+2 வணிகவியல் சென்டம் வாங்க டிப்ஸ்



‘‘+2 வணிகவியல் பாடம் என்பது கோட்பாடு சார்ந்த பாடம் என்றும் அதில் 200/200 பெறுவது கடினம் என்றும் பொதுவான ஒரு எண்ணம் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. உண்மையில் பாடத்தை தெளிவாக புரிந்துகொண்டு, திட்டமிட்டு படித்து தேர்வு எழுதினால் நிச்சயமாக அப்பாடத்தில் 200/200 மதிப்பெண் பெற முடியும்...’’ என்கிறார் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் V.எழிலன். அவர் தரும் ஆலோசனைகள்...

பாடங்களின் தலைப்புகளை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு புரிந்துகொண்டாலே முழுமையான ஒரு புரிதல் வந்து விடும். மலைப்பும், வெறுப்பும் அகன்றுவிடும்.

வினாத்தாள் வடிவமைப்பைப் பார்த்து, எந்தெந்த பாடத்திலிருந்து எவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதனடிப்படையில் படித்தால் எளிமையாக முழு மதிப்பெண் பெற முடியும். தேவையற்ற குழப்பமும் ஏற்படாது.

கடந்த ஆண்டுகளின் பொதுத்தேர்வு வினாத்தாளை வைத்துப் பயிற்சி செய்வது மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும், கேள்விகள் எவ்வாறு கேட்கப்படுமோ என்ற அச்சம் நீங்கி நம்பிக்கை ஏற்படும். அதேபோல் ஒரு மதிப்பெண் வினாக்கள் எவ்வாறு புத்தகத்தின் உள்ளேயிருந்து எடுக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

மொத்தம் 40 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். இதில் 20 வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த 20 வினாக்கள் ‘கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்க’ என்று கேட்கப்படும். இதில் 90% வினாக்கள் புத்தகத்தின் பின்னால் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களிலிருந்தும், 10% வினாக்கள் புத்தகத்தின் உள்ளேயிருந்தும் கேட்கப்படும். எனவே பாடத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு படித்தாலே இந்தப் பகுதியிலிருந்து முழு மதிப்பெண் பெற முடியும்.

15 நான்கு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். அதில் 10 வினாக்களுக்கு மட்டும் விடை எழுதினால் போதும். இதில் ஒவ்வொரு பாடத்தி லிருந்தும் 2 வினாக்கள் வீதமும், 2-வது பாடத்திலிருந்து (தனியாள் வணிகம்) 1 வினாவும் கேட்கப்படும். பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் வினாத்தொகுப்பில் உள்ள வினாக்களை முழுமையாகவும் கவனமாகவும் படித்தால் இந்தப் பகுதியில் முழு மதிப்பெண்களையும் அள்ளிவிடலாம்.

எட்டு மதிப்பெண் வினாக்கள் 8 கேட்கப்படும். இவற்றில் ஐந்துக்கு மட்டும் விடை எழுதினால் போதுமானது. இதில் இரண்டாம் பாடத்தை தவிர (தனியாள் வணிகம்) மீதமுள்ள பாடங்களில் இருந்து ஒவ்வொரு பாடத்திலிருந்து ஒரு வினா கேட்கப்படும். 4 ஆம் பாடத்தில் மட்டும் 2 வினாக்கள் (நிறுமங்கள் I) வரும். வினாத் தொகுப்பில் உள்ள வினாக்களை படித்தால் இக்கேள்விகளுக்கு எளிதாக விடை அளிக்க முடியும்.

20 மதிப்பெண் வினாக்கள் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஒரு வினா கேட்கப்படும். இவை அல்லது என்ற அடிப்படையில் கேட்கப்படும். அதனடிப்படையில் விடையளிக்க வேண்டும். முதல் மூன்று பாடங்களில் உள்ள வினாக்களைப் படித்தால் மூன்றிற்கு தெளிவாக விடைய ளித்துவிட முடியும். வினாத் தொகுப்பில் உள்ள வினாக்களைப் பயிற்சி செய்தால் மேலும் ஒரு கேள்விக்கு விடையளித்து முழு மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம்.

தேர்வுக்கு இன்னும் சிறிது காலமே உள்ளதால் படிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அதேபோல், படிப்பிற்கு தடையாக உங்களிடம் என்னென்ன செயல்பாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அவற்றை உடனடியாக களைய வேண்டும். எழும் சந்தேகங்களை உடனுக்குடன் உங்கள் ஆசிரியரிடம் கேட்டறிந்து  தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியம். முக்கியமான இடத்தில் அடிக்கோடிட்டும், வினா எண்களைச் சரியாகவும் எழுத வேண்டும். தேர்வு எழுதும்போதே ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்பதையும் அவ்வாறு நாம் விடையளித்து விட்டோமா என்பதையும் அவ்வப்பொழுது சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

வேறுபாடு சார்ந்த வினாக்களும் கேட்கப்படும். ஏனென்றால் வேறுபாடு சார்ந்த வினாக்களைப் படிப்பதும் எளிது. அதேபோல் விரைவாகவும் எழுதிவிடலாம். அவ்வாறு வேறுபாட்டு வினாக்களை எழுதும்பொழுது கட்டமிட்டு தெளிவாக எழுத வேண்டும்.

விடைகளை எழுதும்பொழுது பத்தி பத்தியாக எழுதாமல் தேவையான கருத்துகளை மட்டும் புரிந்துகொண்டு அவற்றை வரிசைப்படுத்தி எளிமையான முறையில் எழுதினாலே போதும்.

வணிகவியல் தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் அவசியமாகும். எனவே தேர்வு அறையில் உங்களது கவனம் முழுவதும் தேர்வு எழுதுவதிலேயே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியும். (அ) பகுதிக்கு விடையளிக்க 30 நிமிடமும், (ஆ) பகுதிக்கு விடையளிக்க 30 நிமிடமும், (இ) பகுதிக்கு விடையளிக்க 40 நிமிடமும், (ஈ) பகுதிக்கு விடையளிக்க 80 நிமிடமும் ஒதுக்கலாம்.

கையெழுத்து அழகாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். அதேபோல் எழுதுவதற்கு நீல மை பேனாவும், முக்கிய பகுதியை எழுதவும், அடிக்கோடிடவும் கறுப்பு மை பேனாவையும் பயன்படுத்த வேண்டும். முக்கியமாகப் பயம், பதற்றம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.