தமிழக அரசில் 1953 பேருக்கு வேலை!



வாய்ப்புகள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. என்று சொல்லப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வுகளை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்துவருகிறது. அந்த வகையில் தற்போது  குரூப் 2 (A) தொகுதியில் அடங்கிய 1953 பணிகளுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 26.05.2017.

இத்தேர்வை ‘மோஸ்ட் வாண்டட்’ எக்ஸாம் என்று குரூப் 2 தேர்வைச் சொல்லலாம். இப்படிச் சொல்ல காரணம் இருக்கிறது. மிக எளிமையான தேர்வு மூலம் மிகப்பெரிய பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிற தேர்வு இது. இத்தேர்வில் வெற்றி பெற்று வேலைக்குச் சேர்ந்துவிட்டால் அதிகபட்சம் 25 வருடங்களில் ஐ.ஏ.எஸ். தரத்துக்கு உயர்ந்து சென்றுவிடலாம். அப்படியென்றால் இது மோஸ்ட் வாண்டட்  ஜாப்தானே! அதேபோல மோஸ்ட் வாண்டட் எக்ஸாம்தானே!

எந்தெந்த துறைகளில் வேலை?
அனைத்துக் காலிப் பணியிடங்களும் உதவியாளர் நிலை பணியிடங்கள்தான். பத்திரப்பதிவுத் துறை, மீன்வளத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, இந்து அறநிலையத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வருமானவரித்துறை ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு இத்தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் செல்லமுடியும்.

மேலும் கருவூலக் கணக்குத்துறையில் 85 அக்கவுண்டன்ட் காலிப்  பணியிடங்களும் இத்தேர்வு மூலம் நிரப்பப்படும். இளைஞர்களின் கனவுப் பணியிடமான தமிழகத் தலைமைச் செயலகத்தில் ஏற்பட்டுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கும் இத்தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பணியில் சேரமுடியும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் போதுமானது. பி.இ. படித்தவர்களும் எழுதலாம். இளங்கலைப் பட்டமானது, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு என்ற வரிசையில் முடிக்கப் பெற்றிருக்க வேண்டும். பர்சனல் கிளர்க் பணிக்குச் கூடுதலாகத் தட்டச்சு தெரிந்திருக்கவேண்டும்.

ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்குத் தட்டச்சு தெரிந்திருப்பதுடன், சுருக்கெழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தின் சட்டத்துறையில் உள்ள காலிப்  பணியிடத்திற்கு பி.எல்.பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்ற எல்லாப் பணியிடங்களுக்கும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மட்டும் போதுமானது.

எப்படி விண்ணப்பிப்பது?
இத்தேர்வுக்கு 1.3.2017-க்கு முன்பு 50 ரூபாய் செலுத்தி நிரந்தரப் பதிவு செய்தவர்களும், 1.3.2017-க்குப் பிறகு 150 ரூபாய் செலுத்தி நிரந்தரப் பதிவு செய்தவர்களும் பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதைத் தவிர தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்திலிருந்து எஸ்.டி., எஸ்.சி. பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோரும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து மூன்று முறையும், முன்னாள் ராணுவத்தினருக்கு இரண்டு முறையும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 1.7.2017 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். முற்படுத்தப்பட்ட வகுப்பினர் 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. மற்ற அனைவருக்கும் உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது, அவர்கள் 57 வயது வரை இத்தேர்வை எழுதலாம்.
மேற்கண்ட கல்வித்தகுதியும், வயதுத் தகுதியும் உடையவர்கள் 26.5.2017 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: இது 200 கேள்விகள் அடங்கிய கொள்குறி வகைத் தேர்வு. 100 கேள்விகள் தமிழ்ப் பாடத்திலிருந்தும், 25 கேள்விகள் ஆப்டிடியூட் பகுதியிலிருந்தும், பொது அறிவுப் பாடத்திலிருந்து 75 கேள்விகளுமாக மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

ஆப்டிடியூட் பகுதி வினாக்களும், தமிழ்ப் பாட வினாக்களும் பத்தாம் வகுப்புத் தரத்தில் இருக்கும். பொது அறிவுப் பாடக் கேள்விகள் பட்டப்படிப்புத் தரத்தில் இருக்கும். தேர்வர்கள் விரும்பினால் தமிழ்ப் பாடத்திற்குப் பதிலாக ஆங்கிலப் பாடத்தை எடுத்துக் கொள்ளலாம். தாங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பப் பாடம் தமிழ்ப் பாடமா? அல்லது ஆங்கிலப் பாடமா என்பதைத் தங்கள் விண்ணப்பத்தில் அவசியம் குறிக்க வேண்டும்.

பட்டப்படிப்புப் பாடத்தைத் தமிழ் வழியில் முடித்தவர்களுக்கு 20 சதவீதப் பணியிட ஒதுக்கீடு இருப்பதால், விண்ணப்பிக்கும்போது தங்கள் தமிழ்வழிப் படிப்பையும் அதற்கான காலத்தில் குறிப்பிட வேண்டும்.தேர்வுக்குத் தயாராவது எப்படி?

இத்தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் 1½ மதிப்பெண்கள். மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு. இதில் குறைந்தபட்சம் 170 கேள்விகளுக்குச் சரியான விடையளித்து 255 மதிப்பெண்களைப் பெற்றால் நீங்கள் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடலாம்.

அதே சமயம் 170 கேள்விகள் என்பது உத்தேசமான எண்ணிக்கைதான். கேள்வி களின் கடினத்தன்மையைப் பொருத்து கூடவோ, குறையவோ வாய்ப்பு இருக்கிறது. கடைசியாக நடந்த குரூப் 4 தேர்வில், கேள்விகள் மிக எளிமையாக இருந்ததால், கட் ஆப் மதிப்பெண்கள் மிகவும் அதிகமாகி இருந்ததைத் தேர்வர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மொழிப்பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பதற்கு அதிக நாட்களை ஒதுக்கவேண்டும். ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். இலக்கணம், இலக்கியம், சான்றோர்கள் என்று மூன்று வகையாகப் பிரித்து செய்யுள் பகுதி, இலக்கணப் பகுதி, உரைநடை என்று தமிழ்ப் பாடங்களில் முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும்.

ஆப்டிடியூட் பகுதியைப் பொறுத்த வரையில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள கணிதப் பாடங்கள் ஓரளவு உதவி யாக இருக்கும். இதைத் தவிர மனத்திறன் கணக்குகள், நேரமும் வேலையும், தனிவட்டிக் கணக்குகள், திசை அறிதல், ரத்த வகை உறவு அறிதல் போன்ற பகுதிகளில் நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம்.

பொது அறிவுக்கு என்ற பாடத்தை வரையறுத்துக் கூறிவிட முடியாது. வரலாறு, புவியியல், அரசியலமைப்புச் சட்டம், பொருளியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், நடப்பு நிகழ்வுகள், விளையாட்டுச் செய்திகள் போன்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இருக்கக்கூடிய அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் படிப்பது ஓரளவு பயன் தரும். இதைத் தவிர தினசரி செய்தித்தாள் வாசிக்க வேண்டும். தேர்வுக்கு 15 நாட்கள் முன்பு நிகழக்கூடிய சம்பவங்களில் இருந்துகூட கேள்விகள் வரலாம்.

தேர்வு நெருங்கும் நாட்களில் குறைந்தபட்சம் 10 மாதிரித் தேர்வுக்கான வினாத்தாள்களுக்கு விடை எழுதிப் பார்க்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்று. இதன் மூலம் உங்களுக்குப் பலவீனமான பாடப் பகுதி எது? எந்தப் பகுதிக்குக் கடைசி நேரத்தில் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும்? என்று சுய மதிப்பீடு செய்துகொள்ள முடியும்.உளிகொண்டு செதுக்கும்போது கடினமான பாறைகள் கூட அழகிய சிற்பங்களாகின்றன. உங்கள் உழைப்பு கொண்டு உங்கள் வாழ்க்கையைச் செதுக்குங்கள், நீங்கள் சிற்பமாவீர்கள்!வாழ்த்துகள் இளைஞர்களே!