எஸ்.எஸ்.பி. தேர்வு அமைப்பும் நடைமுறையும்..!



உத்வேகத் தொடர் 28

வேலை வேண்டுமா?


பாதுகாப்புப் படைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைவீரர்கள் திறமை மிகுந்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது. நல்ல புத்திக்கூர்மையும், தன்னம்பிக்கையும், சிறந்த முடிவுகள் எடுக்கும் திறமையும் (Decision Making Skill), பிறரோடு இணைந்து பழகும் தன்மையும் (Interpersonal Skill) கொண்டவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இதனால்தான்,SSB என்னும் அமைப்பின் பொறுப்பில் தரமான படைவீரர்களைக் கண்டறியவும், தேர்ந்தெடுக்கவும் யூ.பி.எஸ்.சி. அனுமதி வழங்கியுள்ளது. இந்த அமைப்பு பாதுகாப்புப் படைவீரர்களை மட்டுமல்ல, பாதுகாப்புப் படை அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் மேற்கொள்கிறது.

சர்வீசஸ் செலக்ஷன் போர்டு நடத்தும் தேர்வு பொதுவாக 5 நாட்கள் நடத்தப்படும். இங்கு நடத்தப்படும் “ஸ்கிரீனிங் டெஸ்ட்” (Screening Test) என்னும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே, அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களாக நடைபெறும் பலவித தேர்வுகளில் பங்குபெற அனுமதிக்கப் படுவார்கள்.

சிலவேளைகளில் மருத்துவத் தேர்வுக்காக (Medical Examinations) அதிகமாக ஓரிரு நாட்களும் இவர்கள் தங்கவேண்டிய நிலையும் உருவாகும். “ஸ்கிரீனிங் டெஸ்ட்” தேர்வில் தேவையான அளவு மதிப்பெண்களைப் பெறாதவர்கள் தேர்வு முடிவு தெரிந்த சிலமணி நேரங்களுக்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

முதல்நாள் தேர்வு

தேர்வு மையத்திற்குப் போட்டியாளர்கள் வந்தவுடன் முதல்நாளில் அவர்களை 8 முதல் 10 பேர்கொண்ட சிறு குழுக்களாக பிரிப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி எண்கள் வழங்கப்படும். இதனை ‘Chest Number’ என ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இந்த ‘Chest Number’ அணிந்துகொண்டுதான் தேர்வு மையத்தில் போட்டியாளர்கள் இருக்கவேண்டும்.

போட்டியாளர்களுக்கு எண்கள் வழங்கியபின்பு அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க ‘போர்டு கேள்வித்தாள்’ (Board Questionnaire) வழங்கப்படும். இதனை ‘தனிநபர் தகவல் கேள்வித்தாள்’ (Personal Information Questionnaire-PIQ) என்றும் அழைப்பார்கள்.

இந்தக் கேள்வித்தாளில் இடம்பெற்ற கேள்விகள் போட்டியாளர்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவியாக அமையும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் போட்டியாளர்கள் மதிப்பீடு (Evaluation) செய்யப்படுவதால், இக்கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் போட்டியாளர்கள் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தனிநபர் தகவல் கேள்விகள்

தனிநபர் தகவல் கேள்வித்தாளுக்குப் பதில் எழுதிய பின்னர், சர்வீசஸ் செலக்ஷன் போர்டு அமைப்பின் தலைவர் அல்லது அந்தத் தலைவரால் நியமிக்கப்பட்ட அதிகாரி அறிமுக உரை (Opening Address) வழங்குவார். இந்த அறிமுக உரையில் - தேர்வுகளின் விவரம், தங்குமிடம் பற்றிய தகவல், நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடுகள், போட்டியாளர்கள் செய்யவேண்டிய செயல்கள், தவிர்க்கவேண்டிய செயல்கள் மற்றும் ஒழுங்கு விதிமுறைகள் ஆகியவைகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெறும். 

தனிநபர் தகவல் கேள்வித்தாளில் (Personal Information Questionnaire) இடம்பெறும் சில முக்கிய கேள்விகள் போட்டியாளரின் பின்னணியை அறிந்துகொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக -  போட்டியாளரின் பெயர்,  போட்டியாளரின் எண், தந்தை பெயர், சொந்த ஊர் - மாவட்டம், மாநிலம் (மக்கள்தொகை விவரம்), தாய்மொழி, மதம், தந்தை உயிரோடு உள்ளாரா?, தந்தையின் கல்வித்தகுதி, வேலை மற்றும் சராசரி மாத வருமானம், தாய் உயிரோடு உள்ளாரா?, தாயின் கல்வித்தகுதி, வேலை மற்றும் சராசரி மாத வருமானம்,

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரம் - சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அவர்களின் வயது, கல்வித்தகுதிகள், மற்றும் வேலை விவரம், போட்டியாளரின் கல்வித்தகுதி (அ. கல்வி நிலையத்தின் பெயர், ஆ. கல்வி நிலைய விடுதியில் தங்கிய அனுபவம் உண்டா?, இ. தேர்வில் பெற்ற வெற்றி, ஈ. வெற்றி பெற்ற ஆண்டு, உ.பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகம், ஊ. படித்த மொழி (Medium of Instruction), எ. படிப்பில் சாதனை), விளையாட்டில் சாதனை, என்.சி.சி. (NCC) அனுபவம், இதர கல்வித்தகுதிகள், தற்போதைய பணி மற்றும் மாத வருமானம், பொறுப்பான பதவி வகித்த அனுபவம், பொழுதுபோக்கு மற்றும் ஆர்வம் போன்ற விரிவான தகவல்களைப் பெறும் விதத்தில் இந்தத் ‘தனிநபர் தகவல் கேள்வித்தாள்’ அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் போட்டியாளரின் பின்னணி (Background) மற்றும் சமூகச்சூழல்கள் (Social Environments) பற்றி மதிப்பீடு செய்வார்கள். போட்டியாளர் எந்த குடும்பச் சூழலில் வாழ்கிறார்? என்றும், நகரச் சூழலா? அல்லது கிராமச் சூழலா? எனவும், புரிந்துகொள்ள இயலும். தனிநபர் தகவல் கேள்வித்தாளின் மூலம், போட்டியாளர் படித்த பள்ளி, அந்தப் பள்ளியின் தன்மை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். இவை போட்டியாளரின் ஆளுமையை வெளிப்படுத்தும்.

இதர கல்வித்தகுதிகள், போட்டியாளரின் மனநிலை (Attitude), ஆர்வம் (Interest), குழு உணர்வு (Team Spirit), வளமான அறிவு (Resourcefulness) ஆகியவற்றை அறிந்துகொள்ள இது உதவும். போட்டியாளர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்திருந்தால், அதன்மூலம் போட்டியாளரின் தன்னலமற்ற தன்மை, இணைந்து பழகும் திறன் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

படிக்கும் காலத்தில் பள்ளி, கல்லூரிகள்மூலம் போட்டியாளர் ஏதேனும் பதவி வகித்திருந்தால், அதன்மூலம் தலைமைத்திறன் (Leadership Skill), முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill), அமைப்பை உருவாக்கி இயக்கும் திறன் (Organising Skill) ஆகியவற்றை மதிப்பீடு செய்ய முடியும். எனவே, தனிநபர் தகவல் கேள்வித்தாளை மிக அதிக கவனத்தோடு நிரப்புவது நல்லது. மேலும் சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விரிவாக பதில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக,

*Most interesting event in your life
*Most horrifying event in your life
*Most impressive event in your life
*Most exciting events in your life
*Whom do you like more father / mother and why?
*State what would you do in case you are not selected?
*Write down what your best friend would tell about you?
*What are your life’s ambition?
*Write down what your superior / senior tell about you?
*What are your good qualities?
*What are qualities, you will like to improve?
*What type of friends do you have?
*Have you tried to any other job earlier?
*What qualities you see in an individual for making friends?
*What are your achievements in school / college / job?
*Do you have female Friends?
*Who is your favorite Teacher? Why?
*Which Lecturer do you like? Why?
*Which is your favorite subject? Why?

- போன்ற கேள்விகளும் ஒருவரின் மனநிலையை (Attitude) அறிந்துகொள்ள உதவும் வகையில் தனிநபர் தகவல் கேள்விகள் (Personal Information Questionnaire) பகுதியில் இடம்பெறுகிறது. எனவே, இதுபோன்ற பல கேள்விகளுக்கு முன்கூட்டியே சரியான விடைகளை, சரியான நபர்களிடம் கலந்து ஆலோசித்து எழுதுவதற்கு முறையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

போட்டியாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் உண்மையானதாகவும், சரியானதாகவும், துல்லியமானதாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தவறான தகவல்கள் பணி வாய்ப்பை இழக்கச் செய்துவிடும்.

‘சாதாரண குடும்பத்தில் பிறந்துவிட்டோம். இந்தத் தகவல் நமது எதிர்காலத்தைப் பாதிக்குமா?’-என்ற எண்ணம் இருந்தால் போட்டியாளர்கள் இந்த எண்ணத்தைக் கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பணியில் சம வாய்ப்பை (Equal Opportunity) வழங்க நமது அரசியலமைப்பு வழிவகை செய்துள்ளது என்பதை நினைத்து, சரியான தகவல்களை வழங்கவேண்டும்.

பொழுதுபோக்குகள் (Hobbies), விளையாட்டுகள் (Games) பற்றி தகவல் தெரிவிக்கும்போது, அவற்றில் சிறந்தவற்றைப் பற்றிப் போட்டியாளர்கள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும், அந்தப் பொழுதுபோக்கு கள் மற்றும் விளையாட்டுகள் பற்றியும் அனைத்து விவரங்களை முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொள்வதும் அவசியத் தேவையாகும்.

முதல்நாளில் போட்டியாளர் பற்றிய விரிவான தகவல்களை சர்வீசஸ் செலக்ஷன் போர்டு அமைப்பு தெரிந்துகொண்டபின்பு இரண்டாம் நாளில் பலவிதமான தேர்வுகளை நடத்துகிறது. அந்தத் தேர்வுகள் என்னென்ன? என்பதைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

நெல்லை கவிநேசன்