மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு



இனி இல்லை ஆழ்துளைக் கிணறு மரணம்!

ஆழ்துளைக் கிணறு... குழந்தைகள் விழுந்துவிட்டதாகத் தலைப்புச் செய்தியாகும்போதுதான் இதைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். ‘வேலை முடிகிற வரை இதை மூடி வைக்க ஒரு வழி செய்யக் கூடாதா’ என எல்லோரும் பொதுவாகப் புலம்பி விட்டு மறந்துவிடுகிறோம். ஆனால், அப்படியொரு மூடியை நாம்தானே செய்ய வேண்டும் என்ற பொறுப்போடும் வேகத்தோடும் களமிறங்கியிருக்கிறார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் மாணவர்கள்.

‘‘பொதுவா ஆழ்துளைக் கிணறு தோண்டுறவங்கள்ல சிலர், வேலையை அடுத்த நாள் தொடரலாம்னு ராத்திரி அதை அப்படியே விட்டு வைப்பாங்க. பாதி தோண்டின கிணத்தை வெறும் சாக்குக்கோணி, பாண்டு மாதிரி கையில கிடைக்கிற பொருட்களை வச்சி மூடுறவங்களும் உண்டு, இதிலென்ன விழுந்துடப் போகுதுன்னு அசட்டையா விட்டுடுற பேர்வழிகளும் உண்டு. இந்த மாதிரி திறந்திருக்கிற அல்லது சரியா மூடாத ஆழ்துளைக் கிணறுகள்லதான் குழந்தைகள் விழுந்துடறாங்க!’’ என அக்கறையாகத் துவங்குகிறார் இறுதியாண்டு மாணவரான எம்.விக்னேஷ்.

இவருடன் எஸ்.முத்துராம், பி.முருகன், வேணுகோபாலன் ஆகிய மாணவர்கள் இணைந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கிறார்கள். அதுதான் முழுமை பெறாத ஆழ்துளைக் கிணற்றுக்கான லாக்கர் மூடி. முனைவர் என்.ரஜினி, முனைவர் என்.வி.நீலகண்டன் நம்பூதிரி மற்றும் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் ஆகியோரின் ஆலோசனைப்படியே இதனை வடிவமைத்திருக்கிறார்கள் இம்மாணவர்கள். ‘‘ஆழ்துளைக் கிணத்துக்குள்ள இந்தக் கருவி முக்கால்வாசி உள்ளே போயிடும். மேலே இருக்குற பிளேட் மட்டும் போகாது. பிளேட்டுக்கு மேலே இருக்குற கம்பியை கடிகார திசையில சுத்தினா லாக் ஆகிடும்.

லாக் ஆன பிறகு அந்தக் கம்பியைக் கழட்டி எடுத்துடலாம். அது கிட்டத்தட்ட ஒரு சாவி மாதிரி!’’ என இந்தக் கருவிக்கு செயல் விளக்கம் தருகிறார் முத்துராம்.
‘‘இதை லாக் பண்ணும்போது கிணத்துக்கு உள்பக்கமா ரெண்டு கூர்மையான கம்பிகள் பக்கவாட்டில் வெளியேறுது. அது கிணத்தோட சைடு மண்ணுக்குள்ள ஆழமா இறங்கி லாக் ஆகுது. இதனால இந்த மூடியை சாதாரணமா யாரும் அசைச்சு திறக்கவோ, பெயர்த்து எடுக்கவோ முடியவே முடியாது. சாவி இருந்தாத்தான் திறக்க முடியும்’’ என்கிறார் முருகன்.

‘‘இந்தக் கருவி மூலமா ஆழ்துளைக் கிணத்துல குழந்தைங்க விழுற ஆபத்தை முழுமையா தடுக்கலாம். இதோட அமைப்பு, பயன்கள், மாதிரி வடிவம், படம் எல்லாத்தையும் சென்னை வடிவமைப்பு காப்புரிமைக் கழகத்திற்கு பேடன்ட் வாங்க அனுப்பியிருக்கோம். ரொம்ப சிம்பிள் தொழில்நுட்பம்தான். ஆனா, இதுவரைக்கும் யாரும் இதைச் செய்யாம இருந்தது ஏன்னு தெரியல. முன்னாடியே செய்திருந்தா நிறைய உயிர்கள் போகாம தடுத்திருக்கலாம்!’’ என்கிறார் மாணவர் வேணுகோபாலன் ஆதங்கமாக!

- எம்.நாகமணி