நிலம் சம்பந்தப்பட்ட அரசுப் பணிகளில் சேரகம்பைண்ட் ஜியோ சயின்டிஸ்ட் & ஜியாலஜிஸ்ட் தேர்வு



உத்வேகத் தொடர் 22

வேலை வேண்டுமா?


உலகத்திலுள்ள ‘நில அமைப்பியல்’ பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள உதவும் படிப்பை ‘ஜியாலஜி’ (Geology) என ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இதனை ‘மண்ணியல்’ என்றும் தமிழில் குறிப்பிடுவார்கள்.

நிலம் எவ்வாறு அமைந்துள்ளது? நிலத்தின் வகைகள் என்னென்ன? நிலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மனித வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? எனப் பல்வேறு கோணங்களில் தெரிந்துகொள்ள ‘ஜியாலஜி’ எனப்படும் ‘மண்ணியல்’ படிப்பு
உதவுகிறது.  ‘ஜியாலஜி’ என்னும் படிப்பைச் சிறப்பாக முடித்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ‘மண்ணியல் அறிவியல் அறிஞர்’ எனப்படும் ‘ஜியாலஜிஸ்ட்’ பணி வழங்கப்படுகிறது.

 ‘ஜியாலஜிஸ்ட்’ எனப்படும் அறிவியல் அறிஞர்கள் மண்ணிலுள்ள திடப்பொருள்களையும் (Solid), திரவப் பொருள்களையும் (Liquid) விரிவாக ஆராய்ந்து, அவை உருவாகிய வரலாற்றையும், உலகில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். பொதுவாக  ‘ஜியோ சயின்டிஸ்ட்’ (Geo Scientist) என்பவர்களுக்கு முக்கியப் பணிகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் சில:

*பல்வேறு இடங்களுக்குச் சென்று மண் மாதிரிகளைச் சேகரித்தல், கணக்கெடுப்பு நடத்துதல், கள ஆய்வுக்கான திட்டமிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
*வான்வெளியிலிருந்து எடுத்த நில சம்பந்தப் பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நில அமைப்பை ஆய்வு செய்தல்.
*பல்வேறு வகையான நிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளைச் சோதனைக்கூடத்தில் ஆய்வு செய்தல்.
*நில வடிவமைப்பின் அடிப்படையில் நிலப்படங்கள் (Maps) மற்றும் புள்ளி விவர விளக்கப் படங்களை (Charts) உருவாக்குதல்
*அறிவியல் அறிக்கைகளை (Scientific Reports) தயாரித்தல்
*பல்வேறு அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த ஆய்வுகளையும், ஆய்வறிக்கைகளையும் மறுசீராய்வு (Review) செய்தல்.
இந்தப் பணிகள் தவிர, இன்னும் பலவிதப் பணிகளையும், தேவைக்கு ஏற்ப ‘ஜியாலஜிஸ்ட்’ பதவி வகிப்பவர்கள் அவ்வப்போது நிறைவேற்ற வேண்டிய நிலையும் உருவாகும்.

‘ஜியோ சயின்டிஸ்ட்’ (Geo Scientist) என்னும் பதவி எஞ்சினியரிங் ஜியாலஜிஸ்ட் (Engineering Geologists), ஜியாலஜிஸ்ட் (Geologists), ஜியோ-கெமிஸ்ட்ஸ் (Geochemists), ஜியோ-பிசிக்சிஸ்ட் (Geophysicists), ஓசோனகிராபர்ஸ் (Oceanograpers), பெட்ரோலியம் ஜியாலஜிஸ்ட் (Petroleum Geologists), லியன்டாலஜிஸ்ட்ஸ் (Paleontologists), சீஸ்மாலஜிஸ்ட்ஸ் (Seismologists) எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஜியோ சயின்டிஸ்ட் பதவியின் தேவை இந்தியாவில் வரும் 2024ஆம் ஆண்டிற்குள் 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் வாயுக்கள் பிரித்தெடுத்தல், எஞ்சினியரிங் சர்வீசஸ், கல்வித்துறை, மருத்துவமனை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள், மேலாண்மை ஆலோசனை மையங்கள், அறிவியல் ஆலோசனை மையங்கள், தொழில்நுட்ப ஆலோசனை மையங்கள் எனப் பல துறைகளில் ஜியாலஜி படிப்பை முடித்தவர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகளிலும் பல்வேறு உயர் பதவிகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசு ‘யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ (Union Public Service Commission) என்னும் அமைப்பின்மூலம் ‘கம்பைண்ட் ஜியோ-சயின்டிஸ்ட் அண்டு ஜியாலஜிஸ்ட் எக்சாமினேஷன்’ (Combined Geo-Scientist and Geologist Examination) என்னும் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு பற்றிய விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.

இந்தத் தேர்வுமூலம் வழங்கப்படும் பணிகள் ஆண்டுதோறும் மாறுபடும் தன்மை கொண்டவை. கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ‘கம்பைண்ட் ஜியோ-சயின்டிஸ்ட் அண்டு ஜியாலஜிஸ்ட் எக்சாமினேஷன்’ (Combined Geo-Scientist and Geologist Examination) என்னும் தேர்வில் இடம்பெற்ற பணிகள் விவரம்:பிரிவு - I (Category - I)    
(ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா மற்றும் சுரங்கத்துறை அமைச்சகத்திலுள்ள பணிகளுக்கு மட்டும்)

1)ஜியாலஜிட்ஸ்ட், குரூப் - A (Geologist, Group - A)
2)ஜியோ பிசிக்ஸிஸ்ட், குரூப் - A (Geophysicist, Group  A)
3)கெமிஸ்ட், குரூப் - A (Chemist, Group  A)

பிரிவு - II (Category - II)
(சென்ட்ரல் கிரவுண்ட் வாட்டர் போர்டு மற்றும் நீர்வளத்துறை அமைச்சகப் பணிகளுக்கு மட்டும்)

(1) ஜுனியர் ஹைட்ரோ ஜியாலஜிஸ்ட் (சயின்டிஸ்ட்- B) - குரூப்  A (Junior Hydrogeologists (Scientist  B), (Group  A)
இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப ஆண்டுதோறும் மாறும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘கம்பைண்ட் ஜியோ-சயின்டிஸ்ட் அண்டு ஜியாலஜிஸ்ட் எக்சாமினேஷன்’ (Combined  Geo-Scientist and Geologist Examination) பணியில் சேர விரும்புபவர்களுக்கான கல்வித்தகுதிகள் பற்றிய விவரங்களை அடுத்த இதழில் பார்ப்போம். 

தொடரும்

நெல்லை கவிநேசன்