கேம்பஸ் நியூஸ்



எட்டாம் வகுப்பு முடித்தால் ஏ.சி. மெக்கானிக்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத கால குளிரூட்டி (ஏசி), குளிர்சாதனப் பெட்டி(ஃபிரிட்ஜ்) தொழில்நுட்பப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும் சென்னை தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்காக இந்த இலவசப் பயிற்சியை வழங்குகின்றன. இதில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பயிற்சிக்கு 50 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பயிற்சி வகுப்பு 2015 ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கி 2015 ஜூன் மாதம் வரை நடக்கும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையே வகுப்புகள் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சி.பி.டி.இ. வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 044 - 22358601.

வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்கலாம்!


வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம்.  கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறியவர்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக இந்த சிறப்புப் புதுப்பித்தல் சலுகையைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் 2015 மார்ச் 7ம் தேதிக்குள் http:tnvelaivaaippu.gov.in என்ற வலைத்தளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் பதிவஞ்சல் மூலமாகவும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

கல்வி உதவித்தொகை அதிகரிப்பு!


கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு உதவித்தொகைத் திட்டங்களை மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற யு.ஜி.சி. கூட்டத்தில் அனைத்து வகை கல்வி உதவித் தொகைகளையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற பிறகும் ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட்டுவரும் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, முழுநேர ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கான உதவித்தொகை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.38,800 என்ற அளவிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.46,500 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கான உதவித்தொகை மாதம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாதம் ரூ.15,000 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று முதுநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்பவர்களுக்கும் இதுவரை மாதம் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் 20 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகை இப்போது ரூ.3,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் அறிய காண்க: www.ugc.ac.in

டெல்லி ஐ.ஐ.டி.யில் எம்.பி.ஏ. படிக்க விருப்பமா?

டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் முழுநேர எம்.பி.ஏ. படிப்பில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: இளங்கலையில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக் கலை, ஃபார்மசி, பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். முதுகலையில் கணிதம், வேதியியல், இயற்பியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இறுதியாண்டு தேர்வெழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பவர்கள் சிகிஜி 2014 தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜனவரி 13.

கூடுதல் தகவல்களுக்கு காண்க: dms.iitd.ac.in

சிமேட் மாதிரி தேரவு

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) நடத்தும் சிமேட் நுழைவுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், ஆன்லைன் வழியாக நடத்தும் மாதிரி தேர்வில் பங்கேற்கலாம். உயர்கல்வியை மேற்கொள்வதற்காக சிமேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள சிமேட் இணையதளத்தில் வழங்கப்படும் மாதிரித் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு 2015 ஜனவரி மாதம் 8ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களின் நியமனத்திற்காக சி.டி.இ.டி. தேர்வு, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இத்தேர்வு பிப்ரவரி 22ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு இருநிலைகளில் நடத்தப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22ம் தேதி பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்குரிய தேர்வு காலை 9.30 மணியில் இருந்து 12 மணி வரையும் நடத்தப்பட உள்ளது. ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இரண்டிலும் ஆசிரியப் பணியாற்ற விரும்புவோர் இரு தேர்வுகளையும் எழுத வேண்டும்.

கல்வித் தகுதி: 5ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்ற விண்ணப்பிப்பவர்கள் 12ம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களும், தொடக்கக் கல்வியில் இரு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பும் முடித்திருக்க வேண்டும். 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இரு ஆண்டு தொடக்கக் கல்வி டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புடன் 50 சதவீத மதிப்பெண்களும் மற்றும் பி.எட். படிப்பும் தகுதியாகும். இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ளோருக்கு 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: முதல் தாள் மட்டும் எழுதும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600/- முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தாளையும் எழுதுபவர்களுக்கு ரூ.1000/- முதல் தாள் மட்டும் எழுதும் SC/ ST/ PH பிரிவினருக்கு ரூ.300, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தாளையும் எழுதுபவர்கள் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜனவரி 8, 2015.

வேளாண் மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ

ஐதராபாத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் மேனேஜ்மென்ட் என்ற உயர்கல்வி நிலையத்தில் வேளாண் மேலாண்மை முதுகலை டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

படிப்பின் பெயர்:Post Graduate Diploma in Managemeny Agriculture

கால அளவு: 2 ஆண்டுகள்

மொத்த இடங்கள்: 30

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 4 வருட பட்டப் படிப்பில் வேளாண் தொடர்பான படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கேட் 2014/ சிமேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.300/-இதனை மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.naam.ernet.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் படிவத்தை நிரப்பிய பின் அதனை நகல் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்திற்கான டிடி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜனவரி 15.


ஐதராபாத் பல்கலையில் எம்.சி.ஏ.

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் 2015-2016ம் கல்வியாண்டுக்கான எம்.சி.ஏ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் கணிதப் படிப்புடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இறுதியாண்டு இளங்கலை தேர்வெழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.350/-ம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.150/-ம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜனவரி 9 கடைசி நாள். ஜனவரி 28ம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுத்தேர்வு: பிப்ரவரி 14ம் தேதி நடைபெற உள்ளது.