+1 உயிரி-விலங்கியலில் முழு மதிப்பெண் பெறும் வழிகள்பத்தாம் வகுப்பு +2 மாணவர்களைப் போல +1 மாணவர்கள் பொதுத்தேர்வை முதன்முறையாக எதிர்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு சில விளக்கங்களும் வழிகாட்டுதல்களும் வழங்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

“மாணவர்கள் போட்டித் தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் பதற்றமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி 2017-2018ம் கல்வியாண்டு முதல் +1 மாணவர்களுக்கு அரசுப் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ற வகையிலேயே இந்தாண்டு வினாக்கள் இடம்பெறும். +1 உயிரியலில் உள்ள இரண்டாவது பகுதி உயிரி  விலங்கியல். இதில் இடம்பெற்றுள்ள ஏழு பாடத் தலைப்புகளில் உள்ளவற்றை தெளிவாக புரிந்து படிக்க வேண்டும்” என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியர் கே.கே.தேவதாஸ். அவர் தரும் டிப்ஸ்...

“+1 உயிரியலில் உயிரி-விலங்கியலுக்கு 35 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் எட்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் பகுதி I-ல் இடம்பெற்றிருக்கும். அனைத்துப் பாடங்களிலிருந்தும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும்போது நிதானமாகப் படித்து உரிய பதிலை தேர்ந்தெடுத்து எழுதவும்.

பகுதி II-ல் ஆறு வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றில் நான்கு வினாவிற்கு விடையளிக்கவும். இந்த வினாக்கள் மிகவும் எளிமையாகவும் ஓரிரு வரிகளில் விடையளிக்கும் வண்ணம் இடம்பெற்றிருக்கும். உதாரணங்களைக் கண்டிப்பாக எழுதவும்.பகுதி III-ல் ஐந்து வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இவற்றில் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். இந்தப் பகுதியில் இடம்பெறும் 18-வது வினாவிற்கு கண்டிப்பாக விடையளிக்க வேண்டும். இந்த வினாக்கள் தெளிவாக விடையளிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

பகுதி IV-ல் இரண்டு வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இது அல்லது அது என்ற வகையில் இடம்பெற்றிருக்கும். இந்த வினாக்களுக்கு விரிவாகவும், தெளிவாகவும் விடை எழுத வேண்டும். படம் கேட்கப்பட்டால் வரைந்து பாகங்கள் தெளிவாக எழுதவும்.முதல் பாடமான பல்லுயிரியல்பு படிக்கும்ேபாது பாடத்தில் இடம்பெற்றுள்ள வகைப்பாட்டு நிலைகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றின் பண்புகள் ஆகியவற்றை தெளிவாகப் படிக்க வேண்டும். தொகுதிகள் எந்த வகையில் உள்ளன, அவற்றிற்குக் காரணங்கள், விளக்கங்களைப் புரிந்து படிக்க வேண்டும். வகைப்பாட்டுப் படிநிலைகள், வகைப்பாடு எந்த பண்புகள் அடிப்படையில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது பாடம் செல் உயிரியல். இதில் செல் கோட்பாடு, செல்லியலில் பயன்படும் அலகுகள், நுண்ணோக்கியின் அமைப்பு, அவற்றின் செயல்பாடு மற்றும் வகைகள் பற்றி விரிவாக படிக்க வேண்டும். ஸ்லைடுகள் தயார் செய்யும் முறைகள், சாயமேற்றிகள், செல் அமைப்பு கள் அவற்றின் பணிகள், புற்றுநோயின் வகைகள் மற்றும் காரணிகள், சிகிச்சை முறைகள், புற்றுநோய்க்கான ஆன்கோ-ஜீன்கள் பற்றியெல்லாம் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும்.

மனித உள்ளுறுப்பமைப்பியலில் மனித உடல் உறுப்புகள் மற்றும் அமைப்புகள் இடம்பெற்றிருக்கும். இவற்றில் உறுப்புகள் அமைப்பு  அவற்றின் வேறுபாடுகள், உறுப்புகளின் அமைப்பு - பணிகள், செயல்படும் விதம் ஆகியவற்றை அவசியம் படிக்க வேண்டும். உணர் உறுப்புகள், செரிமான உறுப்புகள், சுவாச உறுப்புகள், தோலுறுப்புகள், நாளமில்லா சுரப்பிகள், கழிவு நீக்க உறுப்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் என தனித்தனியாகப் புரிந்து படிக்க வேண்டும்.

மனித மரபியலில் அல்லீல்கள், அல்லீலோமார்டிகள், பல்கூட்டு அல்லீல்கள், உதாரணங்கள் இடம்பெற்றிருக்கும். இவற்றின் விளக்கங்களை மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும். பல்கூட்டு அல்லீல்கள் - முயல்களின் நிறம் மற்றும் மனித இரத்த வகைகள், தோற்றம், புறத்தோற்றம் (பீனோடைப்) மற்றும் மரபணுவாக்கம் (ஜீனோடைப்) ஆகியவற்றைப் படித்துக் கொள்ள வேண்டும். பல்கூட்டு காரணிகளால் மனிதரில் நிறவேறுபாடுகள், பால் நிர்ணய முறைகள், பால் பண்புகள், முதல்நிலைப் பால் பண்புகள் மற்றும் இரண்டாம் நிலைப் பால் பண்புகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

கருவியலைப் பொறுத்தவரை கருவியலின் தோற்றம், கருவியலின் புதிய பிரிவுகள், இனச்செல் தோற்றம், அது நடைபெறும் விதம், முட்டைகளின் வகைகள், கருவுணவு அளவு மற்றும் பரவல் அடிப்படையைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். பிளத்தல் பரப்புகள், பிளத்தலின் வகைகள், கருவுணவு தாக்கத்தின் அடிப்படையில் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது, தவளையின் கருமுட்டையில் நடைபெறும் பிளத்தல் ஆகியவற்றை மனதில் பதியும் விதமாக படிக்க வேண்டும்.

விலங்குலகமும், பொருளாதாரப் பாடத்தில் பயன்படும் விலங்குகள், பூச்சிகள், வளர்ப்பு உயிரிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை பற்றி தனித்தனியாக படித்துக்கொள்ள வேண்டும். பயன் தரும் பூச்சியினங்கள், தேனீக்கள், பட்டுப் பூச்சி, அரக்கு அவற்றில் கிடைக்கும் பொருட்கள் அவற்றின் பயன்கள் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி படிக்கவும்.

மீன்களின் பொருளாதார மற்றும் மருத்துவப் பயன்களைப் படித்துக் கொள்ளவும். மீன் வளர்நிலையங்கள் அமைத்தல், விலங்கு காப்பகங்கள், தீங்கு தரும் பூச்சியினங்கள், பயிர் வகைகளைப் பாதிக்கும் பூச்சியினங்கள், சேமிப்பு உணவுப் பொருளைப் பாதிப்பவை, நீரில் இருப்பவற்றை சேதப்படுத்தும் உயிரிகள், வீட்டு உபயோகப் பொருட்களை சேதப்படுத்துபவை, நோய் பரப்பிகள் பற்றி தனிதனியாக படித்துக்கொள்ளவும்.

உயிரினத் தோற்றம் பகுதியைப் பொறுத்தமட்டும் உயிரினத் தோற்றம் பற்றிய கோட்பாடுகள், உயிரினங்கள் தோன்றிய காலங்கள் அவற்றின் பிரிவுகள், படிவங்கள் பரிணாம முக்கியத்துவம், இடைநிலை உயிரிகள், விலங்குகளின் மறைவு ஆகியவற்றை தெளிவாக படித்துக் கொள்ளுதல் வேண்டும்.மேலே பட்டியலிடப்பட்டுள்ள பாடப்பகுதிகளை மனதில் நிறுத்தி கவனமாக படித்தால் +1 உயிரி-விலங்கியல் பாடத்தில் கேட்கப்
படும் எந்த கேள்விக்கும் சரியான பதிலை எழுதலாம்... முழுமையான மதிப்பெண்களைப் பெறலாம்.