GPAT தேர்வுக்கு தயாராகுங்க!



மருந்தாளுநர்களின் பணி மகத்தானது. பல்வேறு தொற்றும் நோய்களும், புதிய புதிய தொற்றா நோய்களும் உருவாகி மக்களை மிரட்டிவரும் சூழலில், மருந்தை இனம் பிரித்து வழங்குதல் மற்றும் உற்பத்தி செய்தல் துறையில் மருந்தாளுநர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகி¢றது. இத்துறையில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது. மருந்தாளுநர் துறையில்  M. Pharm முதுகலைப் படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவில் GPAT எனப்படும் பட்டதாரி மருந்தாளுநர் நுண்ணறிவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இத்தேர்வு பற்றி விரிவான தகவல்களைத் தருகிறார் கல்வியாளரும், ‘ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி’ நிறுவனத்தின் இயக்குனநருமான ஆர்.ராஜராஜன். GPAT நுழைவுத்தேர்வை All India Council of Technical Education (AICTE)அமைப்பு நடத்துகிறது. 2010ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் இத்தேர்வில் முன்னிலை பெறும் மாணவர்கள் இந்தியா முழுதுமுள்ள பார்மஸி கல்லூரிகளில் M. Pharm எனப்படும் முதுநிலை மருந்தாளுநர் பட்டப் படிப்பில் சேரமுடியும். 2013 முதல் இந்தத் தேர்வு ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுகிறது.

யாரெல்லாம் இந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்கலாம்?


அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் B.Pharm எனப்படும் இளங்கலை மருந்தாளுநர் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். இந்தக் கல்வியாண்டில் B.Pharm இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வை எழுதலாம். பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ.1400 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 700 ரூபாய் கட்டினால் போதும்.
www.aictegpat.in/Home/Index_New.aspx என்ற இணையதளத்தில் நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். அல்லது மேற்கண்ட இணையதளத்தில் செலானை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். இந்த நுழைவுத்தேர்வு சென்னை, டெல்லி, ஐதராபாத், மதுரை, திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.

தேர்வு எந்த அடிப்படையில் நடக்கும்?

தேர்வுக்கான கால அவகாசம் 3 மணி நேரம். மொத்தம் 125 கேள்விகள் கேட்கப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இந்தக் கேள்விகள் அமையும். சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். பார்மகாலஜி பாடத்தில், பிசிகல் பார்மசி, டிஸ்பென்ஸிஸ் கம்யூனிட்டி பார்மசி, யூனிட் ஆபரேஷன் இன் மேனுஃபேக்சரிங், ஸ்டாக்கியோமெட்ரி, டோஸேஜ், பார்ம்ஸ், டிஸ்பென்சிஸ், எவாலுவேஷன், பயோ பார்மாசூட்டிக்ஸ், பார்மகோ கைனடிக்ஸ் போன்ற பிரிவுகள் பற்றிய கேள்விகள் கேட்கப்படும்.

பார்மசூட்டிக்கல்ஸ் கெமிஸ்ட்ரி பாடத்தில், மெடிசினல் கெமிஸ்ட்ரி, இயற்பியல், வேதியியல் மற்றும் இதய மருத்துவ இன்றியமையாமை, கரிம வேதியியல் மற்றும் இதன் மருத்துவ முக்கியத்துவம், உயிர் வேதியியல், மருத்துவ வேதியியலும் முக்கியத்துவமும், பார்மசூட்டிக்கல் திறனாய்வு போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முற்கால மருந்துகள் பற்றிய பாடங்களையும் படிக்க வேண்டும். B.Pharm பாடங்களின் அடிப்படையில்தான் கேள்விகள் அமையும்.

எந்தெந்த கல்லூரிகளில் சேரலாம்?

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்மசூட்டிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், ஐதராபாத்
ஜமீயா ஹாம்டார்டு பல்கலைக்கழகம், டெல்லி
டெல்லி இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்மசூட்டிகல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், டெல்லி
மணிப்பால் பார்மசூட்டிக்கல் கல்லூரி, கர்நாடகா,
ரிலிணிஷி பார்மசூட்டிக்கல் கல்லூரி, கர்நாடகா
வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை
ஆதிபராசக்தி கல்லூரி, மேல்மருவத்தூர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
சி.லி.பெய்ட் மேத்தா பார்மசி கல்லூரி, சென்னை
ராமகிருஷ்ணா பார்மசி நிறுவனம், கோயம்புத்தூர்
அன்னை ஜே.கே.கே. சம்பூர் பார்மசி கல்லூரி, நாமக்கல்
ஜே.எஸ்.எஸ்.கே. பார்மசி கல்லூரி, உதகமண்டலம்
கே.எம். பார்மசி கல்லூரி, மதுரை
அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரி, விருதுநகர்
ஜே.கே.நடராஜா பார்மசி கல்லூரி, நாமக்கல்
மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை
நந்தா பார்மசி கல்லூரி, ஈரோடு
பத்மாவதி பார்மசி கல்லூரி, தர்மபுரி
பெரியார் பெண்களுக்கான பார்மசி அறிவியல் கல்லூரி, திருச்சி
ரி.க்ஷி.ஷி. பார்மசூட்டிக்கல்ஸ் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
ஷி.ஸி.வி.பார்மசி கல்லூரி, காட்டாங் கொளத்தூர், சென்னை
ராமச்சந்திரா பார்மசி கல்லூரி, சென்னை

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

www.aictegpat.in/Home/Index_New.aspx  என்ற இணையதளத்தில் 12.1.2015க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2.2.2015 முதல் இதே இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 23.2.2015, 24.2.2015 ஆகிய நாட்களில் தேர்வு நடைபெறும். 27.3.2015 அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும்.

கூடுதல் விவரங்களுக்கு:

All India Council of Technical Education,
7th Floor, Chanderlok Building, Janpath,
New Delhi  110 001
Ph :0112372415157, 23724179

- வெ.நீலகண்டன்