ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு சி.ஆர்.பி.எஃப்-ல் டெக்னிக்கல் பிரிவில் வேலை!



வாய்ப்பு

2945 பேருக்கு வாய்ப்பு!


மத்திய ரிசர்வ் போலீஸ் படை சுருக்கமாக சி.ஆர்.பி.எஃப். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்தப் படைப்பிரிவில் பல்வேறு கான்ஸ்டபிள் பிரிவில் (டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன்) பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், Driver (DVR)/ Fitter/ Bugler/ Tailor/ Brass Band/ Pipe Band/ Cobbler/ Carpenter/ Gardner/ Painter/ Cook/ Water Carrier/ Washer/ Safai Karamchari/ Barber/ Hair Dresser போன்ற பணியிடங்களுக்கு  மொத்தம் 2945 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஆண் மற்றும் பெண் இருபாலரும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் இயக்குவதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். ஒருசில பணிகளுக்கு ஐ.டி.ஐ. முடித்திருப்பதோடு தேசிய அல்லது மாநிலத் தொழிற்கல்விக் கழகத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: வயது வரம்பைப் பொறுத்தவரை டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 1.1.2017 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1990 தேதிக்கு முன்னரோ, 2.1.1996-க்கு பின்னரோ பிறந்தவராக இருக்கக்கூடாது. மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 1.1.2017 தேதியில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2.1.1994 தேதிக்கு முன்னரோ, 2.1.1999-க்கு பின்னரோ பிறந்தவராக இருக்கக்கூடாது. அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.  

உடற்தகுதி: உடற்தகுதியைப் பொறுத்தவரை ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் மார்பளவு குறைந்தபட்சம் சாதாரண நிலையில் 80 செ.மீ. ஆகவும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. ஆகவும் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். ஆண்கள் பத்து நிமிடத்தில் 1.6 கி.மீ. தூர ஓட்டமும், பெண்கள் 12 நிமிடத்தில் 1.6 கி.மீ. தூர ஓட்டமும் ஓடும் உடல்திறன் பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம்&சிக்கிம், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம்& சண்டிகர், ஜம்மு & காஷ்மீர், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், அஸ்ஸாம், மேகாலயா, அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, கோவா.

விண்ணப்பக் கட்டணம்: இந்தப் பணியிடங்களில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.crpfindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.3.2017
எழுத்துத் தேர்வு நடைபெற உள்ள தேதி: 14.5.2017
மேலும் விரிவான விவரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தைப் பார்க்கலாம்.

- எம்.நாகமணி