சேமியா தயாரிப்பில் மாதம் ரூ.67,000 சம்பாதிக்கலாம்!



சுயதொழில்

தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் உள்ள மக்களுக்கும் தெரிந்த அவசர உணவு ஒன்று உண்டென்றால் அது உப்புமாதான். அந்த உப்புமாவிலும் வெரைட்டி தேடுவோருக்காகவே நம் இந்திய தாய்மார்கள் இறக்குமதி செய்ததுதான் சேமியா உப்புமா என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் சென்னை போன்ற பரபரப்பான வாழ்க்கைமுறையில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு விரைவாக சமைக்கக் கிடைத்த வரப்பிரசாதம் சேமியா.

சேமியாவைக் கொண்டு மிகக் குறுகிய நேரத்தில் கிச்சடி, கேசரி, பாயசம் போன்ற சிற்றுண்டிகளை எளிதாகச் சமைக்க முடியும். இந்தியா முழுவதிலும் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அனைத்து விருந்துகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் உணவு என்றால் அது கேசரி மற்றும் பாயசமாகத்தான் இருக்கும். மேலும் சேமியா நம் நாட்டு மக்களின் எளிய முறையில் உடனடியாகச் சமைக்க உதவும் உணவுப்பொருள். இந்தச் சேமியாவை தமிழ்நாட்டில் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம்.

சேமியா சாதாரணமாக கிச்சடி உப்புமாவாகவும் ரவையுடன் கூடிய பதார்த்தமாகவும் சமைக்க உகந்தது. நம் ஊரில் விசேஷம் என்றாலே சேமியா பாயசம் மிகப் பிரபலம். தயார் செய்வதும் சுலபம். எனவே விருந்து, கல்யாணம், சுபநிகழ்ச்சிகள் மற்றும் வீட்டில் இறைவனுக்கு படைக்கும் உணவுப் பொருளாகவும் பயன்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிக அளவு சேமியா உற்பத்தி செய்யப்படுகிறது. சேமியா தயாரிக்கும்போது அது ஒருமுறை வேகவைக்கப்பட்டு பிறகு காயவைத்து பேக்கிங் செய்யப்படுகிறது. இதனால் இதை எளிதாகச் சமையல் செய்ய முடிகிறது. மிகவும் சன்னமாகவும் சிறுசிறு துண்டுகளாகவும் இருப்பதால் எளிதாகச் சமைக்கமுடிகிறது.

சேமியாவை நன்றாகக் காயவைத்து பேக்கிங் செய்து விற்பனை செய்வதால் இது விரைவில் கெட்டுப்போவதில்லை. பல நாட்கள் இது பேக்கிங் செய்த நிலையிலேயே இருக்கும். எனவே, இவை கெட்டுப்போவது தவிர்க்கப்படுகிறது. சிறுசிறு பாக்கெட்டுகளிலும் பெரிய பாக்கெட்டுகளிலும் இவை விற்பனைக்கு வருகிறது. மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதால் எல்லா அடித்தட்டு மக்கள் உட்பட அனைவரும் இதனை வாங்கிப் பயன் பெறுகின்றனர். முன்பு நகரங்களில் மட்டும் காலை உணவு விதவிதமாகச் செய்வார்கள்.

 இப்போது எல்லா கிராமங்களிலும் இந்தப் பழக்கம் வந்துவிட்டது. கிராம மக்களுக்கும் விதவிதமான காலை உணவு தேவைப்படுவதால் அவர்களின் பயன்பாட்டில் ரவைக்கு நிகராக சேமியாவே தேவையாக உள்ளது. எனவே, சேமியாவிற்கு இன்றைய நிலையில் நல்ல வரவேற்பு உள்ளது.
சேமியா உற்பத்தியில் ஒருசில மிகப் பெரிய நிறுவனங்களின் பங்கு இருந்தாலும் பெரும்பாலும் சிறு நிறுவனங்களே இதன் பெரும்பங்கை பூர்த்தி செய்கின்றன. ஆகவே, சேமியா உற்பத்தி செய்து விற்பனை செய்வது மிகவும் எளிது.

 இதன் மூலப்பொருட்களை மொத்தமாக மாவு தயாரிக்கும் இடத்திலேயே வாங்கும்போது விலை குறைவாகக் கிடைக்கும். இதனால் நம் லாபம் அதிகமாக இருக்கும். இந்தத் தொழில் குறுந் (மைக்ரோ) தொழிலாகும். இதை ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான முதலீட்டில் தொடங்கலாம்.

மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலமாக மானியத்துடன் எளிய முறையில் கடன் பெற்று இத்தொழிலைத் தொடங்கலாம். பல கடைகளுக்கும் உணவகங்களுக்கும் விற்பனை செய்யலாம்.உற்பத்தித் துறை என்பதால் மின்சார மானியம், விற்பனை வரி மானியம் எனப் பல மானியங்களில் அரசு உதவி கிடைக்கும். தாட்கோ, யூ.ஒய்.இ.ஜி.பி. மற்றும் பி.எம்.இ.ஜி.பி. போன்ற திட்டங்களில் 25% முதல் 35% வரை மானியம் பெறலாம். சாதாரண வேலையாட்கள் இருந்தாலே போதும் சேமியாவை அதிக அளவில் மிக எளிதாகத் தயாரித்து விற்பனை செய்யலாம்.

சிறப்பம்சம் அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடும் உணவு.    அனைத்து விருந்துகளிலும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் ஒரு சிற்றுண்டி. இதனை மிக விரைவாக சமைக்க முடியும்.m இயந்திரங்களினால் குறைந்த எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்டு அதிக அளவில் இதனைத் தயாரிக்க முடியும்.
இதில் எந்தவித ரசாயனமும் கலக்கப் படுவதில்லை.நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட அறிக்கை (ரூ.லட்சத்தில்)

முதலீடு
இடம்    :வாடகை
கட்டடம்:வாடகை 
எந்திரங்கள் மற்றும்
உபகரணங்கள்    :3.40லட்சம்
மின்சாரம் &நிறுவும் செலவு    :0.20லட்சம்
இதர செலவுகள்    :    0.20லட்சம்
நடைமுறை மூலதனம்    :1.20லட்சம்
மொத்த முதலீடு    :    5.00லட்சம்
அரசின் மானியத்துடன் கடன் பெற்று இந்தத் தொழில் செய்யலாம்.
மொத்த திட்ட மதிப்பீடு    :5.00லட்சம்
நமது பங்கு 5%    :0.25லட்சம்
அரசு மானியம் 25%    :1.25லட்சம்
வங்கிக் கடன்    :3.50லட்சம்

தயாரிப்பு முறை

சேமியா தயாரிக்க மூலப்பொருளாக மைதா பயன்படுத்தப்படுகிறது. சிலர் மைதாவுடன் சேர்த்து கிழங்கு மாவு, கோதுமை மாவு, கேழ்வரகு, சோளம் போன்ற நல்ல தரமான மாவு வகையிலிருந்து தயாரிக்கின்றனர். இவை எக்ஸ்றுடர் (பிழிந்து எடுக்கும் முறை) முறையில் பிழிந்து சேமியாவாக
மாற்றும் முறையைப் பின்பற்றி செய்யப்படுகின்றன. முதலில் தேவையான அளவு மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் மாவு கலக்கும் இயந்திரத்தில் மாவைக் கொட்ட வேண்டும். இடையிடையே தண்ணீரைச் சேர்க்க வேண்டும். இதில் முக்கிய பங்கே தேவையான தண்ணீர் அளவுதான்.  தண்ணீர் அதிகமானால் சேமியா பிழியமுடியாது, குறைவானால் மாவாகவே வெளியேறிவிடும். தேவையான அளவு நன்றாகக் கலக்கப்பட்ட மாவை சேமியா பிழியும் இயந்திரத்தில் கொட்ட வேண்டும்.

இப்போது சேமியா நன்றாகப் பிழிந்து எடுக்கப்படும். இவை கொத்தாக வெளியே வரும். இப்படி வெளியே வரும் சேமியாவை ஒரு குறிப்பிட்ட நீளம் வரை எடுத்து அதை ஒரு ஸ்டாண்டில் தொங்கவிட வேண்டும். இப்போது இந்த ஸ்டாண்டை வேக வைக்கும் சேம்பரில் அடைக்க வேண்டும். இந்த சேம்பர் கதவை மூடி எல்லாச் சேமியாவையும் ஒரு குறிப்பிட்ட நேரம் நீராவியில் வேக வைக்க வேண்டும். இப்படி வேக வைக்கவும், எளிதாக நீராவியை உருவாக்க ஒரு பாய்லர் தேவை.

இந்த பாய்லரை விறகு வைத்து நீராவியை வெளிக்கொண்டு வரலாம். வெந்த சேமியாவை வெளியில் எடுத்து ஆறவிட்டு வெயிலில் உலரவிட வேண்டும். நன்றாக உலர்ந்த சேமியாவை பாக்கெட்டுகளில் அடைத்து தேவையான அளவு பாக்கெட் செய்து பிறகு பண்டல்களாக இட்டு விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இவற்றில் சேமியா தரமாக உள்ளதா எனச் சோதனை செய்து அனுப்ப வேண்டும்.

தேவையான இயந்திரங்கள்

* மாவு கலக்கும் இயந்திரம்
* சேமியா தயாரிக்கும் இயந்திரம்
* பாய்லர்  இயந்திரம்
* உலர வைக்கும்  இயந்திரம்
* பாக்கெட் போடும்  இயந்திரம் மூலப் பொருட்கள்
* மைதா
* பேக்கிங் பொருட்கள்
அடிப்படை விவரங்கள்

ஒரு கிலோ மைதா விலை ரூ.27 என வைத்துக்கொள்வோம். ஒரு கிலோவிற்கு 5% உற்பத்தி சேதாரம் ரூ.1.35 என வைத்துக்கொள்வோம். மொத்தமாக ஒரு கிலோ மைதா ரூ.28.35 மூலப்பொருட்களின் தேவைஒரு நாளைக்கு சுமார் 500 கிலோ மைதா தேவைப்படும் என வைத்துக்கொள்வோம்.
500 கிலோ x ரூ.28.35 = ரூ.14,175
ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் வேலை நாட்கள் என வைத்துக்கொண்டால் ரூ.3.54 லட்சம்.

உற்பத்தி மற்றும் விற்பனை வரவு

* ஒரு மணி நேரத்திற்கு 80 கிலோ சேமியா தயாரிக்க முடியும். ஒரு நாளைக்கு 500 கிலோ வரை சேமியா தயாரிக்க முடியும்.
* ஒரு பாக்கெட்டிற்கு 170 கிராம் என வைத்துக்கொண்டால் 2940 பாக்கெட்டுகள் கிடைக்கும். 20 பாக்கெட்டுகள் சேர்ந்தது ஒரு பண்டல். ஒரு நாளைக்கு 147 பண்டல்கள் விற்பனை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
* மொத்தமாக மார்க்கெட்டில் ஒரு பண்டலின் விலை ரூ.160 என விற்கபடுகிறது. ஒரு நாளைக்கு விற்பனை வரவு ரூ.23,520/-
* ஒரு மாதத்திற்கு விற்பனை வரவு ரூ.5.88 லட்சம்.

பேக்கிங் செலவு

* ஒரு கிலோ பிரின்டிங் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பரின் விலை ரூ.200
* ஒரு கிலோவில் 170 கவர்கள் இருக்கும் என வைத்துக்கொள்வோம்.
* ஒரு பாக்கெட் கவரின் விலை ரூ.1.20
* ஒரு கிலோவிற்கு 6 பாக்கெட்டுகள் என வைத்துக்கொண்டால் ரூ.7.20.
* ஒரு நாளைக்கு பேக்கிங் மெட்டீரியல் விலை ரூ.3,600
* ஒரு மாதத்திற்கு ரூ.90,000

எரிபொருள்

ஒரு மாதத்திற்கு தேவையான விறகு எரிபொருள் ரூ.6,000 என வைத்துக் கொள்வோம்.

மின்சார செலவு

ஒரு மாதத்திற்கு 850 யூனிட்டுகள்
மின்சாரம் தேவைப்படும் என வைத்துக் கொள்வோம்.
மின்சார கட்டணம் ரூ.4,500/-
வேலையாட்கள் சம்பளம்
சூப்பர்வைசர் 1    :ரூ.6,000
பணியாளர் 3    :ரூ.18,000
பேக்கிங் பணியாளர் 3    :ரூ.15,000
விற்பனையாளர்    : ரூ.06,000
மொத்த சம்பளம்    : ரூ.45,000
மொத்த செலவு
மூலப்பொருள்கள்      :ரூ.3,50,000
பேக்கிங் மெட்டீரியல்    :ரூ.90,000
விறகு     :    ரூ.06,000
மின்சாரம்     :ரூ.05,000
சம்பளம்     :ரூ.45,000
இயந்திரப் பராமரிப்பு    :ரூ.03,000
மேலாண்மைச் செலவு      :ரூ.03,000
விற்பனைச் செலவு      :ரூ.05,000
தேய்மானம் 15%     :ரூ.04,000
கடன் வட்டி    :    ரூ.04,000
கடன் தவணை (60 தவணை):ரூ.06,000
மொத்தம்    :ரூ.5,21,000
லாபம் விவரம்
மொத்த வரவு     :ரூ.5,88,000
மொத்த செலவு     :ரூ.5,21,000
லாபம்     :ரூ.67,000

பொதுவாகவே உணவுப் பொருட்கள் தயாரிப்பு என்றால் அதிக தேவையும் வரவேற்பும் இருக்கும். அதிலும் தரமான பொருளாக அவசர வாழ்க்கைக்கு கைகொடுக்கும் மூலப்பொருளாக அது இருந்துவிட்டால் மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். உழைக்கும் உத்வேகத்தோடு முயற்சி செய்யும் யாரும் இன்று தொழில்முனைவோர் நாளை தொழிலதிபர் ஆகலாம் என்பது நிதர்சனமான உண்மை.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்