இரண்டாண்டு படிப்பாகின்றன பி.எட்., எம்.எட்!



கல்வி வட்டாரத்தில் இது பெரிய மாறுதல். பி.எட்., எம்.எட்., உடற்கல்வி ஆசிரியர் படிப்புகள் இனி ஓராண்டு கிடையாது. 2 வருடப் படிப்புகளாக அவற்றை மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது என்.சி.டி.இ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில். இதே போல், ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.எல்.எட் (Diploma in Elementary Education) என நாடு முழுவதும் ஒரே பெயராக மாற்றம் செய்யவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஏன் இவ்வளவு பெரிய - திடீர் மாறுதல்? இதோ, அதன் பின்புலம்...

‘எதுக்கும் ஒரு பி.எட் போட்டு வையேன்’ என்கிற ரேஞ்சில் இங்கே ஆசிரியர் கல்வியின் தரம் குறைந்தது உலகம் அறிந்ததே. ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த கடந்த 2011ம் வருடம் உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்தது. ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி வர்மா தலைமையில் அமைந்த இந்தக் குழு பரிந்துரைத்தபடிதான் இந்த ஓராண்டு படிப்புகள் இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளன. 2015-16ம் கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரும். இதற்கான பாடத்திட்டங்களை தற்போது வகுத்து வருகிறது ஆசிரியர் கல்வி கவுன்ஸில்.

அதுமட்டுமல்ல... கவுன்ஸில் வெளியிட்டுள்ள புதிய நடைமுறைகளின்படி, பி.எட் கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் நிறுவனம், மொத்த மாக 2500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தையும், 1500 சதுர மீட்டர் பரப்பில் கட்டிட வசதியும் கொண்டிருக்க வேண்டும். இரண்டு கோர்ஸ்களையும் சேர்த்து கல்லூரி தொடங்குவதாக இருந்தால் 3 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் நிலமும் 2 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டிட வசதியும் இருக்க வேண்டுமாம். ஆண்டுக்கு 200 நாட்கள் கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். இன்னும் பள்ளியில் பயிற்சி எடுக்கும் காலம், எவ்வளவு ஆசிரியர்கள் தேவை? உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பட்டியல் போட்டுள்ளது என்.சி.டி.இ.

‘‘சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். அதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்தப் புதிய நடைமுறைகளை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்’’ என கேட்டுக்கொண்டுள்ளார் என்.சி.டி.இ-யின் தென்மண்டல இயக்குநர் ரேவதி ரெட்டி. ஆனால், இதற்கு நம் தமிழகத்திலிருந்தே வருத்தக் குரல்கள்தான் எழுந்திருக்கின்றன. ‘‘ஒரு வருடம் பி.எட்., அல்லது எம்.எட்., பயிலவே லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. தற்போது, பி.எட்., படிப்பிற்கு ஆறு தாள்கள் பாடங்களாகவும் 40 நாட்கள் பயிற்சி காலம் எனவும் வைத்துள்ளனர். இந்தக் காலத்தை வேண்டுமானால் மாற்றித் தரத்தை உயர்த்தலாம். அதைவிட்டு, இரண்டு வருடமாக உயர்த்தினால், நடுத்தர மற்றும் வசதியில்லாத மாணவ-மாணவிகள் படிக்க முடியாத சூழல் ஏற்படும்’’ என வருத்தம் பொங்க பேசுகின்றன சில பயிற்சி மையங்கள்!

- பேராச்சி கண்ணன்