TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. அமைப்பின் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கான எளிய வழிமுறைகளையும், பாடத்திட்டங்களையும், மாதிரி வினாக்களையும் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். கடந்த இதழ் வரை புவியியல் பாடத்தின் முக்கியமான பகுதிகளையும், வினாக்களின் அமைப்புகளையும் பார்த்தோம். இனி பொருளியல் பாடத்திற்கான முக்கிய தகவல்களைப் பார்ப்போம்.

பொருளியல் (Economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல். பொருளியல் அறிஞர்கள்ஆடம் ஸ்மித் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் தனது நூலான (1776) ‘நாடுகளின் செல்வம்’ என்பதில் ‘பொருளியில் என்பது செல்வத்தைப் பற்றிய ஒரு அறிவியல்’ என வரையறை செய்கிறார். இவரது புத்தக வெளியீட்டிற்குப் பின்னரே பொருளியியல் ஒரு முறைப்படுத்தப்பட்ட அறிவியலாக அறியப்பட்டது.

லயனல் ராபின்ஸ் அவர்கள் “பொருளியல் என்பதை பற்றாக்குறையான வளங்களோடு மனித நடவடிக்கை பற்றிப் பயிலுகின்ற அறிவியல் என்பதைக் குறிக்கும்”என்கிறார்.மனிதன் கண்ட முதல் தொழில் பயிர்த்தொழில் ஆகும். உடல் வளர்ச்சிக்கு உணவு தேவைப்படுகிறது. அறிவு வளர்ச்சிக்கு கல்வி தேவைப்படுகிறது. நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மருத்துவம் தேவைப்படுகிறது.

மக்கள் பணிகளை அரசு ஊழியர்கள் செய்கிறார்கள். உழவர்கள், தொழிலாளர்கள், முதலீட்டாளார்கள், பணியாளர்கள் பணியாற்றி வருவாயை ஈட்டுகின்றனர். இது ஒட்டுமொத்தமாக நாட்டின் வருவாய் என்கிறோம். தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானத்தைத் தனிநபர்
வருமானம் என்கிறோம்.

வாங்குவதும், விற்பதும் நடைபெறும் இடம் சந்தை எனப்படும். மக்கள் சந்தையில் பொருட்களை வாங்கித் தங்களின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதையே நுகர்ச்சி என்கிறோம்.சில பொருட்கள் அதிகமாகக் குவியும் போது அப்பொருளின் விலை குறைந்தும், பற்றாக்குறை ஏற்படும்போது விலை அதிகரித்து காணப்படும். அத்தியாவசியப் பொருட்களை அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குகிறது. பொருட்களின் விலைகளை அரசு சட்டத்தின் வாயிலாக கட்டுப்படுத்துகிறது.

பொருளாதார வளர்ச்சி என்பது உற்பத்தி, நுகர்வு, பகிர்வு பெருகிக்கொண்டே செல்வதைக் குறிக்கும். என்ன உற்பத்தி செய்வது, எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை அரசு முடிவு செய்யும். மத்திய மாநில அரசுகள் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கப் பொருளாதார அறிவு அவசியம். பொருளாதார அறிவு அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது.

உற்பத்திக் காரணிகள்

1. நிலம், 2. உழைப்பு, 3. மூலதனம், 4. தொழிலமைப்பு ஆகியவையே உற்பத்திக்கான அடிப்படைக் காரணிகளாகும்.

1. நிலம் பொருளியிலில் நிலம் என்பது, மனிதனால் உருவாக்கப்படாத அனைத்தும் நிலமாகும். காற்று, சூரிய ஒளி, பூமி, காடுகள், ஆறுகள் மற்றும் கனிம வளங்கள் ஆகிய அனைத்தும் நிலம் எனப்படும்.
பண்புகள்: நிலம் இயற்கையின் கொடை ஆகும். நிலத்தின் அளிப்பு நிலையானது. நிலத்தை அழிக்க முடியாது. நிலம் செழிப்பில் வேறுபடும். நிலம் செயப்பாட்டு உற்பத்திக்காரணி.

2. உழைப்பு

ஊதியம் பெறுவதற்காக உடல் உழைப்பு அல்லது மன உழைப்பினை மேற்கொள்
வதைக் குறிக்கும்.
பண்புகள்: உழைப்பு அழியக்கூடியது. உழைப்பு உழைப்பாளரிடமிருந்து பிரிக்க முடியாதது. உழைப்பு மனிதனுக்கு மனிதன் மாறுபடும். உழைப்பு இடம்பெயரக்கூடியது.
வேலைப் பகுப்புமுறை: ஆடம் ஸ்மித் தனது நூலான ‘நாடுகளின் செல்வம்’ என்பதில் வேலைப் பகுப்புமுறையை அறி
முகப்படுத்தினார். வேலைப்பகுப்பு என்பது ஒரு வேலையைப் பல்வேறு குழுக்களிடம் பகிர்ந்தளித்தலைக் குறிக்கும்.
இதை விவரிக்க ஆடம் ஸ்மித் குண்டூசி தயாரிப்பை 18 உட்பிரிவாகப் பிரித்து விளக்கி யுள்ளார். 10 மனிதர்கள் ஒரு நாளைக்கு 48,000 ஊசிகள் உற்பத்தி செய்யமுடியும் என்கிறார்.

3. மூலதனம்

பொதுவாக மூலதனம் என்பது செல்வத்தைக் குறிக்கும். பொருளியலில் மூலதனம் என்பது செல்வத்தை மேலும் உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட செல்வத்தைக் குறிக்கும்.

மூலதன வகைகள்: பருமப் பொருள் மூலதனம் (கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவை).  பண மூலதனம் ( பணம், பத்திரங்கள் போன்றவை), மனித மூலதனம் (கல்வி, பயிற்சி போன்றவை)மூலதனத்தின் பண்புகள்: மூலதனம் ஒரு செயலற்ற உற்பத்திக் காரணி. மூலதனம் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது. மூலதனம் ஆக்கமுடையது. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும். மூலதனம் அதிக இயங்கும் தன்மை கொண்டது.

4. தொழிலமைப்பு

நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய உற்பத்திக் காரணிகள் ஒருங்கிணைந்து இடர்ப்பாடுகளை ஏற்கும் காரணி ‘தொழிலமைப்பு’ஆகும்.தொழில் முனைவோர்: அனைத்து உற்பத்திக் காரணிகளையும் ஒருங்கிணைத்து இடர்ப்பாடுகளையும் நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர்கொள்பவரே தொழில்முனைவோர் ஆவார். இவர் ‘சமுதாய மாற்றம் காணும் முகவர்’என அழைக்கப்படுகிறார்.

பலவகைத் துறைகள்

முதன்மைத் துறை: முதன்மைத்துறை இயற்கைப் பொருட்களை முதன்மைப் பொருள்களாக மாற்றுகின்றது. விவசாயம், மீன்பிடித்தல், வனத்துறை, சுரங்கத்தொழில் போன்றவை அடங்கும். இந்தியாவில் விவசாயத் தொழில் அதிகமானதாகவும் முக்கியமானதாகவும் விளங்குகிறது.

இரண்டாம் துறை: இரண்டாம் துறை என்பது மூலப்பொருட்களை உற்பத்திப் பொருட்களாக மாற்றுகிறது. சிறு மற்றும் பெருந்தொழில்கள், கட்டுமானம்,
கைவினைப் பொருட்கள் உற்பத்தி இதில் அடங்கும்.

சார்புத்துறை: சார்புத்துறை என்பது சேவைத்துறை ஆகும். இதில் வணிகம், வங்கிகள், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், பண்பாடு ஆகியவை அடங்கும். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இத்துறையில் அதிக தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். அமெரிக்காவில் 80 சதவீதம் பேர் இத்துறையில் பணிபுரிகின்றனர்.பொருளியல் சார்ந்த முதலீடு, சேமிப்பு, பணம் போன்றவை குறித்த தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.             

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்