்கள் பிறப்பதில்லை… உருவாகிறார்கள் என்பது போன்ற சில தலைப்புகளைச் சொல்லலாம். அனைவருக்கும் பயனுள்ள, ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இது.(வெளியீடு: பரிவு அறக்கட்டளை, 123, 2வது தளம், கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை  600 014. விலை: ரூ.100. தொடர்புக்கு: 044-42328887)

பார்க்க வேண்டிய இடம்  சங்ககிரி மலைக்கோட்டை

சங்ககிரி மலைக்கோட்டை சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் ‘சங்கரி துர்க்கம்’ என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ மேற்கில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதால் இதற்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உருட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொல்லப்படுவதால் சங்ககிரி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும். மலை அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன.

கோட்டையின் மூன்றாவது வாயிலில் வரதராசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோயிலிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோயிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் உச்சியில் சென்ன கேசவப்பெருமாள் கோயில் உள்ளது.

முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோயிலின் உற்சவர் மலையடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேஸ்வரசுவாமி கோயில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/சங்ககிரி_மலைக்கோட்டை