கணிதத்தில் சென்டம் வாங்குவதே பெரும்பாலான மாணவர்களின் இலக்கு. அதற்கான வழிகாட்டுதல்தான் இந்தப் பகுதி. கடந்த இரண்டு இதழ்களில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய பட்டுக்கோட்டையை அடுத்த அலிவலம், எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலைக் கணித ஆசிரியர் சி.மோகன், தொகுதி II பகுதியை மாணவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி இப்போது விரிவாக விளக்குகிறார்.
தொகுதி (Volume) II-ல் 166 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும். அவற்றைக் கையாள்வது பற்றிப் பார்க்கலாம். (வினாத் தொகுப்பில் 10 மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன)
அலகு-5: வகைநுண்கணிதம் I இந்த பகுதியில் இருந்து 4 ஒரு மதிப்பெண்கள், இரண்டு 6 மதிப்பெண் மற்றும் இரண்டு 10 மதிப்பெண்கள் என 36 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும். வகை நுண் கணிதத்தை நன்கு கையாளும் திறன் பெற்ற மாணவர்கள் மட்டுமே இப்பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். சராசரி மாணவர்கள், மாறுவீதம் சார்ந்த கணக்குகள் அதாவது கார், கப்பல், வாட்டர் டேங்க், கருங்கல் ஜல்லி, ஏணி போன்ற கணக்குகளையும் வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம் காணும் கணக்குகள், 8k2=1 என நிரூபிக்கும் கணக்கையும் நன்கு தயார் செய்துகொள்ளுங்கள். பெரும்பாலும் இப்பகுதியில் இருந்து ஒரு வினா வந்து விடுகிறது. பெரும, சிறும மதிப்புகள் அவற்றின் பயன்பாடுகள், குழிவு, குவிவு, வளைவு மாற்றுப் புள்ளிகள் காணும் பகுதியில் இருந்து ஒரு வினா கேட்கப்படுகிறது. 6 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்த வரையில் ஏறும், இறங்கும் இடைவெளிக் காணல், ரோலின் தேற்றம், லெக்ராஞ்சியின் இடைமதிப்பு தேற்றம் சார்ந்த கணக்குகள், Limits, மெக்லாரின் விரிவு போன்ற பயிற்சிகளை நன்கு தயார் செய்தால் கட்டாயம் ஒரு 6 மதிப்பெண் வினாவுக்கு விடையளிக்க முடியும்.
அலகு-6; வகைநுண்கணிதம் II இந்த அலகில் 1 மதிப்பெண் வினா இரண்டும், 6 மதிப்பெண் வினா ஒன்றும், 10 மதிப்பெண் வினா ஒன்றும் என 18 மதிப்பெண்கள் பெற முடியும். வளை வரை வரைதல் பகுதியில் y=x3, y=x3+1 மற்றும் y2=2x3 என்ற மூன்று வினாக்களையும் அதற்குரிய உபதலைப்புகளில் பதில்கள் ஒவ்வொன்றையும் நன்கு தயார் செய்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் படித்தால் தேர்வில் எளிமையாக விடையளிக்க முடியும். முடிந்தவரை பாடப்புத்தகத்தில் உள்ளதை உள்ளபடியே எழுதுதல் நன்று. வரைபடங்களை அழகாக வரையவும். யூலரின் தேற்றத்தை சரிபார்த்தல் கணக்குகளும் எளிமையாக இருக்கும். மற்றபடி இந்த பாடம் சிறியதாக இருப்பதால் பாடம் முழுவதையும் நன்கு தயார் செய்க. அதிலும் u=log(tan x+tan y+tan z மற்றும் u=(xy) (yz) (zx) கணக்குகள் இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் அதிக தடவை கேட்கப்பட்டிருக்கிறது.
அலகு-7: தொகைநுண்கணிதம் இந்த அலகில் 4 ஒரு மதிப்பெண் வினாக்கள், ஒரு 6 மதிப்பெண் வினா மற்றும் இரண்டு 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன. 6 மதிப்பெண் வினா பெரும்பாலும் பண்புகளைப் பயன்படுத்தி தொகை காணும் கணக்குகளை திரும்பத் திரும்ப கேட்கப்பட்டிருக்கிறது. எனவே அத்தகைய வினாக்களை தயார் செய்யவும். இப்பகுதியில் வரும் வினாக்களுக்கு விடையளிக்கும்போது அலகுகளை மறக்காமல் குறிப்பிடவும். படங்களை தெளிவாக வரைந்து x, y அச்சுகள், ஆதிப்புள்ளியை மறவாமல் குறிப்பிடவும்.
அலகு-8: வகைக்கெழு சமன்பாடுகள்இந்த அலகில் 4 ஒரு மதிப்பெண் வினா, ஒரு 6 மதிப்பெண் வினா, இரண்டு 10 மதிப்பெண் வினா என 30 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும். 6 மதிப்பெண் வினாக்களில் D2 கணக்குகளை நன்கு தயார் செய்யவும். சரியான முறையில் வினாவை அடையாளம் கண்டு விடையளிக்க வேண்டும். பயன்பாட்டுக் கணக்கிலிருந்து பெரும்பாலும் ஒரு 10 மதிப்பெண் வினா கேட்கப்படுகிறது. அதிலும் மக்கள்தொகை காணும் கணக்கு, ரேடியம், ரூ.1000க்கு வங்கி வட்டி வீதம் போன்ற கணக்குகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.
அலகு-9: தனிநிலைக்கணக்கியல்4 ஒரு மதிப்பெண் வினா, இரண்டு 6 மதிப்பெண் வினா மற்றும் ஒரு 10 மதிப்பெண் வினா என 26 மதிப்பெண்களுக்கான இந்த அலகில் இருந்து கேட்கப்படுகிறது. மெய் அட்டவணை கணக்குகள், சராசரி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். குலத்தின் நீக்கல் விதிகள், (cancellation laws), எதிர்மறை விதி (Inverse law) என்ற இரண்டு விதிகளும் மாறி மாறி தேர்வில் கேட்கப்படுகிறது. 10 மதிப்பெண் வினாவை பொறுத்தவரையில் கெய்லியின் அட்டவணையை பயன்படுத்தும் கணக்குகள், அதிலும் மட்டுக்களின் பெருக்கல் கணக்குகள், அணிப் பெருக்கல் (I,A,B,C,D,E) மற்றும் சார்புகளின் சேர்ப்பு {f1, f2, f3, f4 } கணக்குகளை ஒரு பகுதியாகவும் a*b= a+b+2, a+b+ab, a+bab, ab. 3 என வரும் கணக்குகள் ஒரு பகுதியாகவும், கலப்பெண்களை பயன்படுத்தும் கணக்குகளை ஒரு பகுதியாகவும் பிரித்து படித்து அந்த கணக்குகளின் சமனி உறுப்பு, எதிர்மறை உறுப்புகளை நினைவில் பதிய வைக்க வேண்டும். குலம், எபிலியன் குலத்தை நிரூபிக்க தேவையான உபதலைப்புகள் ஒவ்வொன்றையும் கருப்பு மையிட்ட பேனாவில் எழுதியோ அல்லது அடிக்கோடிட்டு காட்டியோ எழுதினால் எளிதில் மதிப்பெண்களை பெற முடியும்.
அலகு-10: நிகழ்தகவு இந்த அலகில் 4 ஒரு மதிப்பெண், இரண்டு 6 மதிப்பெண், ஒரு 10 மதிப்பெண் என 26 மதிப்பெண்களுக்குரிய வினாக்கள் வரும். சராசரி, பரவற்படி காணும் (mean, varience) கணக்குகளில் இருந்து பெரும்பாலும் ஒரு 6 மதிப்பெண் வினா கேட்க வாய்ப்பிருக்கிறது. ஈருறுப்பு பரவலில் உள்ள ஒரு ஜோடி பகடை உருட்டுதல், ஒரே சமயத்தில் 4 நாணயங்கள் சுண்டுதல் போன்ற வினாக்கள் அடிக்கடி கேட்கப்படுகிறது. பாய்ஸான் பரவல் மற்றும் கடைசி பயிற்சியான இயல்நிலைப் பரவல்களை நன்கு தயார் செய்தால் பெரும்பாலும் ஒரு 10 மதிப்பெண் வினாவிற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. சரியான திட்டமிடல், கடின உழைப்பு, ஆர்வம் இருந்தால் கணக்கில் சென்டம் பெறுவது எளிது. சென்டம் வாங்கியவர்கள் பட்டியலில் நீங்களும் இடம்பெற மனமார்ந்த வாழ்த்துகள்!