திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு!



அறிவிப்பு

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (Ministry of Information and Broadcasting) கீழ் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்வி நிறுவனத்தில் (Film and Television Institute of India) செயல்பட்டுவருகிறது. இங்குத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி குறித்த படிப்புகளில் 2017 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்புகள்: இந்நிறுவனத்தில் திரைப்படப் பிரிவு (Film Wing), தொலைக்காட்சிப் பிரிவு (Television Wing) என்று இரண்டு முக்கியப் பிரிவுகள் உள்ளன. திரைப்படப் பிரிவில், முதுநிலைப் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளாக (P.G. Diploma and Certificate Courses in Film) மூன்றாண்டுக் கால அளவிலான இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் (Direction & Screenplay Writing), ஒளிப்பதிவு (Cinemotography), படத்தொகுப்பு (Editing), ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு (Sound Recording and Sound Design), கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு (Art Direction and Production Design) ஆகிய ஐந்து படிப்புகளும், இரண்டாண்டுக் கால அளவிலான நடிப்பு (Acting) படிப்பு ஒன்றும் இடம் பெற்றி ருக்கின்றன. இந்தப் படிப்புகள் ஒவ்வொன்றிலும் 10 இடங்கள் வீதம் மொத்தம் 60 இடங்கள் இருக்கின்றன. இது தவிர, ஒரு ஆண்டு கால அளவிலான கதைப்படத் திரைக்கதை எழுதுதல் (Feature Film Screenplay Writing) படிப்பில் 12 இடங்களும் இருக்கின்றன.

தொலைக்காட்சிப் பிரிவில், முதுநிலைச் சான்றிதழ் படிப்புகளாக (P.G. Certificate Course in Television) ஓராண்டுப் படிப்பு களாக இயக்கம் (Direction), மின்னணு ஒளிப்பதிவு (Electronic Cinematography), நிகழ்படத் தொகுப்பு (Video Editing), ஒலிப்பதிவு மற்றும் தொலைக்காட்சிப் பொறியியல் (Sound Recording and TV Engineering) எனும் நான்கு படிப்புகளும், ஒவ்வொரு படிப்பிலும் 10 இடங்கள் வீதம் மொத்தம் 40 இடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி: திரைப்படப் பிரிவில் இடம்பெற்றிருக்கும் ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு (Sound Recording and Sound Design) படிப்பிற்கு +2 படிப்பில் இயற்பியல் (Physics) பாடத்தை எடுத்துப் படித்து, ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு (Art Direction and Production Design) படிப்பிற்குப் பயனுறு கலை (Applied Arts), கட்டடக்கலை (Architecture), வண்ணம் தீட்டல் (Painting), சிற்பம் (Sculpture), உட்புற வடிவமைப்பு (Interior Design) அல்லது தொடர்புடைய களங்களில் பாடத்தில் நுண்கலைகள் போன்ற ஏதாவதொரு பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது இதற்கு இணையான பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற படிப்புகள் அனைத்திற்கும் ஏதாவதொரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தொலைக்காட்சிப் பிரிவில் தொலைக்காட்சிப் பொறியியல் (Sound Recording and TV Engineering) படிப்பிற்கு +2 படிப்பில் இயற்பியல் (Physics) பாடத்தை எடுத்துப் படித்து, ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற படிப்புகளுக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

விண்ணப்பம்: இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்நிறுவனத்தின் www.ftiindia.com இணையதளத்தில்
தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து User Name மற்றும் Password ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொண்டு, விண்ணப்பப் படிவம் நிரப்பப்படுவதற்கான வழிமுறைகளின்படி படிப்படியாக மேற்கொள்ள வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி.

பிரிவினர் ரூ.3500ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1000ம் விண்ணப்பக் கட்டணமாகப் பாரத பாட்டியாலா வங்கியில் செலுத்தும் வகையில், இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சில வழிமுறைகளில் ஏதாவதொன்றைப் பயன்படுத்திச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசிநாள்: 5.3.2017.

எழுத்துத் தேர்வு: மேற்காணும் படிப்பு களில் நடிப்பு தவிர்த்த, அனைத்துப் படிப்பு களுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மேற்காணும் இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை, தேர்வு நாளுக்கு முன்பாக வெளியிடப்படும். அனுமதி அட்டையினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியா முழுவதும் அகர்தலா, அகமதாபாத், அலகாபாத், பெங்களூரு, போபால், புபனேஸ்வர், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, புனே, ராய்ப்பூர், ராஞ்சி. லக்னோ, டெக்ராடூன், ஜெய்ப்பூர், இம்பால், ஜம்மு, காங்டாக் மற்றும் திருவனந்தபுரம் என மொத்தம் 24 மையங்களில் 26.3.2017 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் இணையதளத்தினைப் பார்வையிடலாம். தொலைபேசியில் 02025425656 எனும் நேரடி எண்ணிலோ அல்லது 25431817 / 223 எனும் எண்ணிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். மின்னஞ்சல் வழியில் தொடர்புகொள்ள academic sftii@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு பெறலாம்.

-  உ.தாமரைச்செல்வி