மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கும் நன்னடத்தைப் பயிற்சி!பயிற்சி

நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடந்துகொள்வதைக் குறிக்கும். ஒவ்வொருவரும் வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் அது நம் வாழ்வைத் தலைசிறந்ததாக்கிட வழிவகுக்கும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள், வாழ்க்கை முறை மூலம் உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாகவும் எழுதி வைத்துள்ளனர்.

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்  படும்’ - அதாவது, ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்தோடு வளரும் குழந்தைகளே வாழ்க்கையில் வெற்றிவாய்ப்புகளை அதிகம் பெறுகின்றனர். அதற்கு அவர் களைக் குழந்தைப் பருவத்திலேயே பழக்கப்படுத்திவிட வேண்டும். குறிப்பாக 3 வயதில் இருந்து 15 வயதுக்குள் ஒருவர் எப்படி வளர்கிறாரோ அதுவே மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து அவர்களின் இயல்பாகிவிடுகிறது.

குழந்தைகள் நல்லவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் வளர வேண்டுமானால் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுத்தருவது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கைகளில்தான் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நல்லொழுக்கம் மற்றும் நன்னெறிப் பயிற்சியளித்துவரும் Kidequettes - Manners & Etiquette Classes for Kids பயிலகத்தின் இயக்குநர் பூஜா சொல்லும் கருத்துகளைப் பார்ப்போம்…

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது நம் பழமொழி. அதுபோல், என்னதான் பெரிய அளவில் கல்வி கற்றிருந்தாலும் நல்லொழுக்கம், பண்பாடு தெரியாமல் போனால் வேலையிலும் சரி, வாழ்க்கையிலும் சரி அவர்களால் பிரகாசிக்க முடிவதில்லை. வேலையிழப்பு மற்றும் சமுதாய அவமதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகமும் டியூக் பல்கலைக்கழகமும் இணைந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிறு குழந்தைகள் முதல் 25 வயது இளைஞர்கள் வரையிலானவர்களை உள்ளடக்கிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில் சிறுவர்களாக இருக்கும்போது நன்னடத்தைப் பயிற்சி பெற்றவர்களே  பெரியவர்களானபோது வெற்றிகரமான வாழ்வை அடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

20 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் சமுதாய நன்னெறியில் பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் எந்தவிதமான மனஅழுத்தங்களும் இல்லாமல் தங்கள் கடமைகளை நிறைவேற்ற அந்தப் பயிற்சி உறுதுணையாக இருந்தது என்பதையும் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்களை மதித்து தன்னிச்சையாகவே வந்து அவர்களுக்கு உதவி செய்வது, இடையூறுகளை நீக்குவது போன்ற செயல்களில் சிறந்து விளங்குகிறார்கள். 25 வயதுக்குள்ளேயே பட்டப்படிப்பை முடித்து நிரந்தர வருமானம் உள்ள நல்ல பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். சிறப்பான கல்வி முறைகளாலும் செயலாக்க முடியாதவைகளை நன்னடத்தை முறைகள் சீரமைத்துவிடுகிறது.

சமுதாய நன்னெறி முறைகளில் பயிற்றுவிக்கப்படாத குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், பொதுவாழ்வில் ஈடுபடும்போது அதிக அளவில் மனஅழுத்தத்திற்குள்ளாகி குறிக்கோள்களை அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காலங்கடந்துதான் இவ்வுண்மையைப் பெற்றோரும் உணருகின்றனர்” என்கிறார் பூஜா.

மேலும் அவர் நன்னடத்தை பயிற்சிகள் எவை என்பதை விவரித்தபோது, “நோயற்ற வாழ்வியலுக்கான நன்னடத்தைகள் என்று பார்த்தால், அளவோடு கூடிய சுத்தமான நகங்கள்தான் இருக்க வேண்டும். தூய்மையான மற்றும் துவைத்த ஆடைகளை உடுத்த வேண்டும். தலைமுடியைச் சீராக வெட்டி, வாரி இருக்க வேண்டும். தூய்மையான காலணிகளை அணிய வேண்டும். இதுபோன்ற நன்னடத்தைகள் தங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாவதற்கு அவர்களுக்கு அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன.

அடுத்து, நேராக இல்லாமல் கூனிக்குறுகி உட்காருதல் கூடாது. இது தண்டுவடத்தைப் பாதிப்பது மட்டுமில்லாமல் நாள்பட ஒருவரது தோற்றத்தைக் குறைபட்டதாக ஆக்கிவிடும். குழந்தைகள் சிலர் காலைத் தரையில் உரசிக்கொண்டே நடப்பார்கள். அவ்வாறில்லாமல் நிமிர்ந்த வண்ணம் கால்களைத் தூக்கி அடியெடுத்து நடக்கும் பயிற்சி முறை சிறுவயதிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்ற முதுமொழிக்கு ஏற்ப தொடக்கக் காலங்களில் இந்த நெறிப்படுத்துதல் இல்லையெனில் பின்னர் ஒருவரது நடத்தையையோ, குணங்களையோ மாற்ற முடியாது. அதனால், அதிகப் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவோம்.

தும்மல், இருமல், கொட்டாவி விடுதல் போன்ற நிகழ்வுகளின்போது பொது இடங்களிலும் சரி, வீட்டிலும் சரி வாயை மூடி வெளிப்படுத்த வேண்டும். வெளியில் அலைந்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் குளிக்க வேண்டும். உணவருந்தும் முன்னும் பின்னும் கைகழுவுதல் போன்றவை உடல் நலத்தைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும். தினமும் குறைந்தது ஒரு சில மணி நேரமாவது குழந்தைகள் வீட்டிற்கு வெளியே சென்று விளையாட்டு மற்றும் வெளிநிகழ்வுகளில் கலந்துகொள்வது, அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனஉளைச்சல்களை போக்கிட உதவியாக இருக்கும்.

 குழந்தைகள் விரும்புகின்ற விளையாட்டு அல்லது கலைத்திறன்களை வளர்க்க நாம் தூண்டுதலாக இருக்கும்போது அவர்களின் வாழ்க்கையில் தெளிவுமுறை சிறப்புறுவதாக இருக்கும். உணவில் தேவையான அளவு காய்கறிகள், பழங்கள், கூடுதல் புரதச் சத்து மிக்க பருப்பு - கொட்டை வகைகளைச் சேர்த்துக்கொள்ளவது மிகவும் நல்லது” என்றவர், நம் கலாசாரம் மட்டுமல்லாது, வெளிநாடு செல்லும் மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

“இன்றைக்கு இங்கு படித்துவிட்டு வெளிநாடுகளுக்குப் படிக்கவோ, வேலைக்கோ போகும்போது நம் பிள்ளைகள் அங்குள்ள கலாசார முறைகள் தெரியாததால் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே பணி இடத்தில், பொது இடத்தில் எவ்வாறு உட்கார வேண்டும், ஸ்பூன்கொண்டு எப்படி சாப்பிட வேண்டும், நண்பர்களின் பிறந்தநாளில் அவர்களே செய்யக்கூடிய பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டும், விழாவில் கலந்துகொள்ளும்போது நண்பரிடம் என்ன பேச வேண்டும், ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது வழிந்து மற்றவர்கள் முகம் சுளிக்காமல் இருக்க எவ்வாறு சாப்பிடப் பழக வேண்டும், வீட்டில் அவர்
களின் துணிகளை அவர்களே துவைக்க, மடித்து ஒழுங்குபடுத்தி வைக்க, சாப்பிட்ட தட்டை அவர்களே சுத்தம் செய்ய பழக்க வேண்டும்.

கழிவறைகளைப் பயன்படுத்துவது முதல் சுத்தமாக வைப்பது போன்ற  நல்ல பழக்கவழக்கங்கள் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படுவதுடன் தகவல் பரிமாற்றம், விழாக்கால நெறிமுறைகள், பிறரை மதித்து நடத்தல், நல்ல பண்பாடுகள், தனது காலிலேயே நிற்க முயல்வது, சுகாதார நெறிமுறைகள், பணத்தைக் கையாளும் முறைமை உள்ளிட்ட பொதுஇடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 16 வகையான நெறிமுறைகள்  Kidequettes - Manners & Etiquette Classes for Kids வாயிலாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன” என்கிறார்.

“கதைகள், நாடகங்கள், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போன்ற குழந்தைகள் விரும்பி ஏற்கும் வழிமுறைகளில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. அதிலும், குழந்தைகளின் வயது வித்தியாசங்களைக் கணக்கில் எடுத்து அதற்குத் தகுந்தாற்போல் இந்தப் பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இப்பயிற்சி 16 வார காலத் திட்டத்தில் 4 முதல் 15 வயதான குழந்தைகளுக்கு, 15 குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு என்ற முறைமையில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கிறோம். பயிற்சி முடிந்த பின்னர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உரிய முறையில் வளர்த்திட ஏதுவான சூழ்நிலை உருவாகிவிடும்” என்று நம்பிக்கையூட்டும் தகவல்களை நிறைவாகச் சொல்லிமுடித்தார் பூஜா.

- தோ.திருத்துவராஜ்