நல்ல விஷயம் 4



வளாகம்

படிக்கவேண்டிய புத்தகம்: லீ குவான் யூ பெருந்தலைவன் - பி.எல்.ராஜகோபாலன்

உறுதியான அரசு, வலிமையான பொருளாதார கட்டமைப்புகள் மற்றும் முறையான அரச கொள்கைகளை வகுத்து சிங்கப்பூரை அனைத்துலக நாடுகளும் பார்த்து வியக்கும் வகையில் தனித்தன்மையோடு உயரச் செய்தவர் லீ குவான் யூ. பல்வேறு இன மக்களைக் கொண்டு வாழும் அந்நாட்டில் அவர்தம் மொழி, கலாசார பாரம்பரியங்களுக்கு சமவாய்ப்பினைக் கொடுத்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.

இவர் மேற்கொண்ட புதிய நடைமுறைகளும் சாணக்கியமான திட்டங்களும் சிங்கப்பூரை ஒரு வளமான நாடாக திகழச் செய்தது. அவரது ஆட்சி பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் நாட்டில் காணப்பட்ட வேலையில்லாப் பிரச்னை குறைக்கப்பட்டது, மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடைந்தது.

இவ்வளவு பெருமைக்குரியவரின் வாழ்க்கை வரலாற்றை குழந்தைப் பருவம் முதல் இறுதிக் காலம் வரை அரிய புகைப்படங்களுடன் படைத்திருக்கிறார் நூலின் ஆசிரியர் பி.எல்.ராஜகோபாலன். அனைவரும் அவசியம் படித்து மனதில் பதிவேற்ற வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க பெருந்தலைவரின் சரித்திர நூல் இது.வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, போலீஸ் குவார்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை-17. விலை: ரூ.200.
தொடர்புக்கு: 72000 50073

பார்க்க வேண்டிய இடம் : மூணார்

வட்டத்திலுள்ள தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் நகரமே மூணாறு. கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உலகத்தரம் வாய்ந்த தேயிலை விளைச்சலுக்கு பெயர்பெற்ற இடமிது. இங்கு முதிரப்புழை, குண்டலை, நல்லதண்ணி ஆகிய 3 ஆறுகளின் முக்கூடலால் மூன்று ஆறு என்பது நாளடைவில் மூணார் ஆனது. ஊட்டி, கொடைக்கானலை அடுத்து மூன்றாவது முக்கிய கோடை வாசஸ்தலம் மூணார்.

இந்தச் சுற்றுலாத்தலத்தில் காண்பவர் மனதைக் கவரும் விதமாக பச்சைப் பசேலென்று போர்வை போர்த்தியதைப் போன்ற தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. ராஜமலைத் தொடரிலுள்ள குறிஞ்சிப்பூக்காடு, ஆனைமுடி சிகரம்(இங்கு வரையாடுகளைப் பார்க்கலாம்), சுற்றுலாப் பயணிகளைக் காந்தமாக ஈர்க்கிறது.

இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் ராஜமலை, ரோஸ் கார்டன், மாட்டுப்பட்டி அணை, எக்கோ பாயின்ட், குண்டலம் அணை, லோக்கார்ட் தேயிலை ஃபாக்டரி, லோக்கார்ட் தோட்ட மியூசியம், லோக்கார்ட் கேப் வியூ பாயின்ட், கள்ளன் குகை, பெரியகானல் நீர்வீழ்ச்சி, ஆனையிரங்கல் அணை. தமிழர்கள் அதிகம் வாழும் இடமான மூணாருக்கு மதுரையிலிருந்தும், திருச்சூரிலிருந்தும் பேருந்து மூலம் செல்லலாம். மேலும் அறிய, https://ta.wikipedia.org/wiki//_மூணார்

வாசிக்க வேண்டிய வலைத்தளம்:Techradar.com

பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்கள், கணினிகள், ஆப்ஸ், கேமராக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்த அப்டேட் செய்திகளையும், விமர்சனங்களையும் சுடச்சுட தரும் தளமிது. டிவி, கம்ப்யூட்டர், விளையாட்டு குறித்த செய்திகளோடு இணையத்தில் கிடைக்கும் அவசியமான மென்பொருட்களையும் இத்தளத்தில் தரவிறக்கிக்கொள்ளலாம். மேலும் பல்வேறு டுட்டோரியல்களோடு, செய்திகளை அழகாகப் பிரித்து தந்திருப்பது பாராட்டுக்குரியது. பயன்பாட்டாளர்கள் மட்டும் அல்ல தொழில்நுட்பத்தில் வல்லுநராக நினைப்பவர்களும் பின்தொடரவேண்டிய தளம் இது.

அறியவேண்டிய மனிதர்: ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்திற்குள் இருந்த தென் ஆற்காடு பகுதியில் திண்டிவனம் அருகில் ஓமந்தூர் கிராமம் உள்ளது. இங்குதான் 1895 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் குடியேறிய ஒரு தெலுங்கு ரெட்டியார் குடும்பத்தில் ஓமந்தூரார் பிறந்தார். வால்டர் சுடர் பள்ளியில் கல்வி கற்றவர் இளமையிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பாடுபட்டவர்.

சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாண முதலாவது முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ஆவார். தேவதாசிமுறை ஒழிப்பு, தலித் கோயில் நுழைவு, மதுவிலக்கு உள்ளிட்ட சட்டங்களைத் திடமாக இயற்றிய துணிச்சல் மிக்க முதல்வர் ராமசாமி. பின்னாளில் அரசியலிலிருந்து முழுமையாக விலகிய ராமசாமி, வடலூரில் சன்மார்க்க நிலையத்தை நிறுவி, கல்விப் பணி, ஆதரவற்றோர் இல்லம் எனச் செயல்படத் தொடங்கினார். கருணை மனம் கொண்ட மனிதரான ராமசாமி 1970 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரைப்பற்றி மேலும் அறிய, https://ta.wikipedia.org/wiki/ஓமந்தூர்_ராமசாமி